×
 

பிரதமர் மோடி வருகை எதிரொலியா..? பாம்பன் பள்ளிவாசலின் மினாரா மூடப்பட்டதா..?

பாம்பன் பாலத்திற்கு அருகிலுள்ள பள்ளிவாசலின் மினாராவில் உள்ள எழுத்துக்கள் தார்ப்பாய் கொண்டு மறைக்கப்பட்டுள்ளது.

புதிய பாம்பன் ரயில்வே பாலம் திறப்பு நிகழ்வுக்கான பிரதமர் மோடியின் ராமேஸ்வரம் வருகையை முன்னிட்டு, பாம்பன் பாலத்திற்கு அருகிலுள்ள பள்ளிவாசலின் மினாராவில் உள்ள எழுத்துக்களை தார்ப்பாய் கொண்டு மறைத்திருப்பதாக எஸ்டிபிஐ கட்சி குற்றஞ்சாட்டி உள்ளது. 

இதுதொடர்பாக அக்கட்சி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

மதச்சார்பின்மையை அடிப்படையாகக் கொண்ட இந்திய அரசியலமைப்பிற்கு எதிரானது மட்டுமல்லாமல், முஸ்லிம் சமூகத்தின் மத உணர்வுகளை புண்படுத்தும் அநாகரிக செயலாகவும் உள்ளது. 

இதையும் படிங்க: ஆர்எஸ்எஸ் என்பது நவீன கால ‘பழமையான அழியாத ஆலமரம்’.. பிரதமர் மோடி புகழாரம்..!

சட்டம் மற்றும் ஒழுங்கு மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், இத்தகைய நிகழ்வு நடைபெற்றிருப்பது மாநில அரசின் மெத்தனப்போக்கையும், மத நல்லிணக்கத்தை பேணுவதில் உள்ள தோல்வியையும் வெளிப்படுத்துகிறது. வட மாநிலங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், தமிழகத்திலும் நடைபெறும் இதுபோன்ற நிகழ்வுகள் மேலும் கவலையளிக்கின்றன.  

வட மாநிலங்களில் சமீபத்தில் ஹோலி பண்டிகையின் போது பள்ளிவாசல்கள் தார்பாய்களால் மூடப்பட்டன. இத்தகைய பின்னணியில், தமிழகத்தில் இது போன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, வட மாநிலங்களின் மதவெறுப்பு நடவடிக்கைகள் தென்னிந்தியாவையும் தொற்றிக்கொள்ளத் தொடங்கிவிட்டதோ என்கிற அச்சத்தை ஏற்படுத்துகிறது.

நாட்டின் ஒருமைப்பாட்டையும், பன்முகத்தன்மையையும் ஏற்று பிரதமராக பதவியேற்ற ஒருவரின் வருகைக்காக மத அடையாளங்களை மறைப்பது, இந்தியாவின் மதச்சார்பின்மை கொள்கையை கேலிக்கூத்தாக்குவதோடு, அரசியலமைப்பு உத்தரவாதம் அளிக்கும் மத சுதந்திரத்திற்கு எதிரான துரோகமாகவும் அமைகிறது. இது வெறும் தனிப்பட்ட சம்பவமல்ல; மாறாக, முஸ்லிம் சமூகத்தின் அடையாளத்தை அழிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகவே கருதப்பட வேண்டும். இத்தகைய செயல்கள் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைப்பதோடு, சிறுபான்மை சமூகங்களிடையே அச்சத்தையும் அவநம்பிக்கையையும் விதைக்கின்றன. இதற்கு தமிழக அரசு ஒருபோதும் இடமளிக்கக் கூடாது.

எனவே, பள்ளிவாசலின் மினாராவை மறைத்த தார்ப்பாயை அகற்றி, மத சுதந்திரத்தை மதிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

இதையும் படிங்க: ‘எக்ஸ்’ தளத்தில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்களுக்கு எதிராக அவதூறு.. நோட்டீஸ் அனுப்பிய மத்திய அரசு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share