சாதிவாரி கணக்கெடுப்புக் கோரி சீமான் நடத்தும் பேரணி.. அனுமதி தருவது குறித்து நீதிமன்றம் நாளை முடிவு..!
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி சீமான் தலைமையில் நடைபெறும் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்துக்கு அனுமதிக்கோரிய வழக்கில் நாளை உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் மார்ச் 16ம் தேதி நாம் தமிழர் கட்சி சார்பில், கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில், சாதிவாரிக் கணக்கெடுப்பும் சமூக நீதியும்... பஞ்சமர் நில மீட்பும்... என்ற பெயரில் பேரணி - பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டது.
பேரணி, பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கோரி திருப்போரூர் காவல் நிலையத்தில் விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால் கந்தசாமி கோவில் மாசி பிரம்மோற்சவ விழா, முகூர்த்த நாள் எனவும், கலந்து கொள்வோரின் எண்ணிக்கை தெரிவிக்கப்படவில்லை எனக் கூறி, பேரணி பொதுக்கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
அனுமதி மறுத்த காவல் துறை உத்தரவை ரத்து செய்து, பேரணி - பொதுக்கூட்டத்துக்கு அனுமதி வழங்க உத்தரவிடக் கோரி நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் சசிகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இதையும் படிங்க: சீமான் வீட்டு பணியாளர், பாதுகாவலருக்கு ஜாமீன்.. தினமும் காவல்நிலையத்தில் கையெழுத்திட உத்தரவு..!
இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.சங்கர், போக்குவரத்து நெரிசலை காரணம் காட்டி தங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் மற்ற அரசியல் கட்சிகளின் கூட்டம் அந்த இடத்தில் நடைபெறுவதாக கூறினார்.
மேலும், ஞாயிற்றுக் கிழமை மாலையில் தான் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளதால் எந்த போக்குவரத்து நெரிசலும் ஏற்படாது எனக்கூறினார். மேலும், அமைதியான முறையில் பேரணி நடத்தப்படும் எனவும் எந்த வித முழக்கங்களும் எழுப்பப்படாது என தெரிவித்தார்.
காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.கோபிநாத், கந்தசாமி கோவில் மாசி பிரம்மோற்சவ விழா காரணமாகவே அனுமதி மறுக்கப்பட்டதாகவும், பேரணி நடத்த எந்த கட்சிக்கும் அனுமதியில்லை என தெரவித்தார்.
இதனையடுத்து, இந்த வழக்கில் நாளை உத்தரவு பிறப்பிப்பதாக நீதிபதி கூறினார்.
இதையும் படிங்க: நாம் தமிழர் தம்பிக்கு அடிச்ச "ஜாக்பாட்"..! கடுப்பில் ஒரிஜினல் கட்சிக்காரர்கள்..!