காதலனை கசாயத்தில் விஷம் வைத்து கொன்ற வழக்கு; கிரீஷ்மாவுக்கு மரண தண்டனை!
கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்து குமரி கல்லூரி மாணவர் ஷாரோன் ராஜை கொலை செய்த வழக்கில் காதலி கிரீஷ்மாவுக்கு மரண தண்டனை விதித்து நெய்யாற்றின்கரை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்து குமரி கல்லூரி மாணவர் ஷாரோன் ராஜை கொலை செய்த வழக்கில் காதலி கிரீஷ்மாவுக்கு மரண தண்டனை விதித்து நெய்யாற்றின்கரை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தாய் மாமா நிர்மலகுமாரன் 3 வருடங்கள் சிறை விதிக்கப்பட்டது. மேலும் கிருஷ்ணாவிற்கு 2 லட்சமும் அவரது மாமா நிர்மல குமரனுக்கு 50,000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. கேரள மாநிலம் பாறசாலையை சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மகன் ஷாரோன் ராஜ் (23). இவர் குமரி மாவட்டம் நெய்யூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி ரேடியாலஜி படித்து வந்தார்.
இந்நிலையில் ஷாரோன் ராஜுக்கும், களியக்காவிளையை சேர்ந்த கிரீஷ்மா என்ற 24 வயது கல்லூரி மாணவிக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் ஒன்றாக திற்பரப்பு, திருவனந்தபுரம் உள்பட பல்வேறு இடங்களுக்கு ஜாலியாக சுற்றி வந்தனர்.
இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டதை ஷாரோன் ராஜ் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அக்டோபர் 25ம் தேதி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையும் படிங்க: ‘பசுவின் கோமியம்’ ஜீரணத்தை தூண்டும், மருத்துவ சக்தி கொண்டது: சென்னை ஐஐடி இயக்குநர் புதிய கண்டுபிடிப்பு
தங்களுடைய மகனை அவரது காதலி கிரீஷ்மா தான் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்தார் என்று ஷாரோன் ராஜின் பெற்றோர் பாறசாலை போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே இந்த வழக்கு திருவனந்தபுரம் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. குற்றப்பிரிவு டிஎஸ்பி ஜான்சன் தலைமையிலான போலீசார் நடத்திய விசாரணையில் ஷாரோன் ராஜுக்கு காதலி கிரீஷ்மா கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்தது தெரியவந்தது.
நெல்லையைச் சேர்ந்த ஒரு ராணுவ வீரருக்கு கிரீஷ்மாவை திருமணம் செய்து கொடுக்க அவரது பெற்றோர் விரும்பினர். முதலில் அதற்கு கிரீஷ்மா சம்மதிக்காவிட்டாலும் பின்னர் திருமணத்திற்கு சம்மதித்தார். ஆனால் ஷாரோன் ராஜ் தன்னுடைய காதலில் உறுதியாக இருந்ததால் அவரை கொல்ல கிரீஷ்மா தீர்மானித்தார்.
இதன்படி கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 14ம் தேதி உல்லாசமாக இருக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறி ஷாரோன் ராஜை தன்னுடைய வீட்டுக்கு வரவழைத்து கிரீஷ்மா கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்தார். குற்றப்பிரிவு போலீஸ் நடத்திய விசாரணையில் இந்தத் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. இதையடுத்து கிரீஷ்மாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் இந்தக் கொலைக்கு கிரீஷ்மாவின் தாய் சிந்து மற்றும் மாமா நிர்மலகுமாரன் ஆகியோர் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களையும் போலீசார் கைது செய்து திருவனந்தபுரம் சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு திருவனந்தபுரம் மாவட்டம் நெய்யாற்றின்கரை கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த 2 வருடங்களாக நடைபெற்று வந்த இந்த விசாரணையில் கடந்த சில மாதங்களுக்கு முன் இறுதிக்கட்ட விசாரணை தொடங்கியது. இறுதிக்கட்ட விசாரணை முடிந்த நிலையில் கடந்த 17ம் தேதி இந்த வழக்கில் கிரீஷ்மா மற்றும் அவரது தாய் மாமா நிர்மலகுமாரன் ஆகியோர் குற்றவாளிகள் என்று நீதிபதி பஷீர் அறிவித்தார். தாய் சிந்து இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
ஆதாரங்களை அழித்ததாக நிர்மல குமாரன் மீது குற்றம் சுமத்தப்பட்டது. கிரீஷ்மாவுக்கு எதிராக கொலை, விஷம் கொடுத்தது மற்றும் ஆதாரங்களை அழித்தல் ஆகிய குற்றங்கள் நிரூபணமாகி உள்ளதாக நீதிமன்றம் தெரிவித்தது.
மறுநாள் (18ம் தேதி) தண்டனை தொடர்பாக இரு தரப்பினரின் இறுதி விவாதம் நடந்தது.தொடர்ந்து இருவருக்குமான தண்டனை 20ம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதி பஷீர் கூறினார்.
இதன்படி இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் கிரீஷ்மாவுக்கு மரண தண்டனையும், இரண்டு லட்ச ரூபாய் அபராதமும் மாமா நிர்மலகுமாரன் நாயருக்கு 3 வருடங்கள் சிறையும் ஐம்பதாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி பஷீர் தீர்ப்பளித்தார்.
இதையும் படிங்க: புதுக்கோட்டை சமூக ஆர்வலர் ஜகபர் அலி கொலை வழக்கில் அதிரடி திருப்பம்; 4 பேரை கொத்தாக தூக்கிய காவல்துறை!