×
 

மீண்டும் நிர்பயா! புனே பேருந்தில் பெண் பலாத்கார வழக்கு.. 75 மணி நேரத்தில் குற்றவாளி கைதானது எப்படி..?

புனே நகரின் ஸ்வர்கேட் பேருந்து நிலையத்தில் பேருந்தில் இருந்த 26 வயது பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 75 மணி நேரத்தில் குற்றவாளியை போலீஸார் கைது செய்துள்ளனர்.

டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் கூட்டுப்பலாத்காரம் செய்யப்பட்ட நிகழ்வு நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாகிய நிலையில், புனே சம்பவமும் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. ஆனால், போலீஸார் விரைந்து செயல்பட்டு குற்றவாளி தத்தாத்ரேய கடேவை கைது செய்தனர். பலாத்காரத்தில் ஈடுபட்டு போலீஸார் கண்ணில் மண்ணைத் தூவி, அடையாளங்களை மறைத்து சுற்றித்திரிந்த தத்தாத்ரேயா கடாவை புனேயின் சிரூர் பகுதியில் போலீஸார் கைது செய்தனர்.

புனேயில் உள்ள எஸ்டி பேருந்து நிலையத்தில் கடந்த 25ம் தேதி அதிகாலையில் பேருந்தில் அமர்ந்திருந்த 26வயது பெண்ணை தத்தாரேயா(37) பாலியல் பலாத்காரம் செய்து தப்பினார். இவர் மீது ஏற்கெனவே 6 திருட்டு வழக்குகளும், செயின் பறிப்பு வழக்குகளும் நிலுவையில் உள்ளன, கடந்த 2019ம் ஆண்டிலிருந்து இந்த வழக்குகளில் ஜாமீனில் தத்தாத்ரேயா இருந்து வருகிறார்.

இதையும் படிங்க: அரசு பஸ்சுக்குள் இளம்பெண் பலாத்காரம்.. சசோதரி என அழைத்தவன் செய்த கொடூரம்.. ஏசி பஸ்சில் தனியே சிக்கிய பெண்..

சம்பவம் எப்படி நடந்தது?

தத்தாரேயா கடே திருட்டு, வழிப்பறியில் ஈடுபடும்போது டிப்டாப்பாக உடை அணிந்து, காலில் ஷூ அணிந்து தன்னை ஒரு போலீஸ் அதிகாரி போல் மக்களிடம் காண்பித்துக்கொள்வார். சம்பவத்தன்றும் அதேபோன்று டிப்டாப் உடையில் தத்தாத்ரேயா இருந்துள்ளார் என்பது சிசிடிவி கேமிராவில் பதிவாகியிருந்தது. சம்பவத்தன்றுகூட எஸ்டி பேருந்து நிலையத்தில் இருந்த பல்தான் நகருக்கு செல்ல இருந்த பேருந்தில் ஒரு பெண் அமர்ந்திருந்தார். மருத்துவத் துறையில் பணியாற்றும் அந்த 26வயது பெண், பல்தான் பகுதிக்கு செல்ல காலை 5.45 மணிக்கு பேருந்தில் ஏறினார். அந்த பெண்ணிடம் பொய்யாக தன்னுடைய பெயரைக் கூறி தான் ஒரு போலீஸ் அதிகாரி என கடே பேசத் தொடங்கினார். 

அந்தப் பெண்ணை முதலில் சகோதரி என மரியாதையாக பேசத்தொடங்கி, பேருந்து தவறுதலாக வேறு நடைமேடையில் நிறுத்தப்பட்டுவிட்டது, இறங்கிவிடுங்கள் என்று கடே மரியாதையாக பேச்சைத் தொடங்கியுள்ளார். கடேயின் பேச்சை நம்பிய அந்தப் பெண் பேருந்தில் இருந்து இறங்கியுள்ளார். அதன்பின் அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஆள் இல்லாத ஏசிப் பேருந்தில் அந்த பெண்ணை கடே அமரவைத்து இந்தப் பேருந்துதான் பல்தான் செல்லும் என்றும் கடே தெரிவித்துள்ளார்.

பேருந்தில் விளக்குகள் ஏதும் இல்லாததால், விளக்கு போடச் சொல்கிறேன் எனக் கூறிவிட்டு சென்ற கடே, பேருந்தின் கதவை தாழிட்டு அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார் என்று போலீஸார் தெரிவித்தனர்.

எப்படி கைது செய்தனர்?

இந்நிலையில் பலாத்காரத்தில் ஈடுபட்டது தத்தாத்ரேயா என்பதை கண்காணிப்பு கேமிரா மூலம் அடையாளம் கண்டுபிடித்த போலீஸார் அவரைப் பிடிக்க 13 சிறப்பு குழுக்கள், மோப்பநாய்கள், ட்ரோன்கள் ஆகியவற்றை தேடுதலி்ல் ஈடுபடுத்தினர். புனே மாவட்டத்தில் உள்ள சிரூர் தாலுகா பகுதியைவிட்டு எங்கும் செல்லவில்லை என்பதை போலீஸார் உறுதி செய்து 100க்கும் மேற்பட்ட போலீஸார் தேடுதலில் ஈடுபட்டனர்.

பேருந்தில் பெண் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் உத்தவ் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் சரத்பவார் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. பாஜகவின் ஆட்சியில் மீண்டும் நிர்பயா சம்பவம் என்று கடும் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்களை பல்வேறு இடங்களில் நடத்தி குற்றவாளியைக் கைது செய்ய வலியுறுத்தின.

இதனால் ஆளும் பாஜக அரசுக்கும், முதல்வர் தேவேந்திர பட்நாவிஸுக்கும் நெருக்கடி அதிகரிக்கவே விரைவாக குற்றவாளியைப் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்த தேடுதலை தீவிரப்படுத்த உத்தரவிட்டார். இதையடுத்து, 100 போலீஸார் கொண்ட 13 சிறப்பு படைகள், மோப்ப நாய்கள், ட்ரோன்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன, தத்தாத்ரேயாவின் உறவினர் வீடுகள், நண்பர்கள் வீடுகளில் போலீஸார் தேடுதல் நடத்தினர் அவர்களிடம் விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.

தத்தாரேயா கடே தப்பித்துச் செல்லும்போது குடும்பத்தாருக்கு தொலைப்பேசியில் பேசும்போது, “ நான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன், விரைவில் போலீஸில் சரண்டர் ஆகிவிடுவேன்” எனத் தெரிவித்ததாக விசாரணையில் தெரியவந்தது. 37வயதான தத்தாரேய கடே தவறு செய்த இடத்தில் இருந்து தப்பித்துச் செல்லும்போது தனது சட்டையை மாற்றிக்கொண்டு சென்றுள்ளார். கடே பயன்படுத்திய சென்ட் வாசனையை வைத்து மோப்ப நாய்கள் மூலம் அவர் இருக்கும் இடத்தை போலீஸார் நெருங்கினர். சிரூர் தாலூகாவில் உள்ள கரும்பு தோட்டத்தின் அருகே கால்வாய் பகுதியில் தத்தாரேயா பதுங்கி இருந்துள்ளார். இதை அப்பகுதி கிராமத்தைச் சேர்ந்த சிலர் பார்த்துவிட்டு, போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீஸார் தத்தாரேயாவை கைது செய்து, சிறப்பு விசாரணை அமைப்பிடம் ஒப்படைத்தனர்.

37வயதான தத்தாரேயா கடே, சிரூர் பகுதியைச் சேர்ந்தவர். இவர் மீது அகில்யாநகர் மாவட்டம் சிரூர், சிகாபூர் பகுதி போலீஸ் நிலையத்தில் ஏராளமான திருட்டு, வழிப்பறி, செறியின் பறிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கார் ஒன்றை வாடகைக்கு ஓட்டி வந்த கடே, தன்னுடைய டாக்ஸியில் பயணிக்கும் வயதான பெண்களை மட்டும் குறிவைத்து அவர்களுக்கு லிப்ட் கொடுத்து, தனியாக ஒரு இடத்துக்கு அழைத்துச் சென்று கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டுள்ளார் என விசாரணையில் தெரியவந்தது. ஏராளமான திருட்டு, வழிப்பறி, கொள்ளை வழக்குகள் கடே மீது நிலுவையில் இருக்கும்நிலையில் 2019ம் ஆண்டிலிருந்து ஜாமீனில் வெளியே உள்ளார்.

இதையும் படிங்க: அரசு பஸ்சுக்குள் இளம்பெண் பலாத்காரம்.. சசோதரி என அழைத்தவன் செய்த கொடூரம்.. ஏசி பஸ்சில் தனியே சிக்கிய பெண்..

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share