இரவோடு இரவாக கைது செய்யப்பட்ட நடிகர்..! அதிர்ச்சியில் தெலுங்கு திரையுலகம்..!
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகரும், தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் சங்க முன்னாள் தலைவருமான போசானி கிருஷ்ண முரளியை ஆந்திர போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
தெலுங்கு சினிமாவான டோலிவுட்டில் நடிகர், டைரக்டர், தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்டவர் போசானி கிருஷ்ண முரளி. இவர் 150-க்கும் மேற்பட்ட படங்களில் எழுத்தாளராகவும் பணியாற்றி உள்ளார். ஆந்திராவில் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ஆட்சி காலத்தில் சினிமா தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் இருந்தார். தற்போது ஐதராபாத்தில் வசித்து வருகிறார். தனது படங்களில் காட்சிகளிலு, வசனங்களிலும் அரசியல்வாதிகளை கிண்டலடிக்கும் விதமாக தனது தனித்துவ நடிப்பை வெளிப்படுத்தியவர் போசானி கிருஷ்ண முரளி. இவர், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தீவிர ஆதரவாளராகவும் அறியப்படுகிறார்.
கடந்த ஆந்திர சட்டசபை தேர்தல் சமயத்தில் அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த சந்திரபாபு நாயுடு, அவரது மனைவி, மகன் நாராலோகேஷ் மற்றும் பவன் கல்யாண் அவர்களது குடும்பத்தினரை பற்றி கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். இந்நிலையில் ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சந்திரபாபு நாயுடு ஆட்சிக்கு வந்தார். அதன்பிறகு, ஆந்திராவில் பல போலீஸ் நிலையங்களில் போசானி கிருஷ்ணமுரளி மீது தெலுங்குதேசம் கட்சியினர் புகார் கொடுத்தனர். திருப்பதி, சித்தூர் போலீஸ் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகள் சிஐடி விசாரணைக்கும் மாற்றப்பட்டது.
இதையும் படிங்க: தெலுங்கு படிச்சே ஆகணும்.. ! 9,10ம் வகுப்பு சிபிஎஸ்சி, ஐசிஎஸ்இ, ஐ.பிக்கும் கட்டாயம் அமல்..!
இந்நிலையில் அன்னமய்யா மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கில் அவரை கைது செய்வதற்காக ஆந்திரா போலீசார் நேற்றிரவு ஐதராபாத்தில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றனர். கைது வாரண்டை கொடுத்து கைது செய்ய வந்திருப்பதாகவும் தெரிவித்தனர். இந்நிலையில் தனக்கு உடல்நலம் சரியில்லை என்றும் சிகிச்சையில் இருப்பதாகவும் கூறி போலீசாருடன் வர மறுத்துள்ளர் போசானி கிருஷ்ண முரளி. இதனை ஏற்றுக்கொள்ளாத போலீசார், உங்களை காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவு வந்துள்ளது என கூறியுள்ளனர். இதனால் இருவருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் நடந்தது. இறுதியில் போலீசார் அவரை வலுக்கட்டாயமாக கைது செய்து அழைத்துச் சென்றனர்.
அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் வைத்து போசானி கிருஷ்ண முரளியிடம் விடிய விடிய விசாரணை நடத்தப்பட்டது. அங்கேயே அவருக்கு உடல்நல பரிசோதனையும் செய்யப்பட்டது. தொடர்ந்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.இதனிடையே, நடிகர் போசானி கிருஷ்ண முரளி கைது செய்யப்பட்டதற்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கொடுங்கோல் ஆட்சி நடத்துகிறார் என்றும் கருத்துரிமைய ஒடுக்க முயற்சிக்கிறார் என்றும் குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து, போசானி மனைவி குசுமலதாவுடன் போனில் பேசிய ஜெகன்மோகன் ரெட்டி, இந்த விவகாரத்தில் போசானிக்கு எல்லா சட்ட உதவிகளையும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வழங்கும் என உறுதியளித்தார். கடவுள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்றும் கடினமான காலங்களில் தைரியமாக இருக்க வேண்டும் என்றும் போசானி கிருஷ்ன முரளியின் மனைவிக்கு ஜெகன் மோகன் ஆறுதல் கூறினார். இந்நிலையில் ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகளில் நடிகர் போசானி கைது செய்யப்பட்ட விவகாரம் தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: போலீஸ் ஸ்டேஷனில் பெண் மானபங்கம்.. நீதிபதி அதிரடி தீர்ப்பு.. நிஜத்தில் நடந்த விடுதலை பட பாணி சம்பவம்..!