×
 

எல்லையில் தினமும் துப்பாக்கிச்சூடு.. 4 வது நாளாக தொடரும் பதற்றம்.. இந்தியா பதிலடி தீவிரம்..!

காஷ்மீர் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் அபாயம் உருவாகி உள்ளது. எல்லையில் இருநாட்டு படைகளுக்கு மத்தியில் தினமும் துப்பாக்கிச்சூடு நிகழ்ந்து வருகிறது.

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பாவின் கிளையான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் என்ற அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உலக தலைவர்கள் உள்பட பலரும் தாக்குதல் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இதனை அடுத்து, பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது. பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் என முக்கிய பொறுப்பில் இருக்கும் தலைவர்கள் அடுத்தடுத்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் சர்வதேச அளவில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. 

பாகிஸ்தான் மீது குற்றம் சாட்டியுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். பஹல்காம் தாக்குதலின் பின்னணியில் காஷ்மீரின் நிலை குறித்து ஆய்வு செய்ய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி வெள்ளியன்று ஸ்ரீநகருக்கு சென்றார்.

பாதுகாப்பு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு பயங்கரவாதிகள் மீது பதிலடி தாக்குதல் நடத்த வியூகம் வகுக்கப்பட்டுள்ளது.  பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடந்த 48 மணி நேரத்திற்குள் ஏப்ரல் 24ம் தேதி ஐஎன்எஸ் சூரத் போர்க்கப்பலில் இருந்து இந்தியா ஏவுகணை சோதனை நடத்தியது. அரபிக் கடலில் இருந்த இலக்கை ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்தது. 

இதையும் படிங்க: 'துப்பாக்கியுடன் மிரட்டிய 15 வயது சிறுவர்கள்'.. உயிர் பிழைத்தவர் கண்ணீர் பேட்டி..!

பாகிஸ்தான் ராணுவத்தின் பல அதிகாரிகள் தங்கள் குடும்பங்களை தனியார் விமானங்களைப் பயன்படுத்தி இங்கிலாந்து மற்றும் நியூ ஜெர்சிக்கு அனுப்பியுள்ளனர். இந்தியா-பாகிஸ்தான் இடையில் நிலவும் பதற்றமான சூழலில் இந்தியா பதிலடியில் இறங்கினால் என்ன நடக்கும் என்பதை உணர்ந்து இவ்வாறு செய்துள்ளனர். இதற்கிடையில் இந்தியா உடனான ஷிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்த பாகிஸ்தான், அந்த ஒப்பந்த விதிகளை மீறி எல்லையில் தாக்க தொடங்கியது. 

போர் நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து 4வது நாளாக நள்ளிரவில், ஜம்மு காஷ்மீர் பகுதியில் உள்ள இந்திய நிலைகளின் மீது தாக்குதல் நடததியுள்ளது. குப்வாரா மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் உள்ள எல்லைப் பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டிற்கு, இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது. ஏற்கனவே, இரு நாடுகளிடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த அத்துமீறல் மேலும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

இதனிடையே, எல்லை தாண்டியதாக இந்திய பாதுகாப்பு படை வீரரை பாகிஸ்தான் ராணுவத்தினர் சிறைபிடித்துள்ளனர். அடுத்தடுத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையிலும், அவரை விடுவிக்க பாகிஸ்தான் மறுத்து வருகிறது. இதனால், இருநாடுகளிடையே போர் மூலம் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: காட்டுக்குள் ஒளிந்து தண்ணி காட்டிய ரவுடி.. சுட்டுப்பிடித்த போலீஸ்.. சினிமாவை மிஞ்சும் சேஸிங்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share