×
 

உண்ட வீட்டுக்கு ரெண்டகம்.. ஆறரை பவுன் நகைக்காக கொலை.. விஏஓ கதையை முடித்த சிறுவன்..!

வேடசந்தூர் அருகே ஆறரை பவுன் தங்க நகைக்காக ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரிக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து 16 வயது சிறுவன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள புளியமரத்து கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 75). பணி ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர். இவர் தனது தோட்டத்து வீட்டில் மனைவி பத்மினியுடன் வசித்து வந்தார். அதே பகுதியில் விவசாயமும் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வந்தார்.

இவரின் தோட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக புலங்கட்டி நாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவன் வேலை பார்த்து வந்துள்ளான். மேலும் வட்டி பணத்தை வசூல் செய்து கொடுக்கும் வேலையும் செய்து வந்தான். சிறுவனுக்கு உண்ண உணவும், இருப்பிடமும் கொடுத்து பார்த்துக் கொண்டார் மாரியப்பன். இந்த நிலையில் கடந்த 11-ம் தேதி மாரியப்பன் திடீரென உயிர் இழந்தார்.

வயது மூப்பின் காரணமாக மாரியப்பன் இறந்திருக்கலாம் என்று நினைத்த குடும்பத்தினர் அவரது உடலை அதே பகுதியில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்தனர். அதனைத் தொடர்ந்து மாரியப்பனின் மகன் பன்னீர்செல்வம் என்பவர் வீட்டில் பார்த்தபோது மாரியப்பன் வைத்திருந்த 6 1/2 (ஆறரை) பவுன் தங்க நகைகள் மற்றும் வட்டிக்கு பணம் கொடுத்தவர்களிடம் வாங்கி வைத்திருந்த ஆவணங்கள் மாயமாகி இருந்தன.

இதுகுறித்து அந்த 16 வயது சிறுவனிடம் பன்னீர்செல்வம் விசாரித்த உள்ளார். அப்போது அந்த சிறுவன் முன்னுக்கு பின் முரணாக பதில் சொல்லியுள்ளான். இதனால் சந்தேகம் அடைந்த பன்னீர் செல்வம் இதுகுறித்து வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

இதையும் படிங்க: பச்ச பிள்ளையை இப்படியா பண்ணுவ.. 2½ வயது குழந்தைக்கு சூடு.. அங்கன்வாடி ஊழியர் அடாவடி..!

வேடசந்தூர் போலீசார் அந்த சிறுவனை பிடித்து துருவி துருவி விசாரணை செய்தனர். போலீஸ் விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. அந்த சிறுவன் தென்னை மரத்திற்கு வைக்கும் பூச்சி மாத்திரைகளை குளிர்பானத்தில் கலந்து கொடுத்து மாரியப்பனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

மாரியப்பன் வீட்டில் வேலை பார்த்து வந்த அந்த சிறுவன் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் மாரியப்பன் வீட்டில் வைத்திருந்த 6 1/2 (ஆறரை) பவுன் தங்க நகைகளை திருடிச் சென்று வேடசந்தூரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் அடகு வைத்து 2 1/2 லட்சம் (இரண்டரை லட்சம்) பணம் பெற்றுள்ளான். மேலும் அந்தப் பணத்தை தனியாக அந்த சிறுவன் வட்டிக்கு கொடுத்து வசூல் செய்து வந்துள்ளான். 

வீட்டில் வைத்திருந்த தங்க நகைகள் மற்றும் ஆவணங்கள் மாயமானதால், தங்க நகைகளை நீ எடுத்தாயா? என்று மாரியப்பன் அந்த சிறுவனிடம் விசாரித்துள்ளார். இதனால் தன் மீது மாரியப்பன் போலீசில் புகார் செய்து விடுவாரோ என்று பயந்த அந்த சிறுவன், தென்னை மரத்திற்கு வைக்கும் பூச்சி மாத்திரைகளை வாங்கி குளிர்பானத்தில் கலந்து கொடுத்து மாரியப்பனை கொலை செய்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

அதனைத்தொடர்ந்து நேற்று போலீசார் அடக்கம் செய்த மாரியப்பனின் உடலை தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்தனர். மேலும் சிறுவன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர். 6 1/2 பவுன் தங்க நகைகளுக்காக ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரியை சிறுவன் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: போலி உணவு பாதுகாப்பு அதிகாரி அட்ராசிட்டி.. பழனி, திண்டுக்கலில் வசூல் வேட்டை.. செல்போன் பேச்சால் சிக்கியது எப்படி?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share