பென்சிலுக்காக இப்படியா? 8ம் வகுப்பு மாணவனுக்கு அரிவாள் வெட்டு.. பள்ளிக்குள் கொலைவெறி தாக்குதல்..!
நெல்லை பாளையங்கோட்டை அருகே, 8ம் வகுப்பு மாணவனை சக வகுப்பு மாணவனே அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகே தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 1000க்கும் அதிகமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு மகாவீரர் ஜெயந்தி, வார விடுமுறை மற்றும் தமிழ் புத்தாண்டு ஆகியவை காரணமாக கடந்த 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. விடுமுறை முடிந்து இன்று மாணவர்கள் வழக்கம் போல பள்ளிக்கு வந்தனர்.
காலை கூட்டு பிரார்த்தனை முடிந்த பிறகு மாணவர்கள் அவரவர் வகுப்பறையில் சென்று அமர்ந்தனர். அதில் 8ம் வகுப்பு மாணவர்கள் அமர்ந்திருந்த வகுப்பறையில் திடீர் சலசலப்பு கேட்டுள்ளது. ஆசிரியர் சேகரன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஓடிச் சென்று என்னவென்று பார்த்துள்ளார். அப்போது 8ம் வகுப்பு மாணவன் ஒருவன், சக வகுப்பு மாணவனை அரிவாளால் வெட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆசிரியர் சேகரன் ஓடிச்சென்று இரண்டு மாணவர்களையும் விலக்கி விட்டுள்ளார். அப்போதும் ஆத்திரம் தீராமல் ஆயுதத்துடன் இருந்த 8ம் வகுப்பு மாணவன், ஆசிரியர் சேகரனையும் அரிவாளால் வெட்டி உள்ளான். இதில் ஆசிரியர் மற்றும் மாணவன் படுகாயம் அடைந்தனர். வகுப்பறையில் ரத்தம் சொட்ட சொட்ட சரிந்தனர். வகுப்பறைக்குள் நடந்த இந்த சம்பவத்தால் சக மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிலர் அலறினர். இதனால் அந்த பகுதியே போர்க்களம் போல காட்சி அளித்தது.
இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது. மாணவர்களின் கூச்சல் மற்றும் அலறல் சப்தம் கேட்டு சம்பவம் நடந்த வகுப்பறைக்குள் வந்த தலைமை ஆசிரியர், சக ஆசிரியர்களின் உதவியோடு ஆசிரியர் சேகரனையும் காயம் பட்ட 8ம் வகுப்பு மாணவனையும் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதையும் படிங்க: அதிமுக முன்னாள் MLA கருப்புசாமி பாண்டியன் மறைவு !
படுகாயம் அடைந்த ஆசிரியர் சேகரன் மற்றும் மாணவனுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரிவாளால் வெட்டிய மாணவன் பின்னர், பாளையங்கேட்டை போலீசிடம் சரண் அடைந்தான். அவனை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி விசாரணை நடத்தினார். அப்போது போலீசர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சம்பவத்தில் ஈடுபட்ட மாணவருக்கும், வெட்டுப்பட்ட மாணவருக்கும் இடையே 4 நாட்கள் முன்பாக பென்சில் கொடுப்பது தொடர்பான பிரச்னை ஏற்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக இன்று பள்ளிக்கு அரிவாள் கொண்டு வந்த மாணவன், சக மாணவனை வெட்டியதாக கூறப்படுகிறது.
பள்ளியில் கடந்த வாரம் ஏற்பட்ட சிறு பென்சில் தகராறு காரணமாக, 5 நாட்கள் மனதில் பகையை வளர்த்து வந்தது மட்டும் அல்லாமல், 5 நாட்களுக்கு பிறகு பள்ளி மீண்டும் திறந்த இன்று, பகையை தீர்க்க ஸ்கூல் பேக்கில் அரிவாள் எடுத்து வந்ததும், சக மாணவன், ஆசிரியர் என்றும் பார்க்காமல் இருவரை 8ம் வகுப்பு மாணவனே வெட்டியதில் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பள்ளி மாணவர்களுக்கும் உருவெடுக்கும் இந்த மோதல் கலாச்சாரம் அவர்களின் எதிர்காலம் மட்டும் அல்லாமல் நாட்டின் எதிர்காலத்தையே சீரழிக்கும் என ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கையாலாகாத திமுக அரசால், இன்னும் எத்தனை உயிர்களைப் பலி கொடுக்கப் போகிறோம்? அண்ணாமலை கண்டனம்..!