‘யாருக்கும் கொள்ளையடிக்க லைசன்ஸ் இல்லை’.. காங்கிரஸுக்கு பாஜக கண்டனம்..!
காங்கிரஸ் கட்சி மீது பழிவாங்கும் நோக்கில் பாஜக செயல்படுகிறது என்பது தவறானது, யாருக்கும் கொள்ளையடிக்க லைசன்ஸ் இல்லை என்று பாஜக தெரிவித்துள்ளது.
நேஷனல் ஹெரால்டு வழக்கு கடந்த 2014, ஜூன் 26ம் தேதி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியால் பாட்டியாலா நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. நேஷனல் ஹெரால்டு சொத்துக்களை குறைந்த விலைக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி வாங்கியுள்ளனர் என புகார் அளித்தார். இந்த வழக்கில் விசாரணை கடந்த 2021ம் ஆண்டு தொடங்கியது.
சோனியா காந்தி, ராகுல் காந்தி, மறைந்த தலைவர் மோதிலால் வோரா, ஆஸ்கார் பெர்ணான்டஸ், சுமன் துபே, சாம் பிட்ரோடா, யங் இந்தியா எனும் தனியார் நிறுவனம் ஆகியவை சேர்ந்து, அசோசியேட் ஜர்னல்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.2ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்களை சந்தை விலைக்கும் குறைவாக வாங்கி மோசடி செய்துள்ளனர். இது சட்டவிரோதப் பணப்பரிமாற்ற சட்டத்தின் தவறாகும் என சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: புனிதமான அரசிலமைப்புச் சட்டத்தை ஆயுதமாக பயன்படுத்தும் காங்கிரஸ்.. பிரதமர் மோடி குற்றச்சாட்டு..!
இந்த வழக்கில் அமலாக்கப்பிரிவு வழக்குப்பதிவு செய்து சட்டவிரோதப்பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக என விசாரித்து வருகிறது. ஏற்கெனவே ராகுல் காந்தி, சோனியா காந்தியிடம் விசாரணையை அமலாக்கப்பிரிவு நடத்தியுள்ளது. இந்த வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனிய காந்தி, ராகுல் காந்தி மீது அமலாக்கப்பிரிவு குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.
இது குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சி ஆளும் பாஜக பழிவாங்கும் நோக்கில் செயல்படுகிறது. அமலாக்கத் துறையின் குற்றப்பத்திரிகை பழிவாங்கும் அரசியலாகவும், சொத்துக்களைப் பறிமுதல் செய்தது சட்டத்தின் ஆட்சியைப் போல மாறுவேடமிட்டு அரசு ஆதரவுடன் நடத்தப்பட்ட குற்றம் என்று விமர்சித்தது. இதற்கு பதில் அளித்து பாஜக மூத்த தலைவர் ரவி சங்கர் பிரசாத் இன்று நிருபர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
சோனியா காந்தி, ராகுல் காந்தி மீதான குற்றச்சாட்டுகளுக்கு காங்கிரஸ் கட்சி அரசியல் ரீதியாக எதிர்வினையாற்றுவதற்குப் முதலில் பதில் அளிக்க வேண்டும். நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவுக்கு காங்கிரஸ் கட்சிக்கு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை.
யங் இந்தியா நிறுவனத்தின் 76% பங்குதாரர்களாக இருக்கும் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் நேஷனல் ஹெரால்டு செய்தித்தாளின் உரிமையாளரான அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் சொந்தமான ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை குறைந்த விலைக்கு வாங்கி முறைகேடாகப் பயன்படுத்தினார்கள் என்று முக்கிய குற்றச்சாட்டு இருக்கிறது.
சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை எதிர்த்து காங்கிரஸ் கட்சிக்கு 'தர்ணா' நடத்த உரிமை உண்டு ஆனால் அந்த உரிமை நேஷனல் ஹெரால்டு நாளேட்டுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்த நீட்டிக்கப்படவில்லை.
அமலாக்கப்பிரிவு, சிபிஐ விசாரணை அமைப்புகளுக்கு எதிராக காங்கிரஸ் அச்சுறுத்தல் விடுத்திருக்கிறது. உண்மையில் காங்கிரஸ் கட்சியும், ராகுல், சோனியா காந்தியும் சட்டத்தின் சரியான செயல்முறையை நம்புகிறார்களா இல்லையா. இதுபோன்ற மிரட்டல்களை நாங்கள் கண்டிக்கிறோம். நடப்பது மோடி அரசின் ஆட்சி, சட்டத்தை யாரும் கையில் எடுப்பதை நாங்கள் அனுமதிக்கமாட்டோம்.
காங்கிரஸ் கட்சி அசோசியேட் ஜர்னல் நிறுவனத்திற்கு வழங்கிய ரூ.90 கோடி கடனை, யங் இந்தியா நிறுவனம் தள்ளுபடி செய்துவிட்டது. அதற்கு கைமாறாக, ரூ. 50 லட்சத்தில் நிறுவனத்தின் உரிமையைப் ராகுல், சோனியா பெற்றனர்.
அசோசியேட் ஜர்னல் நிறுவனத்துக்குச் சொந்தமான நிலம் அரசு வழங்கியது. நேஷனல் ஹெரால்டு நாளேடு காங்கிரஸால் உருவாக்கப்பட்டு, விளம்பரம், சொத்துக்கள் வாங்க பயன்படுத்தப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போராடுபவர்களின் குரலை உயர்த்துவதற்காக சுதந்திரப் போராட்டத்தின்போது உருவாக்கப்பட்ட ஒரு செய்தித்தாள் நேஷனல் ஹெரால்டு, அது பிற்காலத்தில் காங்கிரஸ் கட்சி பணம் சம்பாதிக்கும் கருவியாக சீரழிந்தது.
இவ்வாறு ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: “எனக்கில்ல... எனக்கில்ல” ... பிரதமர் விசிட் முடிந்த கையோடு புலம்பலை ஆரம்பித்த விஜயதாரணி...!