’யார் அந்த சார்?’ விவகாரத்தை பின்னுக்கு தள்ளிய சீமானின் பெரியார் விமர்சனம்...யாருக்கு லாபம்?- ஒரு அலசல்
சீமான் பேச்சுகள் தமிழக அரசியலில் ஆளுங்கட்சியை கேள்விக்கேட்கும் நிலையில் திடீரென ரூட்டை மாற்றி பெரியார் குறித்து அவர் பேசியது அரசுக்கு எதிரான பல பிரச்சனைகளை பின்னுக்கு தள்ளிவிட்டது. சீமானின் பேச்சு யாருக்கு லாபம் என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது.
தமிழக அரசியலில் முற்றிலும் மாறுபட்ட ஒரு இயக்கமாக நாம் தமிழர் கட்சி இயங்கி வருகிறது. யாருடனும் கூட்டணி இல்லாமல் 6 தேர்தல்களை சந்தித்து இடையில் கட்சியின் சின்னத்தை பறிகொடுத்தும் 8% வாக்குகளை பெற்று அங்கிகரிக்கப்பட்ட மாநில கட்சியாக விஸ்வரூபம் எடுத்துள்ளது நாதக.
தேர்தலில் தொடர்ந்து தோல்வியை தழுவினாலும் அசராமல் அரசுக்கு எதிரான பிரச்சாரத்தை கொண்டுச் செல்கிறது நாதக. திராவிட எதிர்ப்பு, மதவாத அரசியல் எதிர்ப்பு, ஆளுங்கட்சிகளுக்கு எதிரான நிலை என அரசியலில் சீமான் தினம் தினம் தம்பிகளுடன் களமாடி வருகிறார். சீமானின் வித்தியாசமான பேச்சு, ஆக்ரோஷம் அவருக்கு மாநிலம் முழுவதும் ஒரு பெரிய தொண்டர் கூட்டம் உண்டு.
இதையும் படிங்க: இடைத்தேர்தலில் பிரசாரம் செய்யவிடாமல் அராஜகம்.. திமுக மீது நாம் தமிழர் சரமாரி புகார்
அதே அளவுக்கு அவருக்கு எதிராக ஆளுங்கட்சியினரின் பிரச்சாரமும் உண்டு. சமூக வலைதளங்களில் அவரது தம்பிகள் வலுவாக உள்ளனர். திமுகவின் ஐடி விங்குக்கு இணையான பலம் கொண்ட அணி நாதகவில் உண்டு. சீமானின் தமிழ் தேசிய அரசியலை பிடிக்காதவர்கள்கூட அவரது வழக்காமான மக்கள் அரசியலையும் அவரது ஆழ்ந்த தெளிவான பதிலையும் ரசிக்காமல், ஆமோதிக்காமல் யாரும் இருக்கமுடியாது. நாவன்மைக்கு சொந்தக்காரரான சீமான் சில நேரம் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வம்பில் சிக்குவதும் உண்டு.
சீமானின் பேச்சு வம்பிழுக்கும் வகையில் இருக்கும்போது மற்ற நிர்வாகிகளும் அதே பாணியில் இயங்கும்போது மேலும் சிக்கல் உருவானது. இதுபோன்றதொரு மேடை பேச்சுக்காக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதும், சிலர் சமூக வலைதளத்தில் உணர்ச்சி வயப்பட்டு பதிவிட்டபோது கைதானதும் உண்டு. இதில் காவல்துறை உயர் அதிகாரிக்கும் சீமான் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுக்கும் மோதல் ஏற்பட்டது.
இதில் காவல் அதிகாரிக்கு எதிராக அரசியல் ரீதியாக போராட்டம் எதுவும் நடத்தாமல் பேட்டிகளில் சீமான் பேசிக்கொண்டிருந்தது அரசியல் ரீதியாக இயங்குவதில் அவர்களுக்கு உள்ள சிக்கலை எடுத்துக்காட்டியது. அதேபோல் அதே அதிகாரி டெல்லி மாநாட்டில் நாதக பற்றி பேசிய பேச்சு வெளியான விவகாரத்தில் ஐபிஎஸ் அதிகாரிகளே சீமான் பக்கம் நியாயம் என பேசியபோது அந்த அதிகாரிக்கு எதிராக மாவட்டம் முழுவதும் ஆர்ப்பாட்டம், டிஜிபி அலுவலகத்தில் புகார் என அரசியல் ரீதியாக இயக்கத்தை கொண்டுச் செல்லும் வாய்ப்பை தவறவிட்ட சீமான் ஆஃப்ட்ரால் ஐபிஎஸ் அதிகாரி என்று பேசினார்.
அது அனைத்து ஐபிஎஸ் அதிகாரிகளையும் வேதனை அடைய வைத்தது. அரசியல் ரீதியான போராட்டத்தை கையில் எடுத்திருந்தால் அந்த அதிகாரிக்கும், அரசுக்கும் நெருக்கடி ஆகியிருக்கும், ஆனால் அப்படி செய்யாமல் பேட்டியில் சவால் விட்டது சீமானின் பலகீனமாக பார்க்கப்பட்டது. இதேபோல் விஜய் விவகாரத்திலும் ஆரம்பத்தில் கூட்டணி தம்பி என்று பேசியவர் விஜய் தனது பேச்சில் சீமானையும் லேசாக வம்பிழுத்ததால் டென்ஷனாகி கடுமையாக பேசினார். மேடையில், பேட்டியில் உணர்ச்சிகரமாக பேசுவது இவரது பிளஸ், அதுவே மைனஸும் கூட.
இப்படி ஒரு சாதாரண பேட்டியில் பெரியார் சொன்னதாக சில கருத்துகளை சீமான் சொல்ல அதைச்சுற்றியே விவாதங்கள் செல்ல தொடங்கின. ஆகா அருமையாக இருக்கே மாநிலத்தில் மக்களுக்கு எதிரான எந்த பிரச்சனை எழுந்தாலும் இதை வைத்தே மடைமாற்றலாம் என ஆள்வோர் செயல்பட ஒன்றுமில்லாத பிரச்சனை பூதாகரமாக்கப்பட்டு தமிழகத்தின் முக்கிய பிரச்சனை இதுதான் என சமூக வலைதளம், மீடியா என சுற்றி வருகிறது.
சீமானின் இந்த பேட்டி யாருக்கு ஆதரவாக அமைந்தது என்று பார்த்தால் அண்ணா யூனிவர்சிட்டி பிரச்சனை முதல் டங்க்ஸ்டன், பொங்கல் பரிசு 1000 ரூபாய், ஜல்லிக்கட்டு பிரச்சனை, பொங்கலுக்கு ஆம்னி பேருந்துகள் கொள்ளை உள்ளிட்ட எந்த பிரச்சனையும் வெளியில் வராமல் பெரியார் வந்து முடித்து வைத்துவிட்டார். சீமானுக்கு பாஜகவின் தலைவர்கள் ஆதரவு தெரிவித்ததன் மூலம் சீமான் மீது ஏற்கனவே வைக்கப்படும் பாஜக ஆதரவாளர் என்கிற விமர்சனம் வலுவாக கொண்டுச் செல்லப்பட்டதையும் காணலாம்.
திராவிட கொள்கைகளுக்கான எதிர்ப்பை பெரியார் எதிர்ப்பாக மாறி, பெரியார் சொன்னதாக சொல்லப்பட்ட வார்த்தைகளாக மாறி அது உண்மை, பொய் என்கிற ஆராய்ச்சிக்குள் தமிழக ஊடகங்கள், சமூக வலைதளங்கள் இறங்கியதால் அத்தனை மக்கள் பிரச்சனைகளும் பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டது. பெரியார் அன்றைக்கு இப்படி பேசினார் என்று சொல்லும்போது அதை தி.க.வினர் மறுக்கும்போது ஆதாரம் உள்ளது என நாதகவினர் கொடுக்கும் ஆதாரம் எதுவும் உரிய ஆதாரமாக் இல்லாமல் இருப்பதும், ஆதாரம் உங்களிடமே வைத்துக்கொண்டு என்னிடம் கேட்டால் என்கிற சொல்லாடலும் உணர்ச்சி வயப்பட்டு பேசியதை சமாளிக்கும் போக்காக தமிழக மக்கள் பார்ர்கின்றனர்.
பல பெரியோர்கள் தமிழகத்தில் சமூக நீதிக்காக போராடியுள்ளார்கள் பெரியார் மட்டும்தான் போராடினார் என்பதை எப்படி ஏற்க முடியும் என்கிற நாதகவின் வாதம் ஏற்கக்கூடியதே. ஆனால் பெரியாரும் போராடினார், பெரியாரின் பங்கே இல்லை, பெரியாரின் மூட நம்பிக்கைக்கு எதிரான போராட்ட வாழ்வில் வெறும் பாலியல் விவகாரம் மட்டுமே இருந்தது என சிறுமைபடுத்துவது வலதுசாரிகள் அரசியல் சீமானும் அதை தூக்கிக்கொண்டு வரும்போது அவர் யாருக்காக பேசுகிறார் என்று கேட்கத்தான் தோன்றுகிறது.
மொத்தத்தில் திராவிடமா, தமிழ் தேசியமா என்கிற கருத்துபோர் பெரியாரை அவதூறு செய்வதிலும், அவரது திருமணம், அந்தந்த காலக்கட்டங்களில் இருக்கும் சூழலை வைத்து பெரியார் சொன்ன வார்த்தைகளை பிடித்து பேசுவது போன்ற மலிவு அரசியலை நோக்கிய பயணமாக போனதுதான் மிச்சம். திராவிடமா? தமிழ் தேசியமா? எது சிறந்தது அறிவார்ந்த விவாதம் நடத்துங்கள் மக்கள் தீர்மானிக்கட்டும், ஆனால் இது அந்த வழியல்ல. இது சீமானுக்கு மேலும் மதிப்பை குறைக்கும்.
இதையும் படிங்க: 'சீமான் ஈரோட்டில் கால் வைக்கக்கூடாது...' கேட்டைப்போடும் பெரியார்-அம்பேத்கர் கூட்டமைப்பு..!