மூளையில் இருந்த வக்கிரத்தை வாந்தியெடுத்துவிட்டாய்.. யூடியூபரை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை..!
யூடியூபரும், இன்ப்ளூயன்சருமான ரன்வீர் அலாபாடியாவை கைது செய்யத் இடைக்காலத் தடைவிதித்த உச்ச நீதிமன்றம், அவரின் பேச்சை கடுமையாக சாடியது.
ரன்வீர் தனது மூளையில் இருந்த அசிங்கத்தை வாந்தியெடுத்துள்ளார் என்று உச்ச நீதிமன்றம் கடுமையாகச் சாடியது. ரன்வீர் அல்லாபாடியா யூடிப்பில் பிரபலமான இவருக்கு பீர்பைசெப்ஸ் என்ற பெயரும் உண்டு. சமூக வலைத்தளங்களில் கோடிகளில் சம்பாதித்து, செல்வாக்கு செலுத்துபவர்களில் முக்கிய நபராக ரன்வீர் இருந்து வருகிறார். ரன்வீர் தனது யூடிப்பில் உடற்பயிற்சி, ஆன்மீகம், உடல்நலன் குறித்த தகவல்களை பதிவிட்டு வருகிறார். இவரின் நிகர சொத்து மதிப்பு ரூ.58 கோடியாகும்.
சமே ரெய்னா என்பவர் தனது யூடியூப்பில் “ இந்தியாஸ் காட் லேடன்ட்” எனும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். நாடுமுழுதும் எண்ணற்ற இளைஞர்களிடம் மறைந்து கிடக்கும் திறமைகளை இந்த நிகழ்ச்சி வாயிலாக வெளிக்கொண்டு வந்து அவர்களின் வாழ்கைக்கு வழிகாட்டும் நிகழ்ச்சியாகப் பார்க்கப்படுகிறது. ஆடல், பாடல், இசை, நகைச்சுவை, மேஜிக் உள்ளிட்ட எண்ணற்ற திறமைகளை இளைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் வெளிப்படுத்துவார்கள்.
இதையும் படிங்க: அலுவலகத்தில் பணியாளரை அதிகாரி திட்டுவது குற்றமில்லை - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
இந்நிலையில் சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற யூடியூப்பர் ரன்வீர் அல்லாபாடியா, பெண்கள் குறித்தும், பெற்றோர் குறித்தும் மிகவும் மோசமான கருத்துக்களைத் தெரிவித்தார். அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகவே அவருக்கு கடும் கண்டனங்கள், எதிர்ப்புகள் வலுத்தன அவருக்கு கொலை மிரட்டல்களும் வந்தன. யூடியூப்பர் அலாபாடியா யூடியூப்பில் அவதூறாக, சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பேச்சுக்கு அவருக்கு எதிராக அஸாம், மகாராஷ்டிராவில் பல முதல்தகவல் அறிக்கைகள் பதிவாகியுள்ளன.
இது குறித்து மும்பை போலீஸார் வழக்குப் பதிவு செய்து ரன்வீர் அலாபாடியாவை கைது செய்ய தயாராகினர்.
இந்நிலையில் ரன்வீர் அலாபாடியா தரப்பில் கைது செய்யத் தடைவிதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அலாபாடியா தரப்பில் வழக்கறிஞர் அபிநவ் சந்திரசூட் ஆஜராகினார்.
இந்த மனுவின் விசாரணை தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையில் நீதிபதிபதிகள் சூர்ய காந்த், என். கோட்டீஸ்வர் சிங் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அலாபாடியா தரப்பில் ஆஜராகிய வழக்கறிஞர் அபினவ் வாதிடுகையில் “ மனுதாரருக்கு பல கொலை மிரட்டல்கள் மகாராஷ்டிரா, அஸாமில் இருந்து வந்துள்ளன, தற்போது அவர் ஜெய்பூரில் இருக்கிறது.
அவருக்கு பாதுகாப்பு தேவை. இவர் மீது பழைய சட்டப்பிரிவு 153 ஏ பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். அப்போது நீதிபதி சூர்யகாந்த் வழக்கறிஞர் அபினவிடம் “ கொச்சையாகவும், அருவருப்பாகவும் பேசுவதற்கு ஏதாவது வரையரை இருக்கிறதா, இவரின் பேச்சு நம்முடைய நாட்டில் அருவருப்பாக இல்லாவிட்டால் வேறு எதைச் சொல்வது. அவர் எப்படிப்பட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார் என பார்த்தீர்களா. இதுபோன்று அனைத்துவிதமான வார்த்தைகளையும் பேச அவர் அனுமதி பெற்றுள்ளாரா.
இதுபோன்ற நடத்தை கடுமையாக கண்டிக்கப்பட வேண்டியது. தனிப்பட்ட ஒருவரின் ஒழுக்கத்தை கேள்விகேட்கவில்லை. அலபாடியா அவரின் பெற்றோரையும் அவமானப்படுத்திவிட்டார். அவரின் மனதிலும், மூளையிலும் ஏதோ அசிங்கம் கழிவு இருந்திருக்கிறது, அதை வாந்தியாக யூடியுப்பில் எடுத்துவிட்டார்.
நான் சமூகத்தில் மிகவும் பிரபலம், நான் என்ன வார்த்தைகளை வேண்டுமானாலும் பேசலாம், யாரும் ஏதும் சொல்லமாட்டார்கள் என சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த உலகில் யாரேனும் அலாபாடிய பேசிய வார்த்தைகளை விரும்புவார்களா எனச் சொல்லச் சொல்லுங்கள்.
இதுபோன்ற மட்டமான வார்த்தைகளை பேசிதான் மலிவான விளம்பரத்தை அலபாடியா தேட வேண்டுமா. இவர் பேசிய வார்த்தைகளைக் கேட்டு அவரின் பெற்றோர் வெட்கப்படுவார்கள், சகோதரிகள், தலைகுணிவார்கள். ஒட்டுமொத்த சமூகமே அவரைப் பார்த்து அவமானப்படும்.. நீங்களும் உங்கள் கூட்டாளிகளும் வெளிப்படுத்திய வக்கிரம் வக்கிரமான மனநிலை. சட்டத்தின் ஆட்சிக்குக் கட்டுப்பட்ட ஒரு நீதித்துறை அமைப்பு எங்களிடம் உள்ளது. அச்சுறுத்தல்கள் இருந்தால், சட்டம் தன் கடமையைச் செய்யும். நீங்கள் பேசிய வார்த்தைகளை ஒருபோதும் நீதிமன்றம் ஆதரிக்காது. எவ்வளவு அவமானத்தை, தலைகுணிவை உங்களின் பெற்றோருக்கு ஏற்படுத்திவிட்டீர்கள்” எனத் தெரிவித்தார். இதையடுத்து, அலபாடியாவை கைது செய்ய இடைக்காலத் தடைவிதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: உச்ச நீதிமன்றத்தை ‘உரசிப்’ பார்த்த துணை குடியரசு தலைவர்: சிபிஐ இயக்குநர் நியமனத்தில் விமர்சனம்