வயதான தம்பதியை கொல்ல முயற்சி.. கட்டி வைத்து அடித்த ஊர் மக்கள்.. வடமாநில இளைஞன் பலி..!
ஈரோடு அருகே வயதான தம்பதியை கொலை செய்ய முயற்சித்த வடமாநில இளைஞனை ஊர் மக்கள் கட்டி வைத்து அடித்த நிலையில், சிகிச்சை பலனின்றி இளைஞன் உயிரிழந்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
ஈரோடு மாவட்டம் கொல்லம்பாளையம் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (வயது 75). அவரது மனைவி ஜெயலட்சுமி வயது (68). இந்த வயதான தம்பதியினருக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். குழந்தைகள் இருவரும் திருமணம் முடிந்து சென்ற நிலையில் அதே பகுதியில் சுப்பிரமணியம் ஜெயலட்சுமி வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அந்த பகுதியில் கடந்த சில நாட்களாகவே சுற்றித்திரிந்த வடமாநிலத்தை இளைஞர் ஓருவர், தீடிரென இவர்களடு வீட்டினுள் நுழைந்து உள்ளான். அப்போது வீட்டில் இருந்த சுப்பிரமணியத்தின் கழுத்தை அறுத்து விட்டு, கையில் கொண்டு வந்த கட்டையால் ஜெயலட்சுமியை தாக்கி கொலை செய்ய முயற்சித்துள்ளான். வலி தாங்கமால் ஜெயலட்சுமி கூச்சலிட்டுள்ளார்.
ஜெயலட்சுமியின் கூச்சலையும், சுப்பிரமணியத்தின் மரண ஓலத்தையும் கேட்ட, அக்கம் பக்கத்தினர் என்னமோ ஏதோ என்று பதறிப்போய் அவர்களது வீட்டை நோக்கி வந்துள்ளனர். ஊர் மக்கள் அறிந்து கொண்டதை அந்த வடமாநில இளைஞன், அவர்களை அப்படியே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளான். சப்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், ரத்த வெள்ளத்தில் இருந்த முதியவர் சுப்பிரமணியத்தை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜெயலட்சுமியை ஆசுவாசபடுத்தினர். அப்போது ஜெயலட்சுமி வடமாநில இளைஞர் தாக்கியதையும் தப்பி ஓடியதையும் கூறி உள்ளார்.
இதையும் படிங்க: திடீரென தலை வழுக்கை, இப்போ நகமும் விழுகிறது.. வினோத நோயால் மகாராஷ்டிரா கிராம மக்கள் அவதி..!
அந்த வடமாநில இளைஞர் தப்பி ஓடிய திசையையும் சுட்டிக்காட்டி உள்ளார். உடனே அந்த திசையில் சென்ற அக்கம் பக்கத்து இளைஞர்கள் சிலர், தப்பி ஓடிய வடமாநில வாலிபரை பிடித்து தாக்கி உள்ளனர். பின்னர் அவரை கட்டிப் போட்டு ஊர் மக்கள் மொத்தமாக சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த அந்த வட மாநில நபர் சாலையில் மயங்கி விழுந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தெற்கு போலீசார் காயம் அடைந்த வடமாநிலத்தவரை சிகிச்சைக்காக அனுப்பி வைத்துனர்.
மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கொலை முயற்சி சம்பவத்தில் ஈடுபட்ட நபர் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த 32 வயதான ராபி ஓரான் என்பதும், கொல்லம்பாளையம் பகுதியில் யாசகம் எடுத்து பிழைப்பு நடத்தி வந்ததும் தெரிந்தது. இந்த நிலையில் முதியவர் சுப்பிரமணியம் இந்த பகுதியில் எல்லாம் வரக்கூடாது என வட மாநில வாலிபரை எச்சரித்துள்ளார்.
இதனால் கோபமடைந்த போதையில் இளைஞர் சுப்பிரமணியத்தை பிளேட் கொண்டு கழுத்தை அறுத்திருப்பது தெரியவந்தது. தற்போது பொதுமக்கள் தாக்கியதில் சிகிச்சை பெற்று வந்த வட மாநில இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் இந்த சம்பவம் குறித்து தெற்கு காவல் நிலைய போலீசார் கொலை வழக்காக மாற்றம் செய்து வடமாநில இளைஞரை தாக்கியது தொடர்பாக விசாரணை நடத்த உள்ளனர்.
இதையும் படிங்க: வக்ஃபு வன்முறையை கட்டுப்படுத்தாமல் வேடிக்கை... ஆய்வுக்கு செல்லும் ஆளுநர்: மம்தா அரசுக்கு மாபெரும் சிக்கல்..?