சத்தீஸ்கர் என்கவுண்டர்: 4 நக்சலைட் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; துப்பாக்கிச் சண்டையில் காவலர் பலி
சத்தீஸ்கர் : நக்சலைட் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் நக்சலைட் தீவிரவாதிகள் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். தலைமை காவலர் ஒருவர் இந்த மோதலில் உயிரிழந்தார்.
சத்தீஸ்கரின் நாராயண்பூர் - தண்டேவாடா மாவட்டங்களின் வனப்பகுதியான அபுஜ்மார் வனப்பகுதியில் நடமாடும் நக்சலைட்டுகளை தேடும் பணியில் பாதுகாப்புப் படையினர்
நேற்று மாலை ஈடுபட்டனர்.
சிறப்பு பாதுகாப்புப் படை மற்றும் வன பாதுகாப்புப் படை வீரர்கள் இணைந்து இந்த தேடுதல் வேட்டையில் பங்கேற்றனர். அப்போது, வனப்பகுதியில் பதுங்கி இருந்த நக்ஸல் தீவிர வாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில், 4 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.
இதையும் படிங்க: பிரியங்காவின் கன்னங்களைப் போன்ற பளபளப்பான சாலை: டெல்லி பாஜக வேட்பாளரின் 'கவர்ச்சி' வாக்குறுதியால் சர்ச்சை ; காங்கிரஸ் பதிலடி
இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள பஸ்தர் பகுதி போலீஸ் ஐஜி சுந்தர்ராஜ், "நேற்று இரவு நிகழ்ந்த மோதலில் 4 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். இந்த மோதலில், வன பாதுகாப்புப் படையைச் சேர்ந்த தலைமை காவலர் சன்னு கரம் என்பவர் உயிரிழந்தார்.
நக்ஸல் சீருடையில் இருந்த நான்கு நக்சலைட்டுகளின் உடல்கள் கைப்பற்றப்பட்டன. மேலும், ஏகே 47 ரக துப்பாக்கி மற்றும் எஸ் எல் ஆர்துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டன.
அப்பகுதியில் தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது" என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 2025-ம் ஆண்டில், இந்திய பணக்காரர்கள் பட்டியல்: முதல் இடத்தில் முகேஷ் அம்பானி; தமிழகத்தின் சிவ நாடாருக்கு 3-ம் இடம்