×
 

இன்னுமா ஓயவில்லை இரட்டை இலை பிரச்னை.. ஏங்கி நிற்கும் ஓபிஎஸ்..

தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றை எழுத வேண்டுமென்றால் திராவிட இயக்கங்கள் இல்லாமல் நிறைவு பெறாது. அதுவும் திமுக - அதிமுக எனும் இந்த இரண்டு கட்சிகள் தான் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டை ஆண்டு வருகின்றன.

புரட்சித் தலைவர் எம்ஜிஆரால் 1972-ல் தொடங்கப்பட்டு இப்போது பொன்விழாவை தாண்டி நடைபோட்டுக் கொண்டிருக்கிறது அதிமுக. எம்ஜிஆருக்குப் பிறகு ஜெயலலிதா எனும் மாபெரும் ஆளுமை அக்கட்சியை கட்டியாண்டார். 2016-ல் அவரது மறைவுக்குப் பிறகு தான் அதிமுக எனும் ஆலமரம் ஆட்டம் கண்டது. 


ஜெயலலிதாவுடன் பயணித்த சசிகலா கட்சியை கட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்க அதற்கு முதலில் முட்டுக்கட்டை போட்டது ஓ.பன்னீர்செல்வம். அவரை ஓரம்கட்டி தனக்கு இணக்கமாக இருப்பார் என நினைத்து எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் நாற்காலிக்கு கொண்டு வந்தார் சசிகலா. வந்த சில மாதங்கள் அமைதியாகத் தான் இருந்தார். ஆனால் அட்டகாசமான காய் நகர்த்தல்கள் மூலம் சசிகலாவை அரசியல் வனவாசம் போக வைத்தார் எடப்பாடி பழனிசாமி. 

அதன்பிறகு எடப்பாடி பழனிசாமியின் இணைந்து துணை முதலமைச்சராக ஆட்சியிலும், ஒருங்கிணைப்பாளராக கட்சியிலும் பணியாற்றி வந்தார் ஓபிஎஸ். 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்குள் தலைமை பதவி யாருக்கு என கேள்வி எழுந்தது. பல்வேறு அரசியல் சதுரங்க நகர்வுகளுக்குப் பிறகு அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் விலக்கப்பட்டார். கட்சியின் பொருளாளர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளும் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டது. 

இதையும் படிங்க: ‘யார் அந்த சார்?’ ஆளுங்கட்சிக்கு தலைவலி கொடுக்கும் அதிமுகவின் கோஷம்...

அன்று தொடங்கி அதிமுகவை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார் ஓபிஎஸ். ஆனால் தொண்டர் பலமும், கட்சி நிர்வாகிகள் பலமும் அவருக்கு கை கொடுக்கவில்லை என்பதே உண்மை. வெறும் சட்ட நடவடிக்கைகள் மூலமாக அவ்வப்போது தன்னுடைய இருப்பை காட்டிக் கொண்டிருந்தார் ஓபிஎஸ். குறிப்பாக இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் உரிமைகோர முடியாது என்பது அவரது முறையீடுகளில் ஒன்றாக இருந்தது. உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம் என பல சுற்றுகளை இந்த கோரிக்கை முட்டி வந்தது.

இந்த நிலையில் இரட்டை இலை சின்னம் தொடர்பாக பதில் அளிக்கும்படி தேர்தல் ஆணையம் இருதரப்பிற்கும் உத்தரவிட்டிருந்தது. இதில் ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில், கட்சி உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்புகளுக்கு முழுமையாக 5 ஆண்டுகள் பதவிக்காலம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், பொதுக்குழுவின் தீர்மானம் மூலமாக ஒருங்கிணைப்பாளர்கள் பதவியை நீக்க முடியாது எனவும், அவ்வாறு நீக்கியது செல்லாது எனவும் வலியுறுத்தி உள்ளார். எடப்பாடி பழனிசாமி வசம் உள்ள அதிமுக சட்டவிரோதமானது என்றும், இரட்டை இலை சின்னம் கட்சி ஆவணங்களின்படி தனக்கே சொந்தம் என்றும் கூறியுள்ளார். 



2021 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு நாடாளுமன்ற தேர்தலும் நடந்து முடிந்து விட்டது. அடுத்த 2026 தேர்தலுக்கு கட்சிகள் தயாராகியும் வருகின்றன. ஆனாலும் தன் முயற்சியை சற்றும் தளரவிடாத விக்ரமாதித்யன் போல இரட்டை இலை என்ற ஒரே கோரிக்கையை முன்வைத்து டெல்லியில் முகாமிட்டும், தூதுவிட்டும் காத்துக் கொண்டிருக்கிறார் ஓபிஎஸ். அதேசமயம் எதிர்க்கட்சி தலைவராகவும் அதிமுகவின் பொதுச்செயலாளராகவும் 2026 தேர்தலை எதிர்கொள்ள ஜரூர் வேகத்தில் களமிறங்கி உள்ளார் எடப்பாடி பழனிசாமி. கட்சியின் உறுப்பினர் சேர்க்கையை அதிகரிப்பதும், உள்கட்டமைப்பை பலப்படுத்துவது, தேர்தல் வியூகங்களை வகுப்பது என பல்வேறு குழுக்களை உருவாக்கி அவர் தனி ட்ராக்கில் பயணப்பட்டு வருகிறார். 

அரசியல் பெருங்கடலில் மோட்டார் பொருத்திய படகுகள் ஏற்கனவே பயணத்தை  தொடங்கி விட, இரட்டை இலை எனும் துடுப்புக் கிடைக்கும் என எதிர்பார்ப்போடு கரையில் நிற்கிறார் ஓபிஎஸ்.

இதையும் படிங்க: ஜெயலலிதா இருந்திருந்தால் நடக்குற கதையே வேற ..கட்சியை இணைப்பேன்..சசிகலா சூளுரை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share