ரூ. 20 லட்சம் வழிப்பறி செய்த வழக்கு... ஜாமின் கோரி சப்-இன்ஸ்பெக்டர் மனுதாக்கல்...
ஆயிரம் விளக்கு பகுதியில் நடந்த 20 லட்ச ரூபாய் வழிப்பறி வழக்கில் காவல் உதவி ஆய்வாளர் ராஜாசிங் மற்றும் வருமான வரி துறை அதிகாரிகள் இருவர் ஜாமீன் கோரி அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
திருவல்லிக்கேணியில் கடந்த டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி தனியார் நிறுவன ஊழியர் முகமது கௌஸ் என்பவரிடம் 20 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்த வழக்கில் காவல் உதவி ஆய்வாளர்கள் ராஜா சிங், சன்னிலாய்டு, வருமானவரித் துறை அதிகாரிகள் தாமோதரன் பிரதீப், பிரபு ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் உள்ளனர்.
இந்த வழக்கில் சன்னிலாய்டு தவிர மற்ற 4 பேருக்கு உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இந்த நிலையில் இவர்களை நீதிமன்ற உத்தரவில் காவல்துறை விசாரணையில் எடுத்து விசாரித்த போது சென்னை ஆயிரம் விளக்கு காவல் எல்லைக்கு உற்பட்ட பகுதியில் ராயபுரத்தை சேர்ந்த தமீம் அன்சாரி என்பவர் கடந்த ஆண்டு டிசம்பர் 11தேதி கொண்டு வந்த பணம் 20 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்தது தெரியவந்தது.
உதவி ஆய்வாளர்கள் ராஜா சிங், சன்னிலாய்டு, வருமானவரித் துறை அதிகாரிகள் தாமோதரன் பிரதீப், பிரபு, வணிகவரித்துறை அதிகாரிகள் சுரேஷ், சதீஷ் , பாபு ஆகியோர்க்கு தொடர்பு உள்ளதாக காவல்துறை தெரிவித்து அவர்களுக்கு எதிராக மிரட்டல், பொது ஊழியர் கடமை தவறி செயல்படுதல், நேர்மையற்ற முறையில் பிறர் சொத்துகளை அபகரித்தல், தகவலை மறைத்தல், அடைத்து வைத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தது.
இதையும் படிங்க: 14 கோடி மக்கள் தவிப்பு! மக்கள் தொகை கணக்கெடுப்பை விரைவாக நடத்துங்கள்: சோனியா காந்தி வேண்டுகோள்
ஆயிரம் விளக்கு காவல்நிலையத்தில் பதிவு செய்த வழக்கில் ராஜா சிங், சன்னிலாய்டு, வருமானவரித் துறை அதிகாரிகள் தாமோதரன் பிரதீப், பிரபு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இந்த வழக்கில் ஜாமீன் கோரி உதவி ஆய்வாளர் ராஜா சிங், வருமானவரித் துறை அதிகாரிகள் தாமோதரன், பிரதீப் ஆகிய மூன்று பேர் சென்னை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கு சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி கே.கீதாராணி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணை வரும் வியாழக்கிழமை தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ரூ.15 லட்சம் கொடுத்து மனைவிக்கு ரயில்வேயில் வேலை.. விவாகரத்தால் வெளிவந்த ஊழல்.. பழி தீர்த்த கணவர்..!