ஒருத்தனும் தப்பிக்க கூடாது..! இந்தியாவின் பதிலடி அப்படி இருக்கணும்..! ஆவேசமான மோடி..!
காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் காரணமாக நாட்டு மக்கள் அனைவரும் அதிர்ச்சியில் இருக்கும் சமயத்தில் பதிலடி எப்படி இருக்க வேண்டும் என பிரதமர் மோடி அவசர மீட்டிங் நடத்தி உள்ளார்.
சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி, 2 நாள் அரசு முறை பயணமாக சவுதி அரேபியாவுக்கு சென்றார். தனி விமானம் மூலம் நேற்று காலையில் புறப்பட்ட பிரதமர் மோடி சவுதி அரேபியாவில் சென்று இறங்கினார். முன்னதாக சவுதி அரேபியாவின் வான்பரப்பில் பிரதமர் மோடி பயணித்த விமானம் சென்றபோது, அந்நாட்டின் போர் விமானங்கள் பிரதமர் மோடி பயணித்த விமானத்தின் முன் மற்றும் பின் பகுதியில் வட்டமிட்டபடி பாதுகாப்பு மரியாதை செலுத்தின. சவுதி அரேபிய சென்ற பிரதமர் மோடிக்கு, 21 குண்டுகள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த வரவேற்பை பிரதமர் மோடியும் ஏற்று கொண்டார். இந்த நிலையில் தான் மோடியிடம் இந்த அதிர்ச்சிகர தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தலமான பைசரான் பள்ளத்தாக்கில் சுற்றுலா சென்றவர்கள் மீது, ராணுவ வீரர்களை போல சீருடை அணிந்து ஆயுதங்களுடன் வந்த பயங்கரவாதிகள் குறிவைத்து துப்பாக்கியால் சுட தொடங்கினர். இந்த தாக்குதலில் 2 வெளிநாட்டு பயணிகள் உட்பட 26 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர்.
பாகிஸ்தானை தளமாக கொண்ட பயங்கரவாத குழுவான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட், இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளதாக கூறப்படுகிறது. பிரதமர் மோடி சவுதி அரேபியா சென்றுள்ளதுடன், அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நேரத்தில் நடத்தப்பட்ட இந்த கொடூர தாக்குதல் நாட்டையே உலுக்கியது.
இதையும் படிங்க: வரும் 22, 23ம் தேதி.. சவுதி அரேபியா செல்கிறார் பிரதமர் மோடி..!
செய்தி குறித்து கேள்விபட்ட உடனே உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி, நிலவரங்களை கேட்டறிந்தார். மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அறிவுறுத்தினார். இதனை அடுத்து உள்துறை அமைச்சர் அமித்ஷா, காஷ்மீர் துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா, முதல்வர் உமர் அப்துல்லா, சிஆர்பிஎஃப் டிஜி, ஜம்மு காஷ்மீர் டிஜி, ராணுவ அதிகாரிகள் ஆகியோருடன் காணொளிக் காட்சி வாயிலாக அவசர ஆலோசனை நடத்தினார். பின்னர் இரவு 9 மணியளவில் விமானம் மூலம் ஜம்மு காஷ்மீர் புறப்பட்டுச் சென்றார் அமித்ஷா.
ஸ்ரீநகரில் உள்ள கவனர் மாளிகையில் கவர்னர், முதல்வர், அதிகாரிகள் உள்ளிட்டோருடன் அமித் ஷா விரிவான ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில், பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்கள் தப்ப முடியாது என பிரதமர் மோடி எச்சரித்துள்ளார். பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை கண்டிக்கிறேன். அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல். இந்த கொடூரமான செயலுக்குப் பின்னால் இருப்பவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவர். அவர்கள் தப்ப முடியாது. அவர்களின் தீய திட்டம் ஒருபோதும் வெற்றி பெறாது என பிரதமர் மோடி தெரிவித்தார். தனது சவுதி அரேபியா பயணத்தை உடனே முடித்துக் கொண்டு நேற்று இரவே புறப்பட்டு இன்று அதிகாலை டெல்லி வந்தார்.
இன்று காலை 6:40 மணிக்கு டில்லி ஏர்போர்ட் வந்தடைந்தார். தரையிறங்கியதும் ஏர்போர்ட்டிலேயே அவசர மீட்டிங்கை நடத்தினார். இதில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி மற்றும் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.அடுத்து என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுப்பது பற்றியும் முக்கிய ஆலோசனை மேற்கொண்டனர். தாக்குதலில் இறந்தவர்களின் சடலங்களை முறைப்படி குடும்பத்தினரிடம் ஒப்படைப்பதற்கான ஏற்பாட்டை வேகமாக மேற்கொள்ளவும் மோடி அறிவுறுத்தினார்.
தாக்குதல் நடத்திய ஒரு பயங்கரவாதி கூட தப்பிக்க முடியாது என்று ஏற்கனவே மோடி சூளுரைத்து இருந்தார். இதனால் அவர்களை வேட்டையாடுவதற்கான ஆப்ரேஷன் ஏற்கனவே துவங்கி விட்டது. டில்லி ஏர்போர்ட்டில் மோடி நடத்திய அவசர மீட்டிங்கில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கவில்லை. சம்பவம் நடந்ததுமே சவுதியில் இருந்து அவரிடம் மோடி போனில் பேசினார். உடனடியாக ஸ்பாட்டுக்கு சென்று தேவையான நடவடிக்கைகளை எடுக்க அமித்ஷாவுக்கு அவர் உத்தரவிட்டார்.இதனால் அமித்ஷா நேற்றே காஷ்மீர் புறப்பட்டு சென்றார். பயங்கரவாதிகளுக்கு எதிரான ஆப்ரேஷனை அவர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்.
இதையும் படிங்க: இளைஞர்களுக்கான கோடிக்கணக்கான வேலைவாய்ப்புகளை எப்படி உருவாக்கப் போகிறீர்கள்? பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி..!