சுழன்று சுற்றும் சுனாமி ராட்டினம்.. அந்தரத்தில் பறந்து விழுந்த பெண்.. வினையான விளையாட்டு..!
விருதுநகர் பொருட்காட்சியில் சுனாமி ராட்டினத்தில் ஏறிய பெண் ஒருவர், தனது காலை முறையாக லாக் செய்யாததால் தூக்கி வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் - மதுரை சாலையில் தனியார் மேல்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இப்பள்ளியில் ஆண்டு தோறும் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பொருட்காட்சி நடைபெறுவது வழக்கம். அதன் படி இந்த ஆண்டும் விருதுநகர்- மதுரை சாலையில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் மார்ச் 28 முதல் பொருட்காட்சி நடக்கிறது.
இது 77வது ஆண்டாக நடைபெறும் பொருட்காட்சி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பொருட்காட்சியில் ஏராளமான பொழுது போக்கு அம்சங்கள், சிறுவர்களை குதூகலமாக்கும் விளையாட்டு அம்சங்கள், பிரமாண்ட ராட்டினங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த பொருட்காட்சியில் பொழுதைக் கழிப்பதற்காக விருதுநகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சென்று வருகின்றனர்.
அதிலும் இப்போது பெரும்பாலான பள்ளிகளுக்கு முழு ஆண்டுத் தேர்வு முடிந்த நிலையில் இந்த பொருட்காட்சியில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்த பொருட்காட்சியில் சுனாமி என்று பெயரிடப்பட்ட ராட்சத ராட்டினமும் செயல்படுகிறது. பொருட்காட்சியில் பொருத்தப்பட்டிருந்த இந்த அதி பயங்கரமான சுழலும் ராட்டினத்தில் பொதுமக்கள் உற்சாகமாக விளையாடி மகிழ்ந்தனர்.
இதில் செல்பவர்கள் ராட்டினத்தில் ஏறியதும் கால்களை அதற்காக கொடுத்துள்ள இடத்தில் வைத்து லாக் செய்வதுடன், பெல்ட் அணிந்துகொள்ள வேண்டும் என ஊழியர்கள் அறிவுறுத்தினர். ஏனென்றால் அந்தரத்தில் சுழலும் இந்த ராட்டினத்தில் இருந்து தவறி விழுந்து விடக்கூடாது. எனவே சீட் பெல்ட் முக்கியம். உங்களது காலையும் லாக் செய்து கொள்ளுங்கள் என எச்சரித்து உள்ளனர்.
இதையும் படிங்க: ஆபாசப் பேச்சால் தலைகுனியும் சூழல்... மன்னிப்பு கேட்டார் அமைசர் பொன்முடி..!
நேற்று இரவு இந்த சுனாமி ராட்டினத்தில் சென்றவர்களில் விருதுநகர் பாத்திமா நகரை சேர்ந்த 22 வயது கவுசல்யாவும் ஒருவர். அவர் ஊழியர்கள் அறிவுறுத்திய படி, பாதுகாப்பு சாதனத்தை காலில் மாட்டாமல் விட்டுள்ளார். இதனால் ராட்டினம் தலைகீழாக உருண்டு சுற்றியபோது கால்கள் தொங்கிய நிலையில் கவுசல்யா நிலை தடுமாறி சீட்டில் இருந்து கீழே தூக்கி வீசப்பட்டார்.
இயங்கிக் கொண்டிருந்த ராட்டினத்தில் இருந்து இளம் பெண் கீழே விழுந்த நிலையில், அப்பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்தவர்கள் கூச்சலிட்டனர். உடனடியாக ராட்டினம் நிறுத்தப்பட்டது. கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்த கவுசல்யா ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தோடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், மார்பு பகுதியில் ஹைட்ராலிக் லாக் செய்திருந்தும் மேனுவலாக காலை லாக் செய்யாததால் அந்த பெண் கீழே விழுந்ததாக ஊழியர்கள் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து ராட்டினம் இயக்கியவரிடமும், பொருட்காட்சி நிர்வாகியிடமும் விருதுநகர் மேற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், விபத்து தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை எற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் விருதுநகர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: பாஜக தலைவராகும் நயினார் நாகேந்திரன்... தொண்டர்களுக்கு தயாராகும் தடபுடல் விருந்து...!