மருத்துவ மாணவர்களே..! நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..!
நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று இரவு 11.50 மணியுடன் நிறைவடைகிறது.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, நாடு முழுவதும் நீட் நுழைவுத்தேர்வின் அடிப்படையில் நடத்தப்படுகிறது. இந்த தேர்வை, தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) நடத்தி வருகிறது. அந்த வகையில் 2025-26-ம் கல்வியாண்டு மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை நீட் நுழைவுத்தேர்வு, வருகிற மே மாதம் 4-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த மாதம் (பிப்ரவரி) 7-ந் தேதி தொடங்கியது.
இந்த நிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று இரவு 11.50 மணியுடன் நிறைவடைகிறது. தேர்வர்கள், neet.nta.nic.in என்ற இணையதளத்தில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள், அதில் திருத்தங்கள் மேற்கொள்ள வருகிற 9, 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் வாய்ப்பு வழங்கப்படும். மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேர்வு மையங்கள் குறித்த விவரங்கள், வருகிற ஏப்ரல் மாதம் 26-ந் தேதியும், தேர்வுக்கான ஹால்டிக்கெட் வருகிற மே மாதம் 1-ந் தேதியும் வெளியிடப்படப்படும்.
இதையும் படிங்க: மாணவர்களே மிஸ் பண்ணிடாதிங்க! நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்...
அரசியல்ரீதியாக நீட் தேர்வுக்கு எதிர்ப்புகள் இருந்தாலும், மருத்துவ படிப்பில் சேர வேண்டுமென்றால் நீட் தேர்வு எழுதிதான் ஆக வேண்டும் என்பதே விதி. ஒருபுறம் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டே மறுபுறம் தமிழக மாணவர்கள் கடந்த சில ஆண்டுகளாக நீட் தேர்வில் அதிக மதிப்பெண்களை குவித்து வருகின்றனர். நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட 2021-ல் ஒட்டுமொத்த தேர்வெழுதிய தமிழக மாணவர்களில் 54.39 சதவித பேர் தேர்ச்சி பெற்று இருந்தனர். 2023-ல் நிலைமையே வேறு. அந்த ஆண்டில் தேசிய அளவில் முதலிடம் பிடித்ததே தமிழக மாணவர் பிரபஞ்சன் தான். மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு 720 மதிப்பெண்கள் எடுத்து அவர் சாதனை புரிந்து இருந்தார். முதல் 10 இடங்களில் 4 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். அதேபோன்று 720/720 மதிப்பெண்களை மொத்தம் 67 பேர் பெற்றிருந்தனர். அதில் 8 பேர் தமிழக மாணவர்கள் ஆவர்.
கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் இருந்து 1,52,920 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 89,426 மாணவர்கள் வெற்றிபெற்றிருந்தனர். அதாவது தேர்ச்சி விகிதம் 58.47 சதவிதம் ஆகும். இதைவிட சிறப்பு என்னவென்றால் நாட்டின் தேர்ச்சி விகிதம் 56.41 சதவிதம். அதனைவிட 2 சதவிதம் தமிழ்நாடு கூடுதலாக பெற்றுள்ளது என்பதே இதன் சிறப்பம்சம் ஆகும்.
தேர்வு எழுத முடியாது என்பதல்ல தமிழர்களின் வாதம். எந்த தேர்வாக இருந்தாலும் அதில் அசுர சாதனை படைப்பதில் தமிழர்களை யாரும் அடித்துக் கொள்ள முடியாது. ஆனால் சமநிலையற்ற, சமூகநீதியற்ற தேர்வு என்பதே நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு முன்வைக்கும் வாதமாகும்.
இதையும் படிங்க: நீட் தேர்வு அச்சம்... தாயை இரும்பு ராடால் அடித்து கொன்ற மகன்!!