ஒருத்தனும் மிஞ்ச கூடாது.. தேடித்தேடி அழிக்கும் ராணுவம்.. நேற்றும் 3 பயங்கரவாதிகள் வீடு தகர்ப்பு..!
காஷ்மீர் தாக்குதலை அடுத்து பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணியில் இந்திய ராணுவம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் வீடுகள் பாம் வைத்து தகர்க்கபட்ட நிலையில் நேற்றும் பயங்கரவாதிகளின் வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22 ஆம் தேதி இந்திய ராணுவத்தினர் சீருடையுடனும் துப்பாக்கிகளுடனும் நுழைந்த பயங்கரவாதிகள் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் இந்தியர்கள் 25 பேர், நேபாள நாட்டைச் சேர்ந்த ஒருவர் என 26 பேர் பலியாகினர். இந்த சம்பவம் உலகம் முழுவதுமே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உலக நாடுகள், அரசியல் தலைவர்கள் பலர் பயங்கரவாதிகளின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
அந்த சமயம் சவுதி அரேபியாவுக்கு அரசுமுறை பயணமாக சென்று இருந்த பிரதமர் நரேந்திர மோடி, தனது பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு இந்தியா திரும்பினார். அதன்பின் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிக்கும் பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்வது என முடிவானது.
பஹல்காமில் நடந்தது நாட்டின் ஆன்மா மீதான தாக்குதல். இதில் ஈடுபட்டோர், அதன் பின்னணியில் இருப்போர் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பதிலடி இருக்கும் என பிரதமர் மோடி எச்சரித்துள்ளார். இதனை அடுத்து சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அதிரடி அறிவிப்புகள் வெளியானது. இதற்கிடையே பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி, ஸ்ரீநகருக்குச் சென்றார். பாதுகாப்பு குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ராணுவ உயரதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இதையும் படிங்க: பைசாரன் பள்ளத்தாக்கு திறக்கப்பட்டதை பாதுகாப்பு படையினருக்கு தெரிவிக்கவில்லை.. அரசு ஒப்புதல்..!
இந்த நிலையில், இந்தத் தாக்குதலை அனந்த்நாக் பகுதியைச் சேர்ந்த ஆதில் தோகர் என்பவரும், திரால் பகுதியைச் சேர்ந்த ஆசிஃப் ஷேக்கும் நடத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இருவரில் ஆதில் தோகர் கடந்த 2018ஆம் ஆண்டு பாகிஸ்தானில் உள்ள லஷ்கர் -இ- தொய்பா அமைப்பில் ஆயுதப்பயிற்சி பெற்றவராவார்.
இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டஸ் பிரண்ட் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. காஷ்மீரை சேர்ந்த இரு பயங்கரவாதிகள், 4 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியது தெரிய வந்துள்ளது. இந்த பயங்கரவாதிகளை பிடிக்க பாதுகாப்பு படையினர் தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த சூழலில் 3 பயங்கரவாதிகளின் வீடுகள் நேற்று இரவு பாதுகாப்புப்படையினரால் குண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது.
குல்காமில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி ஜாகிர் அகமது கானிக்கு சொந்தமான வீடு இடிக்கப்பட்டு உள்ளது. இவன் 2 வருடமாக தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறான். ஷோபியன் என்ற இடத்தில் மற்றொரு லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி ஷாஹித் அகமது குட்டாயின் வீடும் தகர்க்கப்பட்டு உள்ளது. புல்வாமாவில் மற்றொரு சந்தேக நபரான அஹசன் உல் அக் ஷேக்கின் வீடும் தரைமட்டம் ஆக்கப்பட்டு உள்ளது. இந்த 2 லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகளும் பஹல்காம் தாக்குதலில் முக்கிய நபர்களாக சந்தேகிக்கபடுகின்றனர். பாதுகாப்பு படையினரின் தேடுதல் வேட்டை தொடர்கிறது.
இதையும் படிங்க: காஷ்மீர் முஸ்லீம் மக்கள் போராட்டம்.. காந்தி சொன்னது தான் இப்போவும் நடக்குது..! குலாம் நபி ஆசாத் விமர்சனம்..!