தீ விபத்தில் சிக்கிய மகன்.. பதறிப்போன பவன் கல்யாண்.. சிங்கப்பூர் விரையும் துணை முதல்வர்..!
ஆந்திரா துணை முதலமைச்சர் பவன் கல்யாணின் மகன் சிங்கப்பூரில் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து பவன் கல்யாண் சிங்கப்பூர் செல்ல உள்ளார்.
ஆந்திராவில் முன்னணி நடிகராக விளங்கியவர் பவன் கல்யாண். கடந்த 2014ம் ஆண்டு ஜனசேனா என்ற கட்சியை துவங்கினார். கடந்த 10 ஆண்டுகளாக களப்பணி செய்தார். சமீபத்தில் நடந்த ஆந்திர சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம், பாஜ கட்சி கூட்டணியில் போட்டியிட்டு தேர்தலை சந்தித்தார். இந்த தேர்தலில் தெலுங்கு தேசம் கூட்டணி மிக பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. அங்குள்ள 175 சீட்களில் 135இல் வென்று சந்திரபாபு நாயுடு ஆட்சியைப் பிடித்தார்.
நடிகரான பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி 21 இடங்களில் வென்று இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது. ஆளும் கட்சியாக இருந்த ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 3ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டது. தற்போது ஆந்திராவின் துணை முதல்வராக பதவி வகித்து வருகிறார். ஆந்திர அரசியலில் பவன் கல்யாண் செய்தது மிகப் பெரிய சாதனையாகவே பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் பவன் கல்யாணின் திருமண வாழ்க்கை குறித்தும் சர்ச்சை எழுந்தது. பவன் கல்யாண் முதலில் 19 வயதான நந்தினி என்ற பெண்ணை 1997இல் திருமணம் செய்து கொண்டிருந்தார். 2007இல் அவரிடம் விவாகரத்து பெற்ற பவன் கல்யாண் 2009இல் நடிகை ரேனு தேசாயை திருமணம் செய்தார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இருப்பினும், அவர்கள் திருமணமும் 2012இல் முடிவுக்கு வரவே லெஷ்னேவாவை 2013இல் திருமணம் செய்தார். 3வது மனைவியான அன்னா லெஷ்னேவா ஒரு ரஷ்ய மாடல். இந்த தம்பதியருக்கு மார்க் ஷங்கர் பவானோவிச் என்ற மகன் உள்ளார். அதேபோல லெஷ்னேவாவுக்கு தனது முதல் திருமணத்திலிருந்து போலேனா அஞ்சனா பவனோவா என்ற மகள் உள்ளார்.
இதையும் படிங்க: குவியலாய் ஆவணங்கள்… 2-வது நாளாக தொடரும் ED ரெய்டு..! கே.என்.நேருவின் 12 ஆண்டுக்கு முந்தைய பின்னணி.!
மனைவி அன்னா லெஷ்னேவா சிங்கப்பூரில் ஹோட்டல் பிசினஸ் செய்து வருகிறார். 8 வயதான மார்க் ஷங்கர் அவருடன் தங்கி சிங்கப்பூரில் உள்ள பள்ளியில் படித்து வருகிறான். இந்த நிலையில் நேற்று பள்ளிக்கு சென்ற மார்க் ஷங்கர், பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி காயம் அடைந்தான். மார்க் ஷங்கர் கை மற்றும் காலில் தீக்காயம் ஏற்பட்டது.
கரும் புகையை அதிகளவில் சுவாசித்ததால் அவனது நுரையீரலும் பாதிக்கப்பட்டது. பள்ளி நிர்வாகத்தினர் அவனை உடனடியாக மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்த தகவல் பவன் கல்யாணுக்கு கிடைத்தது. ஆனால், அல்லூரி சீதாராமராஜு மாவட்டத்தில் சுற்றுப்பயணத்தில் இருக்கும் பவன்கல்யாண், சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு சிங்கப்பூர் விரைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜனசேனா கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; துணை முதல்வர் பவன் கல்யாணின் இளைய மகன் மார்க் சங்கர் சிங்கப்பூரில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கினார். மார்க் சங்கர் படித்து வந்த பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அவரது கை, கால்களில் காயம் ஏற்பட்டது. அதேபோல், அவர் நுரையீரலுக்குள் புகை புகுந்ததால் அவதிப்பட்டார்.
மார்க் சங்கர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தற்போது அல்லூரி சீதாராம் ராஜு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் அவரது மகன் தீ விபத்தில் சிக்கி உள்ள நிலையில் நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு சிங்கப்பூர் செல்லுமாறு கட்சித் தலைவர்கள் அவரை அறிவுறுத்தியுள்ளனர்.
ஆனால் வாக்குறுதி அளித்தப்படி பழங்குடியினருடன் செல்வதாக பவன் கல்யாண் கூறினார். இதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதால் இன்று தொடங்க இருந்த வளர்ச்சி திட்டங்களை முடித்துவிட்டு, மன்யத்தில் சுற்றுப்பயணத்தை முடித்த பிறகு பவன் கல்யாண் விசாகப்பட்டினத்தை வர உள்ளார்.
அங்கிருந்து சிங்கப்பூர் செல்வதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்துள்ளனர். பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் பவன் கல்யாண் மகன் காயமடைந்துள்ளது சம்பவம் அவரது கட்சி தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: “எனக்கில்ல... எனக்கில்ல” ... பிரதமர் விசிட் முடிந்த கையோடு புலம்பலை ஆரம்பித்த விஜயதாரணி...!