ஐயப்ப பக்தர்கள் கேரளாவில் இறந்தால் ரூ.5 லட்சம் இன்சூரன்ஸ்.. திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிவிப்பு..!
கேரள மாநிலத்தில் ஐயப்ப பக்தர்கள் மரணமடைந்தால் அவர்களது குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் காப்பீடு வழங்கப்படும் என தேவசம்போர்டு அறிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்களின் பாதுகாப்புக்காக பல்வேறு திட்டங்களை திருவிதாங்கூர் தேவசம்போர்டு அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் சபரிமலை செல்லும் பக்தர்கள் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தால் அவர்களது குடும்பத்தினருக்கு ஐந்து லட்ச ரூபாய் இன்சூரன்ஸ் தொகை வழங்கப்படும் திட்டம் கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்டது.
ஆனால் பத்தினம்திட்டா, இடுக்கி, கோட்டயம், ஆலப்புழா ஆகிய 4 மாவட்டங்களுக்குள் விபத்தில் சிக்கினால் மட்டுமே இந்த தொகை கிடைக்கும் என்ற நிலை இருந்தது. இந்த நிலையில் கேரள மாநிலத்தில் எங்கு விபத்து நடந்து ஐயப்ப பக்தர்கள் பலியானாலும், ரூ.5லட்சம் இன்சூரன்ஸ் தொகை கிடைக்கும் என அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: கேரள மாநில பாஜக தலைவராகிறார் ராஜீவ் சந்திரசேகர்.. வேட்புமனுத் தாக்கல் செய்தார்..!
இது தொடர்பாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த் பேசுகையில், சபரிமலைக்கு வரக்கூடிய ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருவதாகவும், சபரிமலைக்கு வரும் பக்தர்கள் சாலை விபத்தில் சிக்கி மரணமடைந்தால், அவர்களது குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இன்சூரன்ஸ் வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்டது என்றும் தெரிவித்தார்.
ஆனால் சபரிமலை கோவில் உள்ள பத்தினம்திட்டா மற்றும் அதனை சுற்றியுள்ள கோட்டயம், ஆலப்புழா, இடுக்கி ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் விபத்துகளில் இறந்தால் மட்டுமே இன்சூரன்ஸ் தொகை வழங்க முடியும் என்று காப்பீடு நிறுவனங்கள் நிபந்தனை விதித்ததாகவும் இந்த நிபந்தனை தற்போது தளர்த்தப்பட்டு கேரள மாநிலத்தில் எந்த பகுதியில் சாலை விபத்தில் சிக்கி ஐயப்ப பக்தர்கள் மரணமடைந்தாலும், அவர்களது குடும்பத்துக்கு காப்பீட்டு தொகை கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.
சபரிமலை வரும் வழியில் மாரடைப்பு மற்றும் பல்வேறு நோய்கள் காரணமாக இயற்கையாக மரணமடையும் பக்தர்களுக்கும் காப்பீடு வழங்க தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், 3 லட்சம் தற்போது நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகவும், இத்திட்டத்திற்கு நிதி சேகரிக்க திட்டம் உள்ளதால், முன்பதிவு செய்யும் பக்தர்களிடம் இருந்து 5 ரூபாய் வசூலிக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
இதையும் படிங்க: கேரளாவில் பாஜ நிர்வாகி சுட்டுக்கொலை.. வேட்டை துப்பாக்கியால் கதை முடிப்பு.. பேஸ்புக்கில் பதிவிட்டபடி அரங்கேறிய கொலை..!