×
 

சைபர் திருடர்களுக்கு இப்படியெல்லாமா உதவுவாங்க..? தமிழக போலீஸார் விசாரணையில் திடுக் தகவல்!

சைபர் கிரைம் திருடர்களுக்கு வங்கிக் கணக்குத் தொடங்கி தருவது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இப்படி உதவுபவர்களுக்கு போலீஸார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தியாவில் நாளுக்கு நாள் சைபர் கிரைம் மோசடிகள் அதிகரித்தவண்ணம் உள்ளது. அதிகரித்துவரும் தொழில்நுட்ப வசதிகளுக்கு ஏற்ப, சைபர் கிரைம் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன.  இந்நிலையில் சைபர் கிரைம் மோசடிகள் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. கமிஷன் தொகைக்கு ஆசைப்பட்டு சிலர் சைபர் திருடர்களுக்கு  வங்கிக் கணக்குகளை தொடங்கித் தந்து மோசடிக்கு உடந்தையாக இருப்பது தெரிய வந்துள்ளது.  சைபர் கிரைம் மோசடியில் ஈடுபடுபவர்கள், தங்களது ஏஜென்டுகள் மூலம், வங்கிக் கணக்குகளைத் தொடங்கித் தர தகுந்த நபர்களை ஆன்லைன் மூலம்  தேடிப்பிடிக்கின்றனர்.



குறிப்பாக ஆன்லைன் மோசடிகளில் பணத்தை இழந்தவர்களுக்கு முன்னுரிமை அளித்து பண ஆசை காட்டுகின்றனர். இதற்கு ஒப்புக் கொள்பவர்களிடம், அவர்கள் தொடங்கித் தரும் வங்கிக் கணக்கில் விழும் தொகைக்கு ஏற்ப 5 சதவீதம், 7 சதவீதம் என கமிஷன் தரப்படும் என ஆசை காட்டுகின்றனர். கமிஷனை நம்பும் நபர்கள், தங்களது அசல் ஆவணங்களைக் கொடுத்து வங்கிக் கணக்கு தொடங்குகின்றனர். பின்னர், வங்கிக் கணக்கின் பாஸ்புக், ஏடிஎம் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை அவர்களிடம் இருந்து ஏஜென்ட்கள் மூலம் மோசடியாளர்கள் வாங்கிக் கொள்கின்றனர். ஆன்லைனில் மோசடி செய்யும் நபர்களிடம் இருந்து பெறப்படும் பணத்தை இந்த வங்கிக் கணக்குகள் மூலம் பெற்று, தங்களது வங்கிக் கணக்குக்கு பரிமாற்றம் செய்து கொள்கின்றனர்.



இதுதொடர்பாக கோவை சைபர் கிரைம் போலீஸார் எச்சரித்துள்ளனர்.  ‘‘சைபர் கிரைம் மோசடியில் ஈடுபடும் மர்மநபர்களுக்கு, கமிஷன் அடிப்படையில் வங்கிக் கணக்குகளைத் தொடங்கித் தந்த சிலர் சமீபத்தில் அடுத்தடுத்து மாநகர சைபர் கிரைம் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தொடங்கித் தந்த வங்கிக் கணக்கை பயன்படுத்தி பல கோடி பணத்தை நூதனமாக திருடியுள்ளனர். தொடர்ந்து திருடி வருகின்றனர். இறுதியில் வங்கிக் கணக்கை தொடங்கித் தந்த நபர்களும் கைது செய்யப்படுகின்றனர். எனவே, மோசடி நபர்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்கித் தருவதை தவிர்க்க வேண்டும். மர்ம நபர்களின் ஆசை வார்த்தைகளை நம்பக் கூடாது. இப்படி யாராவது அணுகினால் உடனே போலீஸாரிடம் புகார் தெரிவிக்க வேண்டும். சைபர் குற்றங்கள் தொடர்பாக 1930 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம்’’ என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். 

இதையும் படிங்க: சைபர் திருட்டு குற்றங்களிலிருந்து தப்பிப்பது எப்படி..? இதோ போலீஸின் டிப்ஸ்கள்!

இதையும் படிங்க: சீன நிறுவனத்துடன் சேர்ந்து சைபர் மோசடி... கோடி கோடியாய் சம்பாத்தித்த திருச்சி இளைஞரை கொத்தாகத் தூக்கிய போலீஸ்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share