×
 

“பாவம்... எளிய பெண்; அவர் மிகவும் சோர்வாக இருந்தார்” : ஜனாதிபதி உரை பற்றிய சோனியா கருத்தால் சர்ச்சை

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் குடியரசுத் தலைவர் (ஜனாதிபதி) திரவுபதி முர்முவின் தொடக்க உரை குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, “பாவம்... எளிய பெண் மிகவும் சோர்வாக இருந்தார்” என்று தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தொடக்க உரையாற்றினார். குடியரசுத் தலைவரின் வழக்கமான உரைக்கு பின்பு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியிடம் உரை குறித்து கருத்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த சோனியா காந்தி, "குடியரசுத் தலைவர் உரையின் இறுதிப் பகுதியை வாசிக்கும்போது மிகவும் சோர்வடைந்து விட்டார். அவரால் பேச முடியவில்லை. பாவம்" என்று வருத்தப்பட்டிருந்தார்.

 அப்போது காங்கிரஸ் எம்.பி.க்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி இருவரும் உடன் இருந்தனர்.

சோனியா காந்தியின் பதிலைத் தொடர்ந்து, அவரது கருத்துக்கு ஆதரவளிக்கும் விதமாக பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “சலிப்பானது. திரும்பத் திரும்ப சொன்னதையே சொல்கிறார்” என்று தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: காங்கிரஸ் கட்சியின் புதிய அலுவலகம் ‘இந்திரா பவன்’: சோனியா காந்தி திறந்து வைத்தார்...

குடியரசுத் தலைவர் குறித்த அவர்கள் இருவரின் இந்தக் கருத்துகளை “இழிவானது” என்று பாஜக சாடியுள்ளது. இது குறித்து பாஜக எம்.பி. சுகந்த மஜும்தார் கூறுகையில், “இழிவான கருத்து இது. சோனியா காந்தி, ராகுல் காந்தி போன்ற தலைவர்கள் இதுபோன்ற கருத்துகளைக் கூறக் கூடாது. குறிப்பாக குடியரசுத் தலைவர் பற்றி இப்படிப் பேசக் கூடாது.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர். தற்போது அவர் நாட்டின் முதல் குடிமகள் என்ற இடத்தில் இருக்கிறார். இதனை காங்கிரஸின் நிலப்பிரப்புத்துவ ஜமீன்தார் மனநிலையால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால், அவர்கள் குடியரசுத் தலைவர் உரையை எதிர்க்கிறார்கள்" என்று தெரிவித்துள்ளார். பாஜகவின் குற்றச்சாட்டு குறித்து காங்கிரஸ் உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை.

முன்னதாக, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தனது தொடக்க உரையில், "கொரானா தொற்று காலத்தில் உலகளாவிய நெருக்கடிகள் இருந்தபோதிலும், பொருளாதாரத்தை முடக்கத்தில் இருந்து மீட்டுக்கொண்டு வர அரசு பணியாற்றி வருகிறது. மோடி அரசின் மூன்றாவது ஆட்சி காலத்தில் முந்தைய அரசுகளை விட மூன்று மடங்கு வேகமாக பணிகள் நடைபெற்று வருகின்றன. விமானப் போக்குவரத்து மற்றும் ரயில்வே துறையில் அரசின் முயற்சிக்கு எனது பாராட்டுகள். விவசாயத்தில் நவீனமயமாக்கலை நோக்கி அரசு பயணித்து வருகிறது. மேலும் அதில் தன்னிறைவு அடைவதை நோக்கமாகவும் கொண்டுள்ளது" என்று தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: விடை பெறும் காங்கிரஸ்! 50 ஆண்டுகளுக்குப்பின் அக்பர் சாலையிலிருந்து கோட்லா சாலைக்கு மாற்றம்..

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share