மூடப்படும் ஹிண்டன்பர்க் நிறுவனம்...
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஹிண்டன்பர்க் எனும் முதலீட்டு ஆராய்ச்சி நிறுவனம் மூடப்படுவதாக அறிவித்துள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வரும் நிறுவனங்களின் நிதி பரிவர்த்தனை, நிதி முறைகேடுகள் ஆகியவற்றை ஆராய்ச்சி செய்து அறிக்கைகளாக வெளியிடுவது இந்த நிறுவனத்தின் வழக்கம். ஏனென்றால் முதலீட்டாளர்கள் மோசடி செய்யப்படக் கூடாது என்பதால் நிறுவனங்களை தணிக்கை செய்து அறிக்கையாக சமர்ப்பிப்பது ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் செயல்பாடாகும்.
நாதன் ஆண்டர்சன் என்பவரால் 2017-ல் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்நிறுவனம் தொடங்கப்பட்டது. கனெக்டிக் நகரில் பிறந்து வளர்ந்த நாதன் ஆண்டர்சன், பொருளாதாரத்தில் பட்டம் பெற்ற பின்பு FACTCHECK நிறுவனம் ஒன்றில் தனது பணியை துவக்கினார். பின்னர் பொருளாதார ஊழல்களை வெளிக்கொணரும் மனிதர் என அறியப்பட்ட ஹாரி மார்க்கோபோலோ என்பவரிடம் வேலைக்கு சேர்ந்தார். பங்குச்சந்தைகளில் முதலீடு செய்யப்படும் தொகை அதன் முதலீட்டாளர்களுக்கு உரிய முறையில் போய் சேர்கிறதா? அதிக முதலீடுகளை ஈர்க்க நிறுவனங்கள் ஏதேனும் பொய்யுரைக்கிறதா என்பதை கண்டறிவதே இவர்களின் பணி.
இதையும் படிங்க: அதானியை ஆட்டிப்பார்த்த ஹிண்டன்பர்க் நிறுவனம் மூடல்! அதானி பங்குகள் மதிப்பு 9% உயர்வு..
ஹாரியிடம் பாடம் பயின்ற பின்னர் 2017-ல் ஹிண்டன்பர்க் ரிசர்ச் என்ற பெயரில் சொந்தமாக நிறுவனத்தை ஆரம்பித்தார் நாதன் ஆண்டர்சன். 1937-ல் மசாசூசெட்ஸ் என்ற இடத்தில் ஜெர்மனிக்கு சொந்தமான ஹிண்டன்பர்க் என்ற நிறுவனத்தின் விமானம் ஒன்று வெடித்து சிதறியது. மனிதர்களால் நிகழ்ந்த மாபெரும் தவறுகளில் ஒன்றாக அது பார்க்கப்படுகிறது. அந்த சம்பவத்தை நினைவுகூறும் வகையில் மனிதர்களின் சுயலாபங்களால் ஏற்படும் தவறுகளை தடுத்து நிறுத்துவதற்காக தனது நிறுவனத்திற்கு ஹிண்டன்பர்க் என பெயர் சூட்டினார் நாதன் ஆண்டர்சன்.
2020-ம் ஆண்டு அமெரிக்காவின் புகழ்பெற்ற நிகோலா நிறுவனத்தின் ஆண்டறிக்கையில் நிகழ்ந்த மோசடிகளை அம்பலப்படுத்தி வெளிச்சத்திற்கு வந்த ஹிண்டன்பர்க். இதனைத்தொடர்ந்து உலகின் பணக்கார மனிதர்களில் ஒருவராக திகழ்ந்த இந்தியாவின் கவுதம் அதானியின் அதானி குழுமம் குறித்து அதிர்ச்சி தகவல்களை 2023-ல் வெளியிட்டது ஹிண்டன்பர்க். இதனால் பங்குச்சந்தையில் பல லட்சம் கோடிகளை இழந்தது அதானி குழுமம். சட்டரீதியான சிக்கல்களையும் அது சந்திக்க நேரிட்டது. இதுபோதாதென்று செபி நிறுவனத்தின் தலைவருக்கும் அதானி குழுமத்தில் பங்குகள் இருந்ததாக பகீர் குற்றச்சாட்டையும் ஹிண்டன்பர்க் சாட்டியது.
இந்தநிலையில் அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்று டோனல்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார். வருகிற 20-ந் தேதி அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்க உள்ளார். அவரது வலதுசாரி சிந்தனைகள் மற்றும் செயல்பாடுகள் பல்வேறு நிறுவனங்களை அங்கு ஆட்டம் காண செய்துள்ளது. இந்த நிலையில் தான் ஹிண்டன்பர்க் நிறுவனத்தை மூடுவதாக அதன் நிறுவனர் நாதன் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார். எவ்வித அச்சுறுத்தல்களும் தங்களுக்கு இல்லை என்றும் குடும்பத்தினருடன் கலந்து ஆலோசித்து இந்த முடிவு எடுத்துள்ளதாகவும் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளார். இருப்பினும் ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் திடீர் அறிவிப்பு பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.
இதையும் படிங்க: அதானியை ஆட்டிப்பார்த்த ஹிண்டன்பர்க் நிறுவனம் மூடல்! அதானி பங்குகள் மதிப்பு 9% உயர்வு..