×
 

ED-ரெய்டு.. உச்ச நீதிமன்றத்திற்கு 139A கீழ் வழக்கை மாற்றக்கோரும் நடைமுறை  சரியா? சட்டம் என்ன சொல்கிறது? 

அமலாக்கத்துறை டாஸ்மாக் நிறுவனங்களில் நடத்திய ரெய்டை எதிர்த்து தான் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தை விட்டு உச்ச நீதிமன்றம் வழக்குகளுடன் மாற்றக்கோரும் அரசின் கோரிக்கை சரியானதா? 139-a ஆர்ட்டிக்கல் என்ன சொல்கிறது பார்ப்போம்.

தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனங்களில் மார்ச் 6 ஆம் தேதி தொடங்கி 8 ஆம் தேதி வரை 60 மணி நேரமாக அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியது. பின்னர் அது வெளியிட்ட அறிக்கையில் 1000 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு மற்றும் பல குற்றச்சாட்டுகள் இருந்தன. தமிழ்நாடு அரசு மற்றும் TASMAC நிறுவனம் இணைந்து மாநில அரசின் உரிமைகள் மற்றும் ஊழியர்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். 

 ED-யின் தேடுதல் மற்றும் TASMAC அதிகாரிகளை தடுத்து வைத்த நடவடிக்கைகளை சட்டவிரோதமானவை என்று அறிவிக்க வேண்டும் என்பது பிரதான கோரிக்கையாக இருந்தது. இதை விசாரித்த அமர்வு விலகிய நிலையில் புதிய அமர்வு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தலைமையில் அமைந்தது. விசாரணை தொடங்கிய நிலையில் அமலாக்கத்துறை தாம் முறையாக ரெய்டு நடத்தியதாகவும், யாரும் துன்புறுத்தப்படவில்லை, PMLA சட்ட அடிப்படையில் ரெய்டு நடத்ததவும், பொருட்களை கைப்பற்றவும் உரிமை உண்டு என பதில் மனு தாக்கல் செய்த நிலையில் இறுதி வாதம் ஏப்ரல் 8,9 தேதிகளுக்கு ஒத்தி வைக்கப்பட்டது. 

இதையும் படிங்க: ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல் வழக்கில் விலகிய நீதிபதிகள் : அதிர வைக்கும் பின்னணி..!

இதில் திடீரென தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் சௌத்ரி ஆர்ட்டிக்கல் 139-a கீழ் வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து மாற்றி உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இதேபோன்று உள்ள வழக்குகளுடன் பட்டியலிட கோரிக்கை வைத்தார். அது ஏப்.8 விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இது வழக்கை இழுத்தடிக்க செய்யும் உத்தி, அரசே உயர் நீதிமன்றத்தில் வழக்கை தொடர்ந்துவிட்டு அரசே உச்ச நீதிமன்றத்திலிருந்து உச்ச நீதிமன்றம் மாற்ற கோருவது ஏன் என விமர்சனம் பலராலும் வைக்கப்பட்டது. 

நாளை உச்ச நீதிமன்றம் விசாரிப்பதால் உயர் நீதிமன்ற அமர்வு என்ன ஆகும்?

தற்போது இந்த வழக்கை மனுவாக தாக்கல் செய்தால் பட்டியலிடுவதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்த நிலையில் இன்று மனு தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளது. அது 8 ஆம் தேதி விசாரணைக்கு எடுப்பதால் அதையே காரணம் காட்டி உயர் நீதிமன்ற விசாரணையை ஒத்தி வைக்க கோருவார்கள். நாங்கள் 139-a கீழ் மனு அளித்துள்ளோம் அதனால் நீங்கள் விசாரிக்க வேண்டாம் என நாளை எஸ்.எம்.சுப்ரமணியம் அமர்வு முன் சொல்லவும் வாய்ப்புள்ளது. ஆனால் அதுபற்றி அமர்வு தான் தீர்மானிக்க முடியும். 

அதேபோல் இது சட்டபூர்வமானதா? 139-a  கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அல்லது ரெய்டுக்கு ஆளானவர்கள் கோரிக்கை வைக்க முடியுமா என்பது குறித்தும், PMLA சட்டத்தின் கீழ் பல்வேறு வழக்குகள் அமலாக்கத்துறையின் அதிகாரம் குறித்து போடப்பட்டு அதற்கான உச்ச நீதிமன்ற இறுதி தீர்ப்பும் வந்துள்ள நிலையில் அதுகுறித்தும் பார்ப்போம். 

ரெய்டுகள் சட்டவிரோதமா? – Article 139A மூலம் வழக்குகளை ஒன்றிணைக்க தமிழக அரசு செய்யும் முயற்சியில் சட்ட நடைமுறை என்ன?

அமலாக்கத்துறை (Enforcement Directorate – ED) தனி ஏஜன்சியாக இருந்தாலும், அதனுடைய அதிகாரங்களும் செயல்பாடுகளும் கடந்த காலங்களில் பல அரசியல் சர்ச்சைகளுக்கு இடமளித்துள்ளன என்கிற குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. சட்ட விரோத பணப்பரிமாற்றத்தை தடுக்கும் சட்டமான PMLA(2002) அமலாக்கத்துறைக்கு விசாரணை, பறிமுதல், கைது போன்ற விசேஷ அதிகாரங்களை வழங்குகிறது. இந்த அதிகாரங்கள் பலமுறை மாநில அரசுகளுடன் நேரடி முரண்பாடுகளை உருவாக்கியுள்ளன. 

தமிழகத்தில் டாஸ்மாக் அலுவலகங்களில் நடத்தப்பட்ட அமலாக்கத் துறை சோதனைகள் தொடர்பாக, ரெய்டு சட்டவிரோதம், மாநில உரிமைகள் மீறல் என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதன் பின்னர், இதை உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளுடன் Article 139A கீழ் club செய்யக் கோரி மனு தாக்கல் செய்துள்ளது. இந்த நிலைப்பாடு சட்ட ரீதியாக ஏற்புடையதா? என்பது இக்கட்டுரையின் முக்கியக் கேள்வி.

Article 139A – என்ன சொல்கிறது?

மாநிலங்களின் உயர் நீதிமன்றங்களில் பதியப்பட்டுள்ள வழக்குகளில் ஒரே சட்டக் கேள்வி குறித்தோ அல்லது ஒரே வகையான பிரச்சனை கொண்ட வழக்குகளாக இருந்தால், உச்ச நீதிமன்றம் அந்த வழக்குகளை உயர் நீதிமன்றத்திலிருந்து விலக்கி, தானே ஒருங்கிணைத்து விசாரணை செய்ய முடியும் – இது தான்  பிரிவு 139A கீழ் நடப்பது. இதில் சுப்ரீம் கோர்ட் தானாகவே (suo motu) நடவடிக்கை எடுக்கலாம், அல்லது அட்டர்னி ஜெனரல் அல்லது மத்திய அரசின் பரிந்துரை மூலம் ஒரு வழக்கை உச்ச நீதிமன்றம் கொண்டு வரலாம்.

மத்திய அரசு, வழக்கை சுப்ரீம் கோர்ட்டில் கொண்டு வர பரிந்துரை செய்யலாம், வேறு யாருக்கு தகுதி?

Constitution Article 139A நேரடியாக பொதுமக்கள் (அல்லது litigants) குறித்து குறிப்பிடவில்லை. ஆனால், நடைமுறையில், வழக்கில் நேரடியாக பாதிக்கப்படும் ஒருவர் (litigant or party in the case) வழக்கின் பிரதான பயனாளி அல்லது பாதிக்கப்பட்ட குடிமக்கள் Advocate on record (AOR) மூலமாக “Transfer Petition” என்ற வழியில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யலாம். இதுபோல், வழக்குகளை மையப்படுத்தி சுப்ரீம் கோர்ட்டில் கொண்டு வர வேண்டி transfer petition தாக்கல் செய்யப்படுகிறது. இதைத்தான் தமிழக அரசு செய்துள்ளது. நாளை இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. 

இதற்கான நிபந்தனைகள்:
1. வழக்குகள் பல நீதிமன்றங்களில் இருந்தாலும் ஒரே மாதிரியான சட்டக் கேள்விகளை கொண்டிருக்க வேண்டும்.
2. அவை பொதுநலத்திற்கு முக்கியமானவை என உச்சநீதிமன்றம் கருத வேண்டும்.
3. முறையான சட்டநடவடிக்கை பின்பற்றப்பட வேண்டும்.

இதில் தமிழக அரசின் முன் உள்ள சட்ட சிக்கல் என்ன?

தமிழக அரசு, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கில் தரப்பாக (party to the case) உள்ளது. அதே வழக்கை உச்சநீதிமன்றத்தில் club செய்ய கோருவது,  நியாயமான விசாரணை கோட்பாட்டுக்கு (Doctrine of Fair Hearing) எதிராக இருக்கும் என சொல்லப்படுகிறது. இது சுயநலமாகவும், தனிப்பட்ட தடை கோரும் செயலாகவும் பார்க்கப்படும்.

139A பிரிவின் கீழ் தமிழக அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு சட்டத் தடை உள்ளதா?

வழக்கு ரெய்டை கேள்விக்குறியாக்குகிறது. இதற்கு உயர் நீதிமன்றத்திலேயே அமலாக்கத்துறை அது PMLA(2002) படி எடுக்கப்படும் நடவடிக்கை, PMLA(2002) அதிகாரம் குறித்த Vijay Madanlal Choudhary v. Union of India (2022) வழக்கில், ED-வின் அதிகாரங்கள் உறுதிப்படுத்தப்பட்டு விட்டன.  அதனை கேள்விகுறியாக்கி வழக்கை மாற்றக்கோருவதால் அதை உச்ச நீதிமன்றம் எப்படி எடுத்துக்கொள்ளும் என தெரியவில்லை. 

அதேபோல் சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசே வழக்கை தொடர்ந்துவிட்டு தற்போது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளுடன் பட்டியலிட கோருவதை உச்ச நீதிமன்றம் எப்படி எடுத்துக்கொள்ளும் என்பது கேள்விக்குறியே. உயர் நீதிமன்றம் விசாரிக்கவே ஆரம்பிக்கவில்லை, உங்கள் கோரிக்கை ரெய்டு சட்டவிரோதம் என்றால் எப்படி? என்ன விதிமீறல் என்கிற கேள்வியை எழுப்பலாம். உயர் நீதிமன்றத்தின் விசாரணை மீது நம்பிக்கை வையுங்கள் என திருப்பி அனுப்பலாம். 

ஆனால், பின்வரும் வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன, 1.டெல்லி மதுபான கொள்கை வழக்கு, 2. கர்நாடக உயர் நீதிமன்றத்தை சார்ந்த MUDA வழக்கு மற்றும் ED அதிகார வரம்பு மீதான பொதுவான சவால்கள் இந்த வழக்குகள் எல்லாம் உச்சநீதிமன்றத்தில் உள்ளதால்,  தமிழ் நாடு கோரிக்கை வைத்தால், தமிழ்நாடு வழக்கையும் club செய்யலாம் என்பதும் ஒரு சாத்திய நிலை தான். அதனால் இருவேறு கருத்துகள் உள்ளது.

ஆனால் மேலே குறிப்பிட்டப்படி இப்போது தமிழக அரசு Article 139A கீழ் வழக்குகளை club செய்ய கோரியிருக்கிறது என்றால், என்ன விதிமீறல் நடந்தது என்று Article 139A கீழ் வருகிறீர்கள் என்கிற கேள்வி வைக்கப்படவே அதிக வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள். அரசியல் கோணத்தைத் தவிர்த்து, சட்ட நோக்கில் பார்க்கும்போது, Article 139A என்பது வழக்குத் தரப்புகளுக்கு கிடைக்கும் உரிமை அல்ல, அது நீதிமன்றத்திற்கோ சட்ட அதிகாரிகளுக்கோ வழங்கப்படும் விசேஷ அதிகாரம் என்பதையே சட்ட உரை விளக்குகிறது.

PMLA சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையின் அதிகாரங்கள் உச்ச நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின் இதுபோன்ற முறையீடல்கள் செல்லுமா?

சட்ட விரோத பணப்பரிமாற்றத்தை தடுக்கும் நோக்கில் 2002 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட PMLA சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறைக்கு வழங்கப்பட்டுள்ள விசாரணை, பறிமுதல் மற்றும் கைது போன்ற விசேஷ அதிகாரங்கள் தொடர்பாக, கடந்த 2022 ஆம் ஆண்டு Vijay Madanlal Choudhary வழக்கில் உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பொன்றை வழங்கியது.

அதில், ED-யின் நடவடிக்கைகள் அரசியலமைப்புக்கு உட்பட்டவை என்றும், சட்டரீதியாக செல்லும் என்றும் உறுதிசெய்யப்பட்டது. இதனடிப்படையில், அந்த தீர்ப்பு அனைத்து இந்திய நீதிமன்றங்களுக்கும் கட்டாயம் பின்பற்ற வேண்டியதாகவும் அறிவிக்கப்பட்டது.

இத்தகைய தீர்ப்பிற்குப் பிறகும், சில மாநில அரசுகள் மற்றும் தனிநபர்கள் புதிய சட்டப்பாதையில், குறிப்பாக அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் (Articles 14, 21, 131, 139A) ஆகியவற்றின் அடிப்படையில், ED-வின் நடவடிக்கைகள் குறித்து வழக்கு தொடர்ந்து வருகின்றனர்.

தமிழக அரசும், அமலாக்கத்துறையின் டாஸ்மாக் அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகள் குறித்து, அவை சட்ட விரோதமானவை என Article 139A கீழ் கோரிக்கை முன்வைத்துள்ளது. இதன் மூலம், PMLA சட்டத்தின் நடைமுறை குறித்த கேள்விகளை ஏதாவது ஒரு வடிவில் வைக்கின்றனர். அது நியாயமாகவும் இருக்கலாம், வழக்கை இழுத்தடிப்பதற்காகவும் இருக்கலாம். தமிழக அரசின் இந்த முறையீட்டையும் உச்ச நீதிமன்றமே முடிவு செய்யும். இதன் மூலம் இன்னொரு கேள்விக்கும் விடை கிடைக்கலாம். பொறுத்திருந்து பார்ப்போம். 
 

இதையும் படிங்க: ED-க்கு எதிரான வழக்கு.. தமிழக அரசு மனுவில் உள்ள 30 முக்கிய குற்றச்சாட்டுகள் இதுதான்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share