ஆளுநர் வெளிநடப்பு மடைமாற்றம் செய்ய நடத்தப்பட்டதா?
தேசிய கீதம் பிரச்சனை சட்டம் என்ன சொல்கிறது? ராஜ்பவன் ட்வீட் திருத்தப்பட்டது ஏன்?
எப்போதெல்லாம் திமுகவுக்கு பிரச்சனை வருகிறதோ அப்போது எல்லாம் மடைமாற்றும் வேலையை ஆளுநர் செய்வார் என்றும், அதே வேலையை இன்றும் செய்துள்ளார் என்ற விமர்சனம் ஆளுநர் வெளிநடப்பு குறித்து வைக்கப்படுகிறது. சட்டத்தில் இல்லாத ஒன்றை வலியுறுத்தி, சிறுபிள்ளைத்தனமாக வெளிநடப்பு செய்து அதிமுக போராட்டத்தை பின்னுக்குத் தள்ளி ஆளுநர் செயல்பட்டுள்ளார் என்கிற விமர்சனமும் வைக்கப்படுகிறது. எது உண்மை? சட்டம் என்ன சொல்கிறது.. பார்ப்போம்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தான் பொறுப்பேற்றதிலிருந்து மாநில சட்டமன்றத்தின் உரிமைகளை மதிக்காமலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் உரிமைகளுக்கு உரிய மரியாதை கொடுக்காமல், அரசமைப்பு சட்டத்திற்கு எதிராக அடிக்கடி மீறி நடப்பதைத வாடிக்கையாக வைத்துள்ளார் என்கிற விமர்சனம் அரசியல் விமர்சகர்களால் வைக்கப்படுகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு தான் முழு அதிகாரம் உள்ளது. அதன் தலைவரான முதல்வர் தான் தீர்மானிக்கும் அதிகாரத்தில் உள்ளவர். ஆளுநர் சட்டத்தை அமல்படுத்தும் இடத்தில் ஜனாதிபதிக்கு ஒரு துணையாக இருக்கும் பதவிக்குரியவர் என்பதை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அடிக்கடி மறந்து சர்ச்சையில் சிக்குவது வாடிக்கையான ஒன்றாக உள்ளது.
இதையும் படிங்க: தேசிய கீதம் முதலில் இசைக்கவில்லை...உரையை வாசிக்காமல் வெளியேறிய ஆளுநர்...காரணம் இதுவா?
செந்தில் பாலாஜி வழக்கில் அவர் கைது செய்யப்பட்ட பிறகு அவர் இலாகா இல்லாத அமைச்சராக முதல்வர் அறிவித்த பொழுது, அதை ஏற்க மாட்டேன் அவரை பதவி விட்டு நீக்க வேண்டும் என்று கடிதம் எழுதி சர்ச்சையில் சிக்கினார் ஆளுநர். இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் முதல்வருக்கும் தான் இதில் தீர்மானிக்கும் அதிகாரம் உள்ளது, ஆளுநருக்கு அல்ல என்று ஒரு தீர்ப்பை வழங்கியது. அதன் பின்னர் இரண்டாவது சம்பவம் அமைச்சர் பொன்முடி மூன்றாண்டு தண்டனை பெற்று தகுதி இழப்பு செய்யப்பட்ட பின் அந்த தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்த பின், அவருக்கு மீண்டும் அமைச்சர் பதவி பிரமாணம் அளிக்க முதல்வர் கடிதம் அனுப்பியபோது அதை ஏற்க மறுத்து உச்ச நீதிமன்றம் வரை அந்த விவகாரம் சென்றது.
அப்பொழுது உச்ச நீதிமன்றம் ஆளுநருக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றம் தான் அதிகாரம்மிக்கது ஆளுநர் தன் வரம்பை மீறி செயல்படுகிறார், எங்களுக்கு கற்றுத் தருகிறாரா? தண்டனை நிறுத்தினால் மீண்டும் அவருக்கு பதவியை வழங்க வேண்டியது தான் அவருடைய பணி, அதை மீறி நடப்பது சரி அல்ல, என்று கடுமையாக சுட்டிக்காட்டியது. இதுபோன்ற பல விவகாரங்களில் ஆளுநர் ரவி அடிக்கடி சிக்கிக் கொள்கிறார்.
இது அல்லாமல் தமிழக அரசுக்கு எப்பொழுது எல்லாம் பிரச்சனை வருகிறதோ, அப்பொழுதெல்லாம் ஆளுநர் புது பிரச்சனை கிளம்பி அந்த விவகாரத்தை மடைமாற்றி தமிழக அரசை காப்பாற்றி வருகிறார் என்கிற குற்றச்சாட்டும் அவ்வப்போது எழுவது உண்டு. அந்த வகையில் சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தமிழக அரசு கடும் பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. ஒட்டுமொத்தமாக எதிர்க்கட்சிகளும், தோழமைக் கட்சிகளும் இந்த விவகாரத்தில் ஒரே கருத்தை தெரிவித்து நீதி கேட்டு போராடி வருகின்றனர். அதிமுகவின் ’யார் அந்த சார்?’ என்கிற அந்த ஹேஷ்டேக் பிரபலமாகி அது சட்டசபை வரை எதிரொலித்து வருகிறது.
இந்நிலையில் இன்று சட்டமன்றம் கூடிய பொழுது, அதிமுக ’யார் அந்த சார்?’ என்கிற பேட்ச் அணிந்து, பதாகைகளை பிடித்து போராட்டம் நடத்த அவைக்கு கொண்டு வந்தனர். ஆனால் ஆளுநர் தேசிய கீதம் விவகாரத்தில் வெளிநடப்பு செய்தது இந்த போராட்ட செய்தியை பின்னுக்கு தள்ளிவிட்டது. ஆளுநர் இந்த விவகாரத்தில் திமுக அரசை காப்பாற்றி, தானும் தன்னை காப்பாற்றிக் கொண்டார் என்கின்ற ஒரு விமர்சனமும் வைக்கப்படுகிறது.
ஏனென்றால் வேந்தர் என்கிற முறையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் நியமிக்கப்படாததும், அண்ணா பல்கலைக்கழக பாதுகாப்பு விவகாரங்களில் இந்த பிரச்சனைக்கு ஆளுநரும் பொறுப்பேற்க வேண்டும் என்று ஆளுநர் மீது தோழமைக் கட்சியிலும், திமுகவிலும் குற்றசாட்டு எழுந்து வருகிறது. இன்று சட்டமன்றத்திற்கு வந்த ஆளுநரை சட்டமன்றத்திற்குள் நுழையும் பொழுதே பண்ருட்டி வேல்முருகன் வேந்தர் என்கிற முறையில் ஆளுநர் அண்ணா பல்கலைக்கழக விவகாரத்திற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று கண்டித்து கோஷமிட்டார்.
மேலும் அண்ணா பல்கலை விவகாரத்தில் அதிமுக பதாகைகளை ஏந்தி நின்ற பொழுது அதுவும் வேந்தர் என்கிற முறையில் தன்னை நோக்கியும் திரும்பும் என்று ஆளுநர் எண்ணியதால் இந்த விவகாரத்தை மறைமுகமாக தேசிய கீதம் பிரச்சனையை சொல்லி வெளிநடப்பு செய்துள்ளதாக ஒரு சாரார் கருத்து வைக்கின்றனர். பொதுவாக பாராளுமன்றத்தில், சட்டமன்றத்தில் ஜனாதிபதி, ஆளுநர் கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் முதலில் தேசிய கீதம் இசைக்கப்படுவதும், நிகழ்ச்சி முடிவில் தேசிய கீதம் இசைத்து முடித்து வைக்கப்படுவதும் வாடிக்கையான ஒன்று. மற்ற மாநிலங்களில் உள்ள சட்டமன்றங்களில் இந்த நடைமுறை கடைபிடிக்கப்படுவதும், பாராளுமன்றத்தில் இந்த நடைமுறை உள்ளதாகவும் ஆளுநர் தரப்பு எடுத்து வைக்கும் வாதமாக உள்ளது. நியாயமாகவும் உள்ளது.
ஆனால் இந்த வாதத்தை ஆளுநர் தரப்பு எடுத்து வைக்கும் பொழுது இது அரசியலமைப்பு சட்டத்தில் சொல்லப்பட்ட ஒன்று, இதை மீறி தமிழக சட்டமன்றத்தில் முதலில் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை, இது அரசியல் சட்டத்தையும், தேசிய கீதத்தையும் அவமதிக்கும் செயல் என்கிற வார்த்தையை போட்டு ட்ரீட் செய்து, பின்னர் அதை நீக்கி அரசியல் அமைப்பு சட்டத்தில் சொல்லப்பட்ட ஒன்று என்கிற வார்த்தையை நீக்கி மீண்டும் ட்ரீட் செய்தனர். இரண்டாவது ட்ரீட் சட்ட நடைமுறையில் உள்ள விவகாரம் என்பது ஆளுநர் மாளிகை வட்டாரம் உணர்ந்ததால் இந்த திருத்தம் செய்யப்பட்டது.
ஆளுநர் தேசிய கீதம் முதலில் இசைக்கப்பட வேண்டும் என்று சொல்வதில் நியாயமான கருத்து உள்ளது, அனைவரும் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் இதை ஆளுநர் சட்டத்தை காரணம் காட்டி வலியுறுத்தி சொல்ல முடியாது. காரணம் முதலில் தேசிய கீதம் இசைக்கப்படுவதும், கடைசியில் மீண்டும் இசைக்கப்பட வேண்டும் என்பதும் அரசியலமைப்பு சட்டத்தில் சொல்லப்படவில்லை. கடைசியில் இசைக்கப்பட வேண்டும் என்பது கட்டாயம்.
தேசிய கீதத்திற்கு என்று கோட் ஆப் காண்டாக்ட் என்று ஒன்று உண்டு. அதிலும் சட்டமன்றம் தொடங்கும் பொழுது தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று எங்கும் சொல்லப்படவில்லை. ஆனால் ஜனாதிபதி மற்றும் ஆளுநர்கள் கலந்து கொள்ளும் பொது நிகழ்ச்சிகளில் முதலில் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும், இறுதியிலும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. இது சட்டமன்றத்திற்கு பொருந்துமா என்றால் பொருந்தாது. இதை மற்ற மாநில சட்டமன்றங்கள் கடைபிடிக்கின்றன என்ற வாதத்தையும் இதில் வைக்க முடியாது. அது அந்தந்த மாநில சட்டமன்றங்கள் முடிவு செய்து கொள்ள வேண்டிய விஷயம். இது மரபுத்தானேயொழிய, சட்டம் அல்ல.
இந்த விவகாரத்தில் தமிழக சட்டமன்றத்தில் முதலில் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்பது ஆளுநரின் கருத்தை ஏற்பதும், ஏற்காததும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக சட்டமன்றத்தின் தலைவரான முதல்வர் தீர்மானிக்க வேண்டியது. தமிழக சட்ட சபையில் இறுதியில் தான் தேசிய கீதம் இசைக்கப்பட்டு வருகிறது. இது ஒரு மரபாக உள்ளது. இந்த மரபை ஏற்பதும் மறுப்பதும் தமிழக சட்டமன்றத்தின் விருப்பம். இதை ஒரு கோரிக்கையாக ஆளுநர் வைக்கலாமே தவிர வேறு எந்த காரணத்தைக் காட்டியும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று கூற முடியாது. இப்படி கட்டாயமாக பின்பற்ற முடியாத ஒன்றை, மரபாக மட்டுமே பார்க்கப்படும் ஒன்றை, வலியுறுத்தி ஆளுநர் வெளிநடப்பு செய்வது என்பது ஆளுநர் பதவி என்கின்ற மிக உயரிய பதவியின் மாண்பை ஆளுநர் எப்படி பார்க்கின்றார் என்பது பற்றியதாகும்.
ஆகவே சட்டமன்றத்தில் தேசிய கீதம் முதலில் இசைக்கப்பட வேண்டும் என்பது அரசியலமைப்பு சட்டத்தில் இல்லாத போது மரபாக உள்ள ஒரு விஷயத்தை தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில சட்டமன்ற கட்சியை, கடைபிடித்துதான் ஆக வேண்டும் என்று ஆளுநர் வலியுறுத்த முடியாது என்கிற நிலையில், அவரது வெளிநடப்பு என்பது விமர்சனத்திற்கு உள்ளாகிறது. இந்த விவகாரத்தில் ஆளுநர் அண்ணாபல்கலைக்கழக விவகாரத்தில் தானும் வேந்தர் என்கின்ற முறையில் குற்றச்சாட்டப்படுவோம் என்பதால் அதை தவிர்க்க மடைமாற்றம், வெளிநடப்பு செய்தாரோ என்ற கேள்வியையும் அரசியல் விமர்சகர்கள் முன் வைப்பதை நாம் மறுக்க முடியாது. ஆளுநர் உரையை படிக்காமல் தவிர்ப்பது, தொடர்ந்து தமிழக சட்டமன்றத்தை அவர் எந்த அளவுக்கு மதிக்கின்றார் என்பதை காட்டுவதாகவே உள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
இதே விவகாரத்தில் அன்புமணி ராமதாஸும் கள நிலவரத்தை சொல்லி ஆளுநருக்கு எதிராக விமர்சனத்தை வைத்துள்ளதையும் பார்க்கவேண்டும். அவரது ட்வீட்டில் “ தமிழ்நாட்டின் மரபுகளையும், தமிழக மக்களின் உணர்வுகளையும் ஆளுனர் புரிந்து கொள்ள வேண்டும். ஆளுனருக்கு உரிய மரியாதை அரசு அளிக்க வேண்டும். தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு , பெண்களுக்கு பாதுகாப்பு, படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, அரசு ஊழியர்களின் கோரிக்கைகள், உழவர்களின் எண்ணிக்கையிலடங்காத கோரிக்கைகள், பட்டியலின மக்களின் தேவைகள் என விவாதிக்கப்படுவதற்கும், செயல்படுத்தப்படுவதற்கும் ஏராளமான விவகாரங்கள் உள்ளன. அவற்றை விடுத்து, கவனத்தை திசைதிருப்பும் வகையிலான எந்த செயலையும் ஏற்றுக் கொள்ள முடியாது. அவை தவிர்த்திருக்கப்பட வேண்டும்”. என்று தெரிவித்துள்ளதை கவனிக்க வேண்டும்.
இதையும் படிங்க: தேசிய கீதத்தை அவமதித்ததே ஆளுநர் தான்..அவருக்கு மட்டும் தான் தேச பக்தி இருக்கா..? கொந்தளித்த அமைச்சர் சிவசங்கர் ..!