வக்ஃபு திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு.. திரிணமூல் எம்.பி. மஹூவா மொய்த்ரா உச்ச நீதிமன்றத்தில் மனு..!
வக்ஃபு திருத்தச் சட்டத்துக்கு எதிராக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையில் நீதிபதிகள் சூர்யகுமார் மற்றும் கே.வி.விஸ்வநாதன் அமர்வு வரும் 16ம் தேதி வக்ஃபு திருத்தச் சட்டத்துக்கு எதிராகத் தாக்கல் செய்த 10 மனுக்களை விசாரிக்க இருக்கிறது குறிப்பிடத்தக்கது. இந்த 10 மனுக்களில் ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாசுதீன் ஒவைசியின் மனு, சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் ஜியா உர் ரஹ்மான் பார்க் ஆகியோரின் மனுக்களும் அடங்கும்.
திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மொய்த்ரா சார்பில் கடந்த 9ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் வக்ஃபு சட்டத்தை எதிர்த்து மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் “சர்ச்சைக்குரிய இந்த சட்டத்திருத்தம் தீவிரமான குறைபாடுகளுடன் நிறைவேற்றப்பட்டது மட்டுமல்லாமல், அரசிலமைப்புச்சட்டம் வழங்கிய பல்வேறு உரிமைகளையும் மீறியுள்ளது. சட்டம் இயற்றும்போது நாடாளுமன்ற நடைமுறைகளை மீறியுள்ளது, அரசியலமைப்புக்கு முரணானது.
இதையும் படிங்க: வக்ஃபு சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்யும்.. ப.சிதம்பரம் நம்பிக்கை..!
வக்ஃபு திருத்த மசோதா மீதான நாடாளுமன்றக் கூட்டு குழுவின் வரைவு அறிக்கையை பரிசீலித்து நாடாளுமன்றம் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், கூட்டுக்குழுவின் தலைவர், நாடாளுமன்ற விதிகள் மற்றும் நடைமுறைகளை மீறிவிட்டார்.
வக்ஃபு திருத்தச் சட்டம், அரசியலமைப்புச்ச ட்டம் வழங்கிய பிரிவு 14 சட்டத்தின் முன் அனைவரும் சமம், 15(1) வேறுபாடு காட்டக்கூடாது, 19(1)(ஏ) மற்றும்(சி) பேச்சு சுதந்திரம் மற்றும் ஒருங்கிணைப்பு, பிரிவு 21 வாழும் உரிமை, தனிநபர் சுதந்திரம், 25 மற்றும் 26 பிரிவு மதச்சுதந்திரம், 29 மற்றும் 30 சிறுபான்மை உரிமை, 300ஏ பிரிவு சொத்துரிமை ஆகியவற்றை இந்தச் சட்டம் மீறுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வக்ஃபு திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஏற்கெனவே மக்களவை எம்.பி. அசாசுதீன் ஒவைசி, ஆம்ஆத்மி கட்சி எம்.பி. அமனத்துல்லா கான், சிவில் உரிமை பாதுகாப்பு அமைப்பு தலைவர் அர்ஷத் மதானி, சமஸ்தா கேரளா ஜமைத்துல் உலேமா அமைப்பின் அஜும் கதாரி, தியாப் கான் சல்மானி, முகமது ஷபி, முகமது பைசுல்ரஹிம், ஆர்ஜேடி தலைவர் மனோஜ் குமார்ஜா ஆகியோரும் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்துள்ளன். மேலும், அனைத்து இந்திய முஸ்லிம் தனியுரிமை சட்ட வாரியம், ஜமைத் உலமா ஐ ஹிந்த், திமுக, காங்கிரஸ் எம்.பி. இம்ரான் பிரதாப்கார்கி, முகமது ஜாவித் ஆகியோரும் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
இதையும் படிங்க: வக்ஃபு திருத்த மசோதாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு..! காங்கிரஸ் எம்.பி ஓவைசி தாக்கல்..!