காங். குரல் டெல்லியில் எதிரொலிக்கணும்..! பிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம்.. செல்வபெருந்தகை தடாலடி..!
பிரதமர் மோடிக்கு எதிராக தமிழகம் முழுவதும் ஏப்ரல் 6ஆம் தேதி (நாளை) காங்கிரஸ் கட்சி சார்பில் கருப்பு கொடி போராட்டம் நடத்தப்படும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒன்றிய பாஜக அரசு பிரதமர் மோடி தலைமையில் கடந்த 11 ஆண்டுகளாக ஹிந்துத்துவா கொள்கையை பரப்பும் நோக்கத்தில் மக்களை மதரீதியாக பிளவுப்படுத்தி செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டினார். இந்திய அரசின் திட்டங்கள் அனைத்துமே தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழகத்தின் நலன்களுக்கு விரோதமாகவே திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே ஆட்சி மொழி, ஒரே நுழைவுத் தேர்வு என்று ஒன்றியத்தில் ஒற்றை ஆட்சியாக நடத்தி அதிகார குவியலோடு, சர்வாதிகார பாசிச ஆட்சியை பிரதமர் மோடி நடத்தி வருவதாகவும் குற்றம் சாட்டினார்.
அனைத்து அரசமைப்புகளை தனது கை பாப்பையாக பிரதமர் மாற்றி செயல்படுத்துவதாகவும் அவரது செயல்பாடுகளை உச்சநீதிமன்றத்தாலும் தடுக்க இயலவில்லை என்றும் தெரிவித்துள்ளார். ஹைட்ரோ கார்பன் திட்டம், டங்ஸ்டன் சுரங்கத் திட்டம், ஸ்டெர்லைட் ஆலை மூலம் தாமிர உற்பத்திக்கு ஆதரவு, நியூட்ரினோ ஆய்வகம், பாதுகாக்கப்பட்ட மன்னார் வளைகுடா பகுதியில் ஆழ்கடல் எண்ணெய்க் கிணறுகள், கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவ படிப்பை பாழாக்கும் வகையில் நீட் நுழைவு தேர்வு திணிப்பு, இந்தி திணிப்பு, தொகுதி சீரமைப்பு, சுங்கக் கட்டணம் உயர்வு என்று தொடர்ந்து தமிழக விரோத திட்டங்களை ஒன்றிய அரசு நிறைவேற்றி வருவதாக குற்றம்சாட்டினார்.
இதையும் படிங்க: இந்தியப் பொருட்களுக்கு வரி விதித்த ட்ரம்ப்.. மெளன விரதத்தில் மோடி.. வெளுத்து வாங்கும் எதிர்க்கட்சி.!!
மும்மொழித் திட்டத்தை ஏற்கவில்லை என்பதால் சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தில் தமிழகத்திற்கு ஒன்றிய அரசு தர வேண்டிய ரூபாய் 2,162 கோடியை தர மறுப்பு, பி.எம்.ஸ்ரீ பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்ட சுமார் 5000 கோடி ரூபாய் இழப்பு, அந்த நிதியை வேறு மாநிலங்களுக்கு மடை மாற்றம் செய்தல், சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகளுக்கு தர வேண்டிய 50 சதவிகித நிதியை வழங்க மறுப்பு, வெள்ளம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு நிவாரணப் பணிகளுக்காக ஒன்றிய அரசின் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வெறும் 276 கோடி மட்டுமே வழங்குவது என தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறது என கூறியுள்ளார்.
வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை ஒன்றிய பா.ஜ.க. அரசு தனது மிருகபல மெஜாரிட்டியால் நிறைவேற்றி இருப்பதாகவும், இது சிறுபான்மையின மக்களுக்கு எதிராக விடுக்கப்பட்ட கொடூரமான அடக்குமுறை என்றும் பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். எனவே, பிரதமர் மோடி அரசின் 11 ஆண்டுகால தமிழக விரோத போக்கை கண்டிக்கும் வகையில், ஏப்ரல் 6 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு எதிராக அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளும் கருப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
மேலும், சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே தனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கழுகாக நினைத்து காக்காவாகும் காங்கிரஸ்... பாஜக-வை வீழ்த்த மோடியின் பாதை... ராகுலின் புது ரூட்..!