×
 

ஆட்சிக்கு முன்பு, வந்த பின்பு என இரட்டை வேடம் போடும் கட்சி திமுக.. இபிஎஸ் கண்டனம்..!

ஆட்சிக்கு முன்பு, வந்த பின்பு என இரட்டை வேடம் போடும் ஒரே கட்சி தி.மு.க. தான் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழக சட்டசபையில் இன்று உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். அப்போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர முயன்றார். அதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்துவிட்டார். மேலும், சட்டம்-ஒழுங்கு குறித்து பேச அ.தி.மு.க.வினர் அனுமதி கேட்டனர். ஆனால் சபாநாயகர் மறுத்ததால் அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதையடுத்து அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிக மோசமான நிலையில் இருக்கிறது என்றும் செய்தியை வெளிப்படுத்தும் அ.தி.மு.க. நிர்வாகிகளை சிறையில் அடைக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: “சீர்காழி தொகுதி மாப்பிள்ளை” - திமுக எம்.எல்.ஏ. பேச்சைக் கேட்டு ஷாக்கான முதல்வர் மு.க.ஸ்டாலின்...!

வீடு புகுந்து ஒரு தாயை தாக்கி கொள்ளையடிப்பவன் அன்றைய தினமே ஜாமினில் வெளிவருவது எப்படி என்று கேள்வி எழுப்பிய அவர், ஸ்காட்லாந்து யார்டுக்கு நிகராக காவல்துறை ஏவல்துறையாக மாறிவிட்டது என்று குற்றம்சாட்டினார்.உண்மை நிலையை சட்டசபையில் பேசினால் வெளியே வரும் என்பதால் மக்கள் பிரச்சனையில் எந்த பாகுபாடும் காட்டாமல் நாங்கள் குரல் எழுப்பி வருகிறோம் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், தேர்தலின்போது அளித்த எந்த வாக்குறுதியையும் தி.மு.க. நிறைவேற்றவில்லை என்றும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என தி.மு.க. அரசு வாக்குறுதி தந்தது ஆனால், இன்று வரை நிறைவேற்றவில்லை என கூறினார். நீட் தேர்வை ரத்து செய்வதற்கு தங்களிடம் ரகசியம் இருப்பதாக உதயநிதி கூறியதாகவும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என வாக்குக்காக பேசிய முதலமைச்சர், தற்போது வேறு வழியின்றி அனைத்து கட்சி கூட்டம் கூட்டி உள்ளதாகவும் சாடினார்.

நீட் விவகார வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக கூறிவிட்டு இப்போது கூட்டம் ஏன் என கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிச்சாமி, மக்களை ஏமாற்றுவதற்காகவே அனைத்து கட்சி சட்டமன்ற குழு தலைவர்கள் கூட்டம் நடத்தப்பட்டதாகவும் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, வந்த பின்பு என இரட்டை வேடம் போடும் ஒரே கட்சி தி.மு.க. தான் எனவும் சாடியுள்ளார்.

இதையும் படிங்க: கச்சத்தீவு விவகாரம்... நாளை சட்டப்பேரவையில் தனி தீர்மானம்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share