×
 

பேரறிஞர் அண்ணா நினைவுநாள் - மலரஞ்சலி செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

பேரறிஞர் அண்ணாவின் 56-வது நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப்பேரணி நடத்தி மலரஞ்சலி செலுத்தினர். 

தமிழ்நாட்டின் தவிர்க்க முடியாத தலைவர்களுள் முக்கியமானவர் பேரறிஞர் அண்ணா. இந்தியாவின் அரசியல் வரலாற்றை மடைமாற்றம் செய்ததில் பேரறிஞர் அண்ணாவுக்கு முக்கிய பங்குண்டு. 1967-க்கு முன்புவரை இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் இந்தியாவுக்கு விடுதலை பெற்று தந்த காங்கிரஸ் தான் ஆட்சிக் கட்டிலில் இருந்தது. அதனை மாற்றி ஒரு மாநிலக்கட்சி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது தமிழ்நாட்டில் தான்.. அதுவும் பேரறிஞர் அண்ணா தலைமையிலான திமுக தான்..

ஒருநாளில் வந்துவிடவில்லை இந்த மாற்றம்.. சுதந்திரத்திற்கு முன்பாக தந்தை பெரியாருடன் இணைந்து திராவிடர் கழகத்தில் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டு சுயமரியாதை கருத்துகளை தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் பரப்பினார் பேரறிஞர் அண்ணா. ஆனால் சமூக மாற்றத்திற்கு ஆட்சி, அதிகாரம் வேண்டும் அதற்கு தேர்தல் அரசியல் தான் சரி என்று 1949-ல் திமுகவை தோற்றுவித்து 1957-ல் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார்.

அந்த தேர்தலில் 13 இடங்களில் திமுக வெற்றி பெற்றது. 1962-ல் நடைபெற்ற தேர்தலில் காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிட்ட பேரறிஞர் அண்ணா தோற்றபோதும் திமுக 50 இடங்களில் வென்று பிரதான எதிர்கட்சியானது. 1967-ல் தான் நாடே வியந்த மாற்றம் நிகழ்ந்தது. அந்த தேர்தலில் திமுக மட்டும் 137 இடங்களில் வெல்ல அதன் கூட்டணிக் கட்சிகளோடு சேர்த்து 179 இடங்களைக் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது. பேரறிஞர் அண்ணா சரித்திர நாயகன் ஆனார்.

இதையும் படிங்க: கடன் வாங்கினால் திருப்பிச் செலுத்த தேவையில்லை! கர்நாடக அரசின் அவசர சட்டம் சொல்வது என்ன..?

வெறும் 2 ஆண்டுகள் மட்டுமே ஆட்சிக்கட்டிலில் இருந்த அவர் வியத்தகு சாதனைகள் படைத்தார். நமது மாநிலத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டியதோடு பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தினார். அவர் போட்ட பாதையில் தான் அடுத்த 68 ஆண்டுகளாக திராவிட கட்சிகள் நடைபோட்டுக் கொண்டிருக்கிறன. அவர் மறைந்து 56 ஆண்டுகள் ஆனபோதும் பேரறிஞர் அண்ணா என்ற ஒற்றைச்சொல் போதும் ஆதிக்க சக்திகள் அலறுவதற்கு..

அவரது நினைவு நாளையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகில் இருந்து அண்ணா நினைவிடம் வரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைதிப்பேரணி நடைபெற்றது. அனைவரும் அண்ணா நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினர். தமிழ்நாடு முழுவதும் அண்ணா சிலைகளுக்கு இன்று மலர்மாலை சூட்டி மரியாதை செலுத்தப்பட்டது.

இதையும் படிங்க: இதுவரை 36 கோடி பேர்..!இன்று மட்டும் 60 லட்சம் பேர்..! கதி கலக்கும் கும்பமேளா வசந்த பஞ்சமி

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share