“அதெல்லாம் முடியாது... எங்களுக்கு இத மாத்தியே ஆகனும்” - அடம்பிடிக்கும் திமுகவினர்... அசைந்து கொடுப்பாரா உதயநிதி?
ரெட் ஜெயின்ட் நிறுவனமும் உதயநிதியின் கீழ் செயல்படக்கூடியது. இதனால் இந்த டைட்டிலை கண்டிப்பாக படக்குழு திரும்ப பெறும் என்ற நம்பிக்கை இருப்பதாக கூறப்படுகிறது.
கலைஞர் கருணாநிதி வசனத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் உருவான பராசக்தி திரைப்படத்தின் தலைப்பை, தற்போது சிவகார்த்திகேயனின் 25-வது படத்திற்கு வைத்துள்ளதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. தயவுசெய்து படத்திற்கு வேறு டைட்டில் வையுங்கள் பராசக்தி என்றால், அது கலைஞரின் பராசக்தியாகத்தான் இருக்க வேண்டும் என்று சோசியல் மீடியாவில் பலரும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். “அம்பாள் என்றைக்கடா பேசினாள்.. அறிவு கெட்டவனே...” என்ற ஒற்றை வசனம் தமிழ் சினிமாவையே புரட்டிப் போட்டது பகுத்தறிவு, சமூக நீதி, சமத்துவம் என திராவிட அரசியலை பேசிய இந்த படத்தில் தனது வசனத்தின் மூலம் பட்டை தீட்டி இருப்பார் கலைஞர் கருணாநிதி.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் நேஷனல் பிக்சர்ஸ் பிஏ பெருமாள் முதலியார் தயாரிப்பில் கடந்த 1952 ஆம் ஆண்டு வெளியான பராசக்தி திரைப்படம் பேசிய அரசியல் அன்றைய ஆட்சியாளர்களுக்கு மட்டுமல்ல இன்றைய ஆட்சியாளர்களுக்கும் பாடமாகவே இருக்கிறது. 72 ஆண்டுகளை கடந்தாலும் இன்றும் அரசியல் கெத்துடன் இருக்கும் பராசக்தி திரைப்படம் மீண்டும் பேசுபொருளாகி இருக்கிறது. ஆனால் இப்போது அரசியல் களத்தில் இல்லை, சினிமா களத்தில், ஆம் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் 25-வது படத்திற்கு பராசக்தி என்று பெயரிடப்பட்டுள்ளதாக படக்குழு நேற்று அறிவித்தது.
இதையும் படிங்க: சக்தி திருமகனமாக மாறிய விஜய் ஆண்டனி... சிவகார்த்திகேயனுக்காக பராசக்தியை விட்டுக் கொடுத்தாரா?
ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்க ரெட் ஜெயின் மூவிஸும் படத்தில் இணைந்திருக்கிறது. இந்த சூழலில்தான் கலைஞர் வசனத்தில் உருவாகி சமூகப் புரட்சி செய்த பராசக்தி என்ற டைட்டிலை சிவகார்த்திகேயன் 25 படக்குழு கைவிட வேண்டும் என்றும், வேறு எந்த பெயர் வேண்டும் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளட்டும் ஆனால் இந்த டைட்டிலே வைக்க வேண்டாம் என்றும் சோசியல் மீடியாவில் பலரும் போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.
கலைஞர் வசனத்தில் உருவான பராசக்தி படம் எடுக்கப்பட்ட ஸ்டுடியோவான ஏவிஎம் நிறுவனம் சிவகார்த்திகேயன் படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்து இருந்தாலும், திமுகவினர், சினிமா ரசிகர்கள், அகில உலக சிவாஜி ரசிகர் பேரவை, சிவாஜி குடும்பத்தார் உள்ளிட்டோர் பராசக்தி என்ற டைட்டிலை திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். தர்மபுரி முன்னாள் எம்பி செந்தில்குமார் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் சிவாஜி குடும்பத்தாரும் கலைஞர் குடும்பத்தாரும் தமிழ் திரையுலகின் அழியா காவியப் படைப்பு ஒரே ஒரு பராசக்தி மட்டும்தான் இருக்க முடியும் என்பதனை உறுதி செய்ய வேண்டும்,
அதுதான் மாபெரும் இரு ஆளுமைகள் நடிகர் சிவாஜி கணேசன் மற்றும் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு நாம் செலுத்தும் மரியாதை என்று கூறியிருக்கிறார். டான் பிக்சர்ஸ் நிறுவனர் ஆகாஷ் பாஸ்கரன் திமுகவிற்கு நெருக்கமானவர் மறுபுறம் ரெட் ஜெயின்ட்ஸ் நிறுவனமும் உதயநிதியின் கீழ் செயல்படக்கூடியது. இதனால் இந்த டைட்டிலை கண்டிப்பாக படக்குழு திரும்ப பெறும் என்ற நம்பிக்கை இருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சென்னைவாசிகளே துவங்கியது பலூன் திருவிழா..வானில் கண்கவர்காட்சி ..!