திருநெல்வேலி இருட்டுக்கடை உரிமையாளர் கவிதாவின் மகள் கனிஷ்காவிற்கும், கோவையை சேர்ந்த யுவராஜ் என்பவரது மகன் பல்ராம் சிங் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் நெல்லையில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கணவர் பல்ராம் சிங் வரதட்சணை கேட்டு தன்னை கொடுமைப்படுத்தியதாக கனிஷ்கா நெல்லை காவல் ஆணையர் அலுவலகத்திலும், முதல்வரின் தனிப்பிரிவிற்கும் புகார் மனு அளித்தார்.

மேலும் தான் கணவர் பல்ராம் சிங்குடன் நல்லபடியாக வாழ வேண்டுமென்றால் நெல்லையில் இயங்கி வரும் இருட்டுக்கடை அல்வா கடையை பல்ராம் சிங்கின் பெயருக்கு எழுதித் தர வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கனிஷ்கா பரபரப்பு புகார் அளித்தார்.
இதையும் படிங்க: போதையில் பஸ் கடத்தல்.. முன்னாள் டிரைவர்கள் அட்டூழியம்.. நெல்லையில் பரபரப்பு..!

இந்தக் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த பல்ராம் சிங், அவரது தந்தை யுவராஜ் சிங், "நாங்கள் எப்போதும் அவர்களுடன் சுமூகமாக போக வேண்டும் என்றுதான் நினைத்தோம். இருட்டுக்கடையை யாரும் வாங்க முடியாது. இருட்டுக்கடை அவர்களின் பெயருக்கு மாறி 70 நாட்கள்தான் ஆகிறது. அதற்கு முன்னர் வரை சூரஜ் என்ற பெயரில்தான் அந்த கடை இருந்தது. அந்தக் கடையின் உண்மையான உரிமையாளர் சுலோச்சனா பாய். அவர்கள் இறந்ததற்குப் பிறகு பெயர் மாற்றம் நடந்தது.

அதேபோல் திருமணத்திற்காக ஒரு ரூபாய் கூட நாங்கள் வரதட்சணை வாங்கவில்லை. திருமணத்தின் போது மகளுக்காக அவர்கள் ஒரு சூட்கேஸில் நகையை கொடுத்தனர். அதில் என்ன இருந்தது என்று கூட எங்களுக்கு தெரியாது. மேலும் அந்தப் பெண்ணின் பெயரில் அன்பளிப்பாக கொடுத்த காரும்கூட அவர்களின் வீட்டிலேயேதான் இருக்கிறது. நாங்கள் 4 தலைமுறைக்கு வேண்டிய சொத்துக்களை சேர்த்து வைத்துள்ளோம். எங்களுக்கு வரதட்சணை பெற்றுத் தான் வாழ வேண்டிய அவசியமில்லை என்று பல்ராம் சிங் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இந்த நிலையில், நெல்லை இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் மருமகன் பல்ராம் சிங்குக்கு பாளையங்கோட்டை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். வரதட்சணை புகார் தொடர்பாக பல்ராம் சிங் வரும் 21ம் தேதி நெல்லை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க ஆணையிடப்பட்டது.

அதன்படி இன்று காலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார்தாரரான கனிஷ்கா ஆஜராகி விளக்கமளித்த நிலையில் 11 மணிக்கு ஆஜராக வேண்டிய பல்ராம் சிங் ஆஜராகவில்லை. அவரது சார்பில் அவரது வழக்கறிஞர் ஆஜராகி, பல்ராம் சிங் ஆஜராக 10 நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: “எனக்கு அதிகாரமே இல்ல” - பேரவையிலேயே புலம்பிய அமைச்சர் பிடிஆர்!