தோண்ட தோண்ட முறைகேடுகள்.. 39,000 புரோக்கர்கள் பிளாக் லிஸ்ட்.. அதிர்ச்சியில் திருமலை திருப்பதி..!
திருமலை திருப்பதியில் பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்ட 39,000 புரோக்கர்கள் ப்ளாக் லிஸ்ட்டில் வைக்கப்பட்டுள்ளனர். அனைவரது மீதும் கிரிமினல் வழக்கு தொடர முடியாது என்றாலும் பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆந்திரா மாநிலம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் உள்ள கோசாலாவில் 100 பசுக்கள் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்ததாக முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் பூமணா கருணாகர ரெட்டி குற்றம் சாட்டி இருந்தார். பசுக்கள் முறையாக பராமரிக்கப்படுவது இல்லை என்றும் தெரிவித்திருந்தார். இது ஆந்திராவில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தில் செயல் அதிகாரி ஷியாமளா ராவ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது ஜே.இ.ஓ. வீரபிரம்மம், துணை வன அதிகாரி மற்றும் பொறுப்பு கோசாலை இயக்குநர் ஸ்ரீனிவாசலு, வி.ஜி.ஓ விஜிலன்ஸ் ராம்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
முந்தைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் கோசாலையில் பசுக்கள் குடிக்கப் பயன்படுத்தும் தண்ணீர் பாசி படிந்திருந்தாலும், புழுக்கள் இருந்தாலும் கண்டுகொள்ளவில்லை. கோயிலுக்கு கோமாதா என்ற திட்டதில் பல்வேறு கோயிலுக்கு 196 பசு மாடுகள் வழங்கினர். ஒருமுறை மாடுகளை வழங்கினால் அவை எவ்வாறு பராமரிக்கப்படுகிறது என்பதை கண்காணிக்க வேண்டும். ஆனால் அவர்கள் அதனை கண்காணிக்கவில்லை.
கோசாலையில் விஜிலென்ஸ் அதிகாரிகள் உள்ளே செல்லக்கூட அனுமதிக்கப்படவில்லை. இந்துக்களின் உணர்வுகளைப் பாதிக்கும் விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டாமா? மாட்டுத் தொழுவ வளாகத்தைச் சுற்றி மருந்துகள் சிதறிக் கிடந்தன. மார்ச் 2021 முதல் மார்ச் 2024 வரை மிகப்பெரிய முறைகேடுகள் மோசடிகள் தேவஸ்தானத்தில் நடந்துள்ளன.
இதையும் படிங்க: திருப்பதி கோவில் இனி இந்துக்களுக்கு மட்டுமே.. சந்திரபாபு நாயுடு அதிரடி!!
கடந்த ஐந்து ஆண்டுகளில் இறந்த மாடுகள் பற்றிய விவரங்கள் மறைக்கப்பட்டன. பசுக்கள் இல்லாத பசுத் தொழுவங்களுக்கு தீவனம் என்ற பெயரில் நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டது. முந்தைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில், தகவல் தொழில்நுட்பத் துறையில் உயர் மட்ட அதிகாரிகளை நியமிப்பதற்கான விதிகள் மீறப்பட்டன. பொது மேலாளர் நிலை அதிகாரிகளின் நியமனங்களில் முறைகேடுகள் நடந்தன.
தகவல் தொழில்நுட்ப துறையின் தோல்வியால் மிகப்பெரிய முறைகேடுகள் நடந்தன. ஒரு புரோக்கர் 50 முறை சேவை டிக்கெட்டைப் பெற்றார். 200 முறை அறைகள் பெற்றுள்ளார். அவ்வாறு புரோக்கர்கள் இல்லாமல் தரிசனம், அறைகள் பெறமுடியாத சூழல் இருந்தது. இதன் காரணமாக 39 ஆயிரம் புரோக்கர்கள் கண்டறிந்து பிளாக் லிஸ்ட்டில் வைக்கப்பட்டுள்ளது. அனைவரது மீதும் கிரிமினல் வழக்கு தொடர முடியாது என்றாலும் பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பசு நெய் கொள்முதலில் முறைகேடுகள் நடந்தன. அன்னத்தான அரிசி, பருப்பும் தரம் மிகவும் மோசமாக இருந்தது. சாமிக்கு படைத்த நைவேத்தியம் பிரசாதம் இயற்கை பொருட்கள் கொண்டு தயாரிக்கப்பட்டதாக கூறி பல முறைகேடுகள் செய்யப்பட்டன. ₹3 கோடி மதிப்புள்ள பொருட்களை நன்கொடையாக வழங்கி ₹25 கோடி மதிப்புள்ள நன்கொடையாளர்களுக்கான முன்னுரிமை பாஸ் புத்தகம் 85 பெயரில் வழங்கப்பட்டுள்ளது.
ஜூன் 2024 இல் நான் செயல் அதிகாரியாக பொறுப்பேற்பதற்கு முன்பு முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்தேன். அப்போது அவர் தேவஸ்தான அமைப்புகள் மிகவும் களங்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். அவை சரி செய்யப்பட வேண்டும் எனக் கூறினார். அதன்படி கடந்த பத்து மாதங்களில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது.
தற்போது தேவஸ்தானத்திற்கு ஏற்பட்ட களங்கத்தை போக்க நடவடிக்கை எடுத்து தரமான நெய், அரிசி, பருப்பு உள்ளிட்டவை வாங்கப்பட்டு தரமான பிரசாதம் தயாரிக்கப்படுகிறது. உணவு பொருட்கள் தரம் சோதனை செய்ய நவீன ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் கருத்துகளை கேட்டு முறைக்கேடு இல்லாமல் சேவைகளை மேம்படுத்தி உள்ளோம். ஆனால் முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் கருணாகர் ரெட்டி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் தேவஸ்தானத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர் என்றார்.
தேவஸ்தான கோசாலையில் 100 பசுக்கள் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்ததாக முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் பூமணா கருணாகர ரெட்டி கூறிய குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றது. இதனால் உலகம் முழுவதும் பரவியுள்ள ஏராளமான இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாகும்.
மார்ச் 2021 முதல் மார்ச் 2024 வரை கோசாலையில் ஏராளமான ஊழல் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டது தேவஸ்தான விஜிலென்ஸ் அறிக்கையுடன் சமர்ப்பித்த வீடியோ கிளிப்பிங் மற்றும் புள்ளிவிவர ஆதாரங்களின் வெளியிட்டார். சில நன்கொடையாளர்கள் தேவஸ்தானத்திற்கு வயதான மற்றும் நோய்கள் தாக்கிய பசுக்களை நன்கொடையாக வழங்கின்றனர். இதுபோன்ற வகை பசுக்களை தானம் செய்வதால், சராசரியாக ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 15 பசுக்கள் இறக்கின்றன.
2024 ஆம் ஆண்டில் எஸ்.வி. கோசாலையில் 179 பசுக்கள் இறந்தது. 2025 ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் சுமார் 43 பசுக்கள் அவற்றின் வயது மற்றும் நோய்களால் இறந்தன. இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 59 கன்றுகளும் பிறந்தன. உண்மை இவ்வாறு இருக்கும்போது, முன்னாள் தலைவர் பசுக்களுக்கான தீவனத்தை சரியாக வைக்காததால் கால்நடைகள் இறந்ததாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தது துரதிர்ஷ்டவசமானது.
உண்மையில், எஸ்.வி. கோசாலாவில் முந்தைய ஆட்சியின் போது விஜிலென்ஸ் அறிக்கையில் பல்வேறு முறைக்கேடுகள் நடந்ததாக தெளிவாக கூறுகிறது. அவர்களுக்கு உண்மையிலேயே பசுக்கள் மீது அக்கறை கொண்டிருந்தால், அவர்களின் ஆட்சிக் காலத்தில் நடந்த இந்த முறைகேடுகள் குறித்து ஏன் எந்த விசாரணையும் நடத்தவில்லை. எஸ்.வி. கோசாலைக்கு புதிய இயக்குனர் வந்த பிறகு, இந்த பிரச்சினைகள் அனைத்தும் தற்போது தெரிய வந்தன. தற்போது அனைத்து குறைபாடுகளையும் நாங்கள் சரிசெய்து வருகிறோம் என்றார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் முதல் முறை... பேருந்து பயணிகளுக்கு குட் நியூஸ்.. போக்குவரத்து துறை எடுத்த அதிரடி முடிவு...!