மிரட்டினால் பயப்பட நாங்க அதிமுக இல்ல திமுக.. பாஜக அரசை விளாசி தள்ளிய உதயநிதி ஸ்டாலின்.!
தமிழகத்தில் இந்தியை அனுமதித்தால் சூழ்நிலை வேறு மாதிரி மாறிவிடும்.
வட மாநிலத்தில் தொகுதிகள் உயர்த்தப்பட்டால் தமிழகத்திலும் உயர்த்தப்பட வேண்டும் என்று தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி முன்னிட்டு சென்னையில் நலத்திட்ட உதவி வழங்கும் பொதுக்கூட்டம் நநடைபெற்றது. இக்கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசினார். "தென்னகத்திலிருந்து ஒரு முதுகெலும்புள்ள தைரியமான முதல்வர் வந்துள்ளார். மத்திய அரசு மிரட்டினால் பயப்பட நாங்கள் அதிமுக அல்ல. இது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் ஆட்சி. பாசிசத்தின் மிரட்டலுக்கு தமிழக மக்கள் ஒருபோதும் அடிபணிய மாட்டார்கள்.
தமிழகத்தில் இந்தியை அனுமதித்தால் சூழ்நிலை வேறு மாதிரி மாறிவிடும். வட மாநிலங்கள் போன்ற நிலை இங்கும் வந்துவிடும். புதிய கல்விக் கொள்கை மூலம் குறுக்கு வழியில் இந்தி திணிப்பை புகுத்த மத்தியில் உள்ள பாஜக அரசு முயற்சி செய்கிறது. எப்படியாவது இந்தியைத் திணித்து, நம் உரிமைகளைச் சீர்குலைக்க பாஜக முயற்சிக்கிறது.
மத்திய அரசிடம் நம்முடைய நிதி உரிமையைத்தான் நாம் கேட்கிறோம். கூடுதலான நிதியை கேட்கவில்லை. தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு, தொகுதி மறு வரையறை போன்றவற்றை புகுத்த மத்திய அரசு துடிக்கிறது. நாட்டில் 543 தொகுதிகள் இருக்கிறது. இதில் தமிழகத்தின் தொகுதிகள் எண்ணிக்கை 31ஆக குறைய வாய்ப்பு இருக்கிறது. மத்திய அரசு திட்டமிட்டு இதைச் செய்து வருகிறது. 850 இருக்கைகளோடு புதிய நாடாளுமன்றம் அமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நாம படிக்கிறப்ப ஸ்கூலுக்கு வெளியே கம்மர்கட் வித்தாங்க.. இப்போ கஞ்சா விக்கிறாங்க.. திமுக அரசை டாராக கிழித்த அன்புமணி.!
தொகுதி மறுவரையால் தமிழ்நாட்டுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று அமித்ஷா சொல்கிறார். ஆனால், தெலங்கானா வந்த பிரதமர் மோடி மறுவரை செய்தால் தென்னிந்தியாவில் 100 தொகுதிகள் குறையும் என்று கூறினாரே, இதில் எது உண்மை ? இதில் அவர்கள் இரட்டை வேடம் போடுகிறார்கள். அதைத்தான் திமுக எதிர்க்கிறது, வட மாநிலத்தில் தொகுதிகள் உயர்த்தப்பட்டால் தமிழகத்திலும் உயர்த்தப்பட வேண்டும் என்று தான் கேட்கிறோம். இதற்காகத்தான் வருகிற 5ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்தை முதல்வர் ஏற்பாடு செய்துள்ளார்." என்று உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
இதையும் படிங்க: முதல்வரே டிராமா போட தயாராகிவிட்டார்... பின்னணியைச் சொல்லி தெறிக்கவிட்ட வானதி சீனிவாசன்.!