ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - அதிமுக புறக்கணிப்பு..
இடைத்தேர்தல் என்றாலே அரசியல் கட்சிகளுக்கு எப்படியோ, தொகுதி மக்களுக்கு உற்சாகம் தான்.
இடைத்தேர்தல் என்றாலே அரசியல் கட்சிகளுக்கு எப்படியோ, தொகுதி மக்களுக்கு உற்சாகம் தான். அதுவரை அவர்கள் விடுத்து வந்த கோரிக்கை எல்லாம் ஒரேநாளில் பூர்த்தி செய்யப்பட்டு விடும், போதாக்குறைக்கு தொகுதி முழுவதும் பணம் ஆறாக ஓடும். தங்கள் பலத்தை மீண்டும் ஒருமுறை நிரூபிக்க ஆளுங்கட்சி ஒட்டுமொத்தமாக களமிறங்கும், ஆட்சியின் மீது அதிருப்தி இருக்கிறதா என்பதை உரசிப் பார்க்க எதிர்கட்சிகள் திட்டமிடும். ஒட்டுமொத்தமாக இடைத்தேர்தல் என்பது பல்வேறு கேள்விகளுக்கு விடையளிக்கும் ஒரு செயல்.
2021 சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட திருமகன் ஈவெரா வெற்றி பெற்ற நிலையில் 2023-ம் ஆண்டு காலமானார். அதன்பின்னர் நடைபெற்ற இடைத்தேர்தலில் அவரது தந்தையான ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார். அவரும் முதுமை காரணமாக உயிரிழந்த நிலையில் இப்போது நடைபெறும் இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு பதிலாக திமுக போட்டியிடுகிறது. அக்கட்சியின் சார்பில் வி.சி.சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: தேர்தல் இல்ல ..பொங்கல் ரொக்கப் பரிசும் இல்ல .. அரசை போட்டுத்தாக்கிய ஜான்பாண்டியன்!
திமுக ஆட்சிக்கு வந்தது முதல் நடைபெற்ற விளவங்கோடு, விக்கிரவாண்டி, ஈரோடு கிழக்கு ஆகிய தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல்களில் அபார வெற்றி பெற்றது. அதே முனைப்போடு ஈரோடு கிழக்கை வெல்ல திமுக களமிறங்கும் என்பது எதிர்பார்க்கப்படும் ஒன்றுதான். கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் களமிறங்கியபோதே, ஒட்டுமொத்த அமைச்சர்களும் அந்த தொகுதியில் முகாமிட்டு வீதிவீதியாக வாக்கு சேகரித்தனர். தற்போது தங்கள் கட்சியே போட்டியிடும் நிலையில், அது ஸ்டார் தொகுதியாக உருவெடுத்துள்ளதால் திமுக தலைமை கூடுதல் அக்கறை காட்டும் என்பது தெரிந்ததே.
விக்ரவாண்டி தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பிரதான எதிர்கட்சியான அதிமுக போட்டியிடவில்லை. ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிடுவதா? வேண்டாமா? என்பது குறித்து மாவட்ட செயலாளர்களுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 16 மாதங்களே உள்ள நிலையில், முழு கவனத்தையும் அதில் செலுத்தலாம் என பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் கருத்து கூறியுள்ளனர். இதனால் ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிட வேண்டாம் என அதிமுக முடிவு செய்து விட்டது.
இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் படைபலமும், பணபலமும் தான் ஆதிக்கம் செலுத்தும் என குறிப்பிட்டுள்ளார். திமுக என்றாலே அராஜகம், வன்முறை என்பதால் இடைத்தேர்தலில் அதிகார துஷ்பிரயோகம் நடைபெறும் என்றும் அதில் இபிஎஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். நேர்மையாகவும், சுதந்திரமாகவும் இடைத்தேர்தல் நடைபெறாது என்பதால் தேர்தலை புறக்கணிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
பாஜக இடம்பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி, ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது என அறிவிக்கப்பட்டது. அதன் சார்பில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் விடியல் சேகர் களமிறக்கப்படக் கூடும் என தெரிகிறது. நாம் தமிழர் கட்சியும் களம் காணும் என திட்டவட்டமாக சீமான் தெரிவித்து இருந்தார். இடைத்தேர்தலில் போட்டியிட போவதில்லை என நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் அறிவித்து விட்டார்.
ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் கூறப்போவது என்ன என்பது பிப்ரவரி 8-ல் தெரிந்து விடும்..
இதையும் படிங்க: எல்லாமே மூணு... ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் இத கவனிச்சிங்களா? - சுவாரஸ்ய தகவல்!