×
 

காங்கிரஸூம் ஆம் ஆத்மியும் ஒன்னா சேர்ந்திருந்தா இப்படி நடந்திருக்குமா..? டெல்லி தேர்தல் முடிவால் நொந்துபோன திருமாவளவன்.!

டெல்லி தேர்தல் முடிவிலிருந்து இண்டியா கூட்டணி படிப்பினைக் கற்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “டெல்லி மாநில தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த ஆம் ஆத்மி தோல்வி அடைந்து பாஜக ஆட்சி அமைக்கிறது. இது ஆம் ஆத்மி கட்சியின் தோல்வி மட்டுமல்ல, இண்டியா கூட்டணியின் தோல்வி ஆகும். இதிலிருந்து இண்டியா கூட்டணி பாடம் கற்க வேண்டும். டெல்லி மாநிலத் தேர்தல் முடிவு இண்டியா கூட்டணியின் ஒற்றுமையை வலியுறுத்துகிறது என்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சுட்டிக் காட்டுகிறோம்.

இந்தச் சூழலில் காங்கிரஸ் கட்சி உடனடியாக இண்டியா கூட்டணி கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம். டெல்லியில் ஆட்சி நடத்தி வந்த ஆம் ஆத்மியை அதிகாரத்திலிருந்து இறக்குவதற்காக பாஜக தனது அத்தனை பலத்தையும் பயன்படுத்தியது. முதல்வராக இருந்த அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்டவர்கள் மீதும் அமைச்சர்கள் மீதும் வழக்குகள் போடப்பட்டு சிறைப்படுத்தப்பட்டனர்.

அதிகாரிகள் நியமனம், அன்றாட நிர்வாகம் ஆகியவற்றைச் செய்வதற்கு டெல்லி அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அளித்தத் தீர்ப்பை ரத்து செய்வதற்காக நாடாளுமன்றத்தைப் பயன்படுத்தி உடனடியாக சட்டத் திருத்தத்தை பாஜக அரசு கொண்டு வந்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆம் ஆத்மி அரசை செயல்பட விடாமல் முடக்கியது. இந்த அடாவடிகளுக்கு இண்டியா கூட்டணியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் காங்கிரஸ் கட்சி பெரிதாக எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. காங்கிரஸ் கட்சி தனக்கு போட்டியாக ஆம் ஆத்மியைப் பார்த்ததும், காங்கிரஸ் கட்சி பலவீனமாவது தனக்கு சாதகம் என ஆம் ஆத்மி கருதியதுமே இதற்குக் காரணம்.

இண்டியா கூட்டணியில் ஆம் ஆத்மி இடம்பெற்ற போதும் அது பொருந்தாக் கூட்டணியாகவே இருந்தது. டெல்லியில் இப்போது பாஜக ஆட்சி அமைப்பதற்கு ஆம் ஆத்மி- காங்கிரஸ் கட்சிகள் இடையே ஒற்றுமை இல்லை என்பதே முதன்மையான காரணம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கருதுகிறது.
டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மியை விட சுமார் இரண்டு சதவீத வாக்குகளையே பாஜக கூடுதலாகப் பெற்றிருக்கிறது. அங்கு தனியாகப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி சுமார் ஏழு சதவீத வாக்குகளைப் பெற்றிருக்கிறது. அரவிந்த் கேஜ்ரிவால் போட்டியிட்ட தொகுதி உட்பட 13 தொகுதிகளில் ஆம் ஆத்மியின் தோல்விக்கு காங்கிரஸ் பெற்ற வாக்குகளே காரணமாகியுள்ளன.

நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததற்குப் பிறகு இண்டியா கூட்டணி கூட்டத்தைக் கூட்டுவதில் காங்கிரஸ் கட்சி அக்கறை காட்டவில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்குப் பெரும்பான்மை கிடைப்பதைத் தடுத்த போதிலும் அதன் பிறகு நடைபெற்ற மாநிலத் தேர்தல்களில் பாஜக வெற்றி பெறுவதற்கு இண்டியா கூட்டணியே வழி வகுத்தது என்பதே கசப்பான உண்மையாகும்.மக்கள் நலனை விடத் தத்தமது கட்சிகளின் வெற்றியையே இண்டியா கூட்டணி கட்சிகள் முதன்மையாகக் கருதுகின்றன என்பதையே இது காட்டுகிறது. இதே நிலை நீடித்தால் அடுத்தடுத்து பிஹாரிலும் உத்தரப்பிரதேசத்திலும் நடைபெறவிருக்கும் தேர்தல்களிலும் இண்டியா கூட்டணி வெற்றி பெறுவது சாத்தியமில்லாமல் ஆகிவிடும். மக்களும்கூட நம்பிக்கை இழந்து விடுவார்கள். எனவே டெல்லி தேர்தல் முடிவுகளை இண்டியா கூட்டணி கட்சிகள் ஒரு படிப்பினையாக எடுத்துக்கொள்ள வேண்டும். இண்டியா கூட்டணியின் கலந்தாய்வுக் கூட்டத்தைக் கூட்டுவதற்கு காங்கிரஸ் கட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்." என்று அறிக்கையில் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

​​​

இதையும் படிங்க: இந்தியா கூட்டணிக்கு முழுக்கு... மாநில அரசியல் கட்சிகளுக்கு அதிகாரம்... காங்கிரஸின் புதிய முடிவு

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share