நாடாளுமன்றம் நாளை கூடுகிறது: மும்மொழி, ட்ரம்ப் வரி உள்ளிட்ட விவகாரங்களை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு நாளை கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் மும்மொழிக் கொள்கை, ட்ரம்ப் வரிவிதிப்பு, வாக்காளர் அட்டை விவகாரம், மக்களவை தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை கிளப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு நாளை கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் மும்மொழிக் கொள்கை, ட்ரம்ப் வரிவிதிப்பு, வாக்காளர் அட்டை விவகாரம், மக்களவை தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை கிளப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. ஆனால் மத்திய அரசு , இந்தக் கூட்டத்தொடரில் வக்பு வாரிய திருத்த மசோதாவை இரு அவைகளிலும் நிறைவேற்ற முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றக் கூட்டுக்குழு தனது அறிக்கையை கடந்த முதல் கூட்டத்தொடர் அமர்வின் கடைசிநாளில் தாக்கல் செய்தன. ஆனால், எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்ததால் விவாதிக்காமல் அவை ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், இந்த 2வது அமர்வில் வக்பு வாரிய திருத்த மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வரும் ஏப்ரல் 2ம் தேதி முதல் பரஸ்பர வரி முறையை அறிமுகம் செய்ய இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இந்த வரிக்குறைப்புக்கு இந்தியா சம்மதம் தெரிவித்ததாகவும் அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார். இந்த விவகாரத்தை எழுப்பி மத்திய அரசிடம் விளக்கம் கேட்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
இதையும் படிங்க: ஆங்கிலம் கற்றதால் தான் பெரிய நிறுவனங்களில் தமிழர்கள் உள்ளனர்..இந்தியை கற்பதால் என்ன பயன்?.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி..
எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருவொருக்கொருவர் ஒத்துழைத்து அவையில் இருந்து, ஒவ்வொரு கட்சியும் எழுப்பும் விவகாரத்துக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதாகவும் முடிந்தஅளவு கூட்டத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பிட்ட விவகாரங்களை விவாதிப்பது, கேள்வி நேரத்துக்கு பிந்தைய நேரத்தில் விவாதிப்பது, கவனஈர்ப்புத் தீர்மானம் ஆகியவற்றைக் கொண்டு விவாதிப்பது ஆகியவற்றை செயல்படுத்தவும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
வாக்காளர்களுக்கு டூப்ளிகேட்(போலி) அடையாள அட்டை வழங்கும் தேர்தல் ஆணையத்தின் முடிவையும், விளக்கத்தையும் ஏற்க எதிர்க்கட்சிகள் தயாராக இல்லை. இந்த முறையை நீக்க தேர்தல் ஆணையம் சம்மதிக்கும் வரை நாடாளுமன்றத்தில் பிரச்சினையை கிளப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. குறிப்பாக திரிணமூல் காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இந்த விவகாரத்தை கடுமையாக நாடாளுமன்றத்தில் எழுப்பும் எனத் தெரிகிறது.
எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் கூட்டாகவும், தனித்தனியாகவும் கேள்விகளையும், பேச வேண்டிய விவகாரங்கள் குறித்த விவரங்களை மக்களவை, மாநிலங்களவைக்கு தனித்தனியாக நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். மக்களவை தேர்தல் மறுசீரமைப்பு மற்றும் மும்மொழிக் கொள்கை விவகாரத்தையும் நாடாளுமன்றத்தில் திமுகவுடன் சேர்ந்து எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. திமுகவுடன் கைகோர்த்து காங்கிரஸ் கட்சியும் கடுமையாக எதிர்க்கும் எனத் தெரிகிறது.
மக்கள் தொகை கட்டுப்படுத்தும் முயற்சியை சிறப்பாக செய்த மாநிலங்களுக்கு தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையில் இழைக்கப்படும் அநீதிகள் குறித்தும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குரல் கொடுப்பார்கள் எனத் தெரிகிறது. இந்த 2வது அமர்வில் பாஜக தலைமையிலான மத்திய அ ரசையும், மத்திய அமைச்சர்களையும் கடும் நெருக்கடிக்கு உள்ளாக்க எதிர்க்கட்சிகள் வியூகங்களை வகுத்துள்ளன. உள்துறை, கல்வி, ரெயில்வே, சுகாதாரம் மற்றும் குடும்பநலம், உள்ளிட்ட அமைச்சக விவகாரங்கள் மீது விவாதங்கள் நடத்தப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: மாநகரப் பேருந்துகளில் தமிழுக்கு இடமில்லையா?.. அன்புமணி கண்டனம்