இனி எதிர்பாராத ட்விஸ்டுதான்.. மாதாமாதம் கட்சிகள் வந்து அதிமுக கூட்டணியில் சேரும்.. மாஜி அமைச்சர் கணிப்பு.!
களத்தில் நிற்பது திமுக கூட்டணியா, அதிமுக கூட்டணியா என்பதுதான் கேள்வி.
வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக - தவெக இடையேதான் போட்டி என்பது நகைச்சுவை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டன. எதிர்கட்சியான அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டங்களை ஒவ்வோர் ஊரிலும் நடத்தி வருகிறது. அந்த வகையில் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அதிமுக பூத் கமிட்டி உறுப்பினர்கள் தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "அதிமுக - பாஜக கூட்டணி என்பது மறைந்த ஜெயலலிதாவால் அமைக்கப்பட்ட வெற்றிக் கூட்டணி ஆகும். அந்தக் கூட்டணியை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அமைத்துள்ளார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையேதான் போட்டி என்று விஜய் கூறியிருக்கிறார். இது 2025ஆம் ஆண்டின் சிறந்த நகைச்சுவை ஆகும்.
எப்போதும் நான்தான், நான்தான் என்று சொல்லக் கூடாது. தவெக களத்திலேயே கிடையாது. எங்கேயுமே கிடையாது. களத்தில் நிற்பது திமுக கூட்டணியா, அதிமுக கூட்டணியா என்பதுதான் கேள்வி. அதிமுக கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் வந்து சேரும். மாதாமாதம் வந்து கொண்டே இருக்கும். இனி எதிர்பாராத திருப்பங்கள் நிகழும்.
அதிமுகவை நம்பிய சிறுபான்மையினர் கெட்டதாக வரலாறே கிடையாது. அவர்களின் ஓட்டு உறுதியாக அதிமுகவுக்குதான் வரும்" என்று ராஜேந்திர பாலாஜி கூறினார்.
இதையும் படிங்க: இதுதான் இறுதி அஸ்திரம்..! இ.பி.எஸுக்கு எதிராக ஓ.பி.எஸ் டீம் போட்ட பகீர் சபதம்- கிளப்புங்கள் வண்டியை...
இதையும் படிங்க: ஓடிப்போன பெண்ணுடன் கட்டாயக் கல்யாணம்… மீண்டும் ஓடினால்..? அதற்கும் தயாரான பாஜக..! கடும் விமர்சனம்..!