×
 

தாய்லாந்து சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு.. பாரத் மாதா கி ஜே என முழக்கம்..!

அரசுமுறை பயணமாக தாய்லாந்து சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கூடியிருந்த இந்திய வம்வாவளியினர் பாரத் மாதா கி ஜே என முழக்கங்கள் எழுப்பினர்.

இலங்கை, தாய்லாந்து நாடுகள் மற்றும் பிம்ஸ்டெக் நாடுகளுடன், இந்தியாவின் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக புறப்பட்டுச் சென்றுள்ளார். சிறப்பு விமானம் மூலம் தாய்லாந்து நாட்டுக்கு சென்ற அவருக்கு பாங்காங் விமான நிலையத்தில் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டு முறைப்படி சந்தனம், முத்து, செந்தாமரை சேர்த்த மாலை கொடுத்து வரவேற்றனர். 

விமான நிலையத்தில் திரண்டிருந்த இந்திய வம்வாவளியினர் தங்கள் கைகளில் இந்திய தேசியக்கொடியை ஏந்தி பாரத் மாதா கி ஜே என்று முழக்கங்கள் எழுப்பினர். மோடிஜி வாழ்க என்று அவர்கள் எழுப்பிய கோஷம் விண்ணைப் பிளந்தது. இதனைக் கண்டு உற்சாகமடைந்த பிரதமர் மோடி, அவர்களிடம் கையைக் குலுக்கி வாழ்த்துத் தெரிவித்தார். 

இதையும் படிங்க: பிரதமர் மோடி- யோகிக்கு கொலை மிரட்டல்.. கம்ரான் கானுக்கு நீதிமன்றம் பரபர தீர்ப்பு..!

இதுதொடர்பாக தனது சமூக வலைத்தள பதிவில் இருநாடுகள் இடையே பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்துவதே தனது பயணத்தின் நோக்கம் என்று குறிப்பிட்டுள்ளார். தாய்லாந்து நாட்டில் நடைபெற உள்ள பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பிரதமர் பங்கேற்கிறார். அப்போது, தாய்லாந்தின் அரசர் மகா வஜிரலங்கோமையும் மோடி சந்திக்க உள்ளார். சமீபத்தில் நிலநடுக்கத்தால் தாய்லாந்து தலைநகர் பாங்காங் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதுபற்றியும் தனது பயணத்தின்போது பிரதமர் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனைத்தொடர்ந்து நாளை முதல் வருகிற 6ந் தேதி வரை பிரதமர் மோடி இலங்கை செல்ல உள்ளார். இந்தியாவுக்கு வருகை தந்த ஜனாதிபதி அனுரா குமர திசநாயகேவின் பயணம் வெற்றியடைந்ததன் தொடர்ச்சியாக தன்னுடைய இந்த பயணம் அமையும் என்றும் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

இந்தியா மற்றும் இலங்கை இடையேயான பன்முக தன்மை கொண்ட நட்புறவை பற்றி தாங்கள் மறுஆய்வு செய்து, ஒத்துழைப்புக்கான புதிய வழிகளை பற்றி ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகவும், பல்வேறு கூட்டங்களில் பங்கேற்பதற்காக காத்திருப்பதாகவும் அந்த பதிவில் பிரதமர் மோடி கூறியுள்ளார். 

இலங்கை பயணத்தின் போது அந்நாட்டு கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக சிறைபிடிக்கப்படுவது பற்றி பேசுவார் என ராமேஸ்வரம் மீனவர்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள விசைப்படகுகளை மீட்பது குறித்தும் பிரதமர் மோடி, இலங்கையிடம் வலியுறுத்த வேண்டும் என்பது தமிழக மீனவர்களின் கோரிக்கையாக உள்ளது. 

திரும்பும் மார்க்கத்தில் வருகிற 6-ந் தேதி பாம்பனில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார். நூற்றாண்டுக்கு மேலாக சேவை செய்து வந்த பழைய ரயில்கடற்பாலம் பழுதான நிலையில் பலகோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பாலம் நவீன தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

இதையும் படிங்க: பாஜக-ஆர்.எஸ்.எஸ்-ஐ வீழ்த்தியாகணும்.. மதசார்பற்ற சக்திகள் ஒன்னு சேருங்க.. அழைப்பு விடுக்கும் பிரகாஷ் காரத்.!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share