மாமன்ற கூட்டத்தில் மேயருக்கு பதிலளித்த திமுக நிர்வாகிகள்.. கையில் அல்வாவுடன் அதிமுக வெளிநடப்பு..!
சேலம் மாநகராட்சியில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் அதிமுக உறுப்பினர்கள் கையில் அல்வாவுடன் வெளிநடப்பு செய்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது
சேலம் மாநகராட்சியின் வழக்கமான கூட்டம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் தலைமையில் இன்று நடைபெற்றது. மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் துணை மேயர் சாரதா தேவி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அனைத்து கட்சிகளைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.
குறிப்பாக உயர்த்தப்பட்ட குடிநீர் கட்டணம், சொத்து வரி, கட்டட அனுமதிக்கான வரி ஆகியவற்றால் சேலம் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே இந்த வரிகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறுப்பினர்கள் வலியுறுத்தினர். கோடை காலம் தொடங்கியுள்ளதால் சேலம் மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
மாமன்ற கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள், மேயரிடம் கேள்விகள் எழுப்பினர். அப்போது அந்த கேள்விகளுக்கு மேயர் அல்லது ஆணையர் பதில் அளிக்காமல் திமுக மாமன்ற உறுப்பினர்களே பதில் அளித்துப் பேசினர். எனவே, இது குறித்து அதிமுக கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர். இதனால், அதிருப்தி அடைந்த அதிமுக உறுப்பினர்கள், திமுக கவுன்சிலர்கள் ஆக்டிங் மேயர் போல செயல்படுகின்றனர் என்று விமர்சனம் செய்தனர்.
இதையும் படிங்க: அன்னை இல்லம் ஜப்தி செய்யும் விவகாரம்.. நடிகர் பிரபு நீதிமன்றத்தில் மனுதாக்கல்..!
இதனால் அதிமுக-திமுக உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்கிடையே அதிமுக உறுப்பினர் செல்வராஜ் பேசும்போது, "முறையான சாலை, சாக்கடை வசதி இன்றி மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்த சூழலில் மேயருக்கு ஏற்கனவே அறை ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தனது அறையை மாற்ற ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படுவதாக தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது.
மக்கள் அடிப்படைத் தேவைகளைக் கோரி வரும் நிலையில் மாநகராட்சியில் நிதி பற்றாக்குறை இருக்கும்போது மேயருக்கு சொகுசு அறை தேவையா?. இதற்கு மாநகராட்சி விளக்கம் அளிக்க வேண்டும்,"என வலியுறுத்தினார். இதனால் அதிமுக உறுப்பினர்களுக்கும் திமுக உறுப்பினர்களுக்கும் மீண்டும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் அல்வாவை எடுத்துக் காண்பித்து மேயர் மற்றும் திமுக கவுன்சிலர்கள் மக்களுக்கு அல்வாவை கொடுக்கின்றனர் என்று விமர்சனம் செய்தனர்.
இதற்கு பதில் அளித்த மேயர் ராமச்சந்திரன், "நிர்வாக வசதிக்காக அறையை மாற்றுவது தவறில்லை," என்றார். தொடர்ந்து மற்ற உறுப்பினர்கள் பேச முயற்சித்த போது அவசர தீர்மானங்களை வாசிக்க மேயர் உத்தரவிட்டார். இதை கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேயரை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பியபடி அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: டைமில்ல, டைமில்ல... உச்சக்கட்ட டென்ஷனில் விஜய்... ஒர்க் அவுட் ஆகாத ’மாஸ்டர்’ பிளான்..!