×
 

1984 சீக்கியர்களுக்கு எதிரான கலவரம்... காங்கிரஸ் தலைவருக்கு ஆயுள் தண்டனை..!

சஜ்ஜன் டெல்லி புறநகர்  மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் எம்.பி.யாக இருந்தார். கலவரம் தொடர்பான மற்றொரு வழக்கில் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்.

1984 சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் குமாருக்கு டெல்லியின் ரோஸ் அவென்யூ நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. 

பிப்ரவரி 21 அன்று தண்டனை குறித்த தீர்ப்பை நீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது. பாதிக்கப்பட்டவரின் தரப்பு சஜ்ஜன் குமாருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தது. பிப்ரவரி 12 அன்று சஜ்ஜன் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, திகார் மத்திய சிறை அதிகாரிகள், மரண தண்டனை வழக்குகளில் உச்ச நீதிமன்றத்தின் தேவைப்படி அவரது மன மற்றும் உளவியல் மதிப்பீடு குறித்த அறிக்கையைக் கோரியிருந்தனர். கொலைக் குற்றத்திற்கான குறைந்தபட்ச தண்டனை ஆயுள் தண்டனை, அதிகபட்ச தண்டனை மரண தண்டனை.

இந்த வழக்கு, கலவரத்தின் போது சரஸ்வதி விஹாரில் ஜஸ்வந்த் சிங், அவரது மகன் தருண்தீப் சிங் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பானது. இந்தக் காலகட்டத்தில், சஜ்ஜன் டெல்லி புறநகர்  மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் எம்.பி.யாக இருந்தார். கலவரம் தொடர்பான மற்றொரு வழக்கில் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்.

இதையும் படிங்க: மரண தண்டனையை கடைசி நேரத்தில் நிறுத்தி வைத்த நீதிபதி - மேல்முறையீட்டு மனுவால் தப்பித்த இந்திய வம்சாவளி நபர்..!

1984 சீக்கிய எதிர்ப்பு கலவரத்தின் போது சஜ்ஜன் குமாரால் தூண்டிவிட்ட ஒரு கும்பல் நடத்திய தாக்குதலில் இந்த வழக்கில் புகார் அளித்தவர் தனது கணவர் மற்றும் மகனை இழந்தார். மனுதாரர் மரண தண்டனை கோரி இருந்தார். கும்பலின் தலைவராக குற்றம் சாட்டப்பட்ட சஜ்ஜன் குமார் இனப்படுகொலை, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் கொடூரமான கொலைகளைச் செய்ய மற்றவர்களைத் தூண்டியுள்ளார். அவருக்கு மரண தண்டனையை விடக் குறைவான தண்டனை எதுவும் கிடையாது''என புகார்தாரரின் வழக்கறிஞர் எச்.எஸ்.பூல்கா கேட்டுக் கொண்டார்.

ஜஸ்வந்த் சிங் மற்றும் அவரது மகன் தருண்தீப் சிங் ஆகியோர் 1 நவம்பர் 1984 அன்று படுகொலை செய்யப்பட்டனர். டெல்லி கண்டோன்மென்ட்டின் ராஜ் நகர் பகுதியில் நடந்த கலவரம் தொடர்பான மற்றொரு வழக்கில் ஐந்து கொலைகளுக்கு சஜ்ஜன் குமார் ஏற்கனவே டெல்லி உயர் நீதிமன்றத்தால் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளதாகவும், அந்த கொலைகள் இந்த வழக்கின் கொலைகளுடன் சேர்ந்து ஒரு பெரிய படுகொலையின் சதித்திட்டத்தின் ஒரு பகுதிதான்'' என்றும் எச்.எஸ்.பூல்கா கூறுகிறார்.

வன்முறை, அதன் பின்விளைவுகளை விசாரிக்க அமைக்கப்பட்ட நானாவதி ஆணையம், டெல்லியில் 2,733 பேர் கொல்லப்பட்ட கலவரம் தொடர்பாக 587 எஃப்.ஐ.ஆர்.கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறியது. இவற்றில், 240 வழக்குகள் "தெரியாதவை" என்று மூடப்பட்டன. மேலும் 250 வழக்குகளில் மக்கள் விடுவிக்கப்பட்டனர். 28 வழக்குகளில் மட்டுமே தண்டனை விதிக்கப்பட்டது, அவற்றில் கிட்டத்தட்ட 400 பேர் தண்டிக்கப்பட்டனர். அவற்றில் 50 பேர் கொலைக் குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டனர்.

அந்த நேரத்தில் ஒரு சக்திவாய்ந்த காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சஜ்ஜன் குமார், 1984 நவம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் டெல்லியின் பாலம் காலனியில் ஐந்து பேரைக் கொன்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டார். அந்த வழக்கில், அவருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.அவரது மேல்முறையீடு இன்னும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இதையும் படிங்க: எலி ஸ்பிரே அடித்து விளையாடிய குழந்தைகள்.. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share