ஈரோடு டூ ஜெயலலிதா சமாதி..! எடப்பாடியாருக்கு எதிராக போர்க்கொடி.. தர்மயுத்தத்திற்கு தயாராகும் செங்கோட்டையன்..?
சசிகலா, தினகரன், ஓபிஎஸ் என மூன்று அணிகளாக அதிமுக உதிர்ந்து கிடக்கும் நிலையில் செங்கோட்டையனின் கலகத்தை எண்ணி எடப்பாடி பழனிச்சாமி கலக்கத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
அதிமுகவில் சீனியர் தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் செல்வாக்கு மிக்க தலைவராகவும் இருந்து வருகிறார். ஜெயலலிதா காலத்தில் அவ்வப்போது பந்தாடப்பட்டாலும் அவருக்கென்றது தனி தொண்டர் படையும் உள்ளது. சீனியர் தலைவர், விவரம் அறிந்தவர், அரசியல் அனுபவசாளி, திறமையானவர் என இத்தனை பண்புகளும் பொருந்தி இருந்ததால்தான் சசிகலா சிறைக்கு செல்லும் நேரத்தில்கூட, சசிகலாவின் முதல் சாய்ஸாக இருந்தவர் செங்கோட்டையன்.
அதிமுகவில் அவருக்கு இருக்கும் செல்வாக்கு அப்படியே நீடித்தது. தனிப்பெரும் செல்வாக்கு கொண்ட நபராக இருக்கும் செங்கோட்டையனுக்கு ஜூனியரான எடப்பாடி பழனிச்சாமி முந்திக்கொண்டு முதலிடத்திற்கு சென்றது அவருக்கு சற்று வருத்தத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இருப்பினும், கட்சியின் பொதுச் செயலாளர் என்பதால் இத்தனை நாள் பொறுத்துக் கொண்டு வந்த செங்கோட்டையன் திடீரென கட்சித் தலைமைக்கு எதிராக மறைமுக போர் கொடியை உயர்த்தினார்.
இதையும் படிங்க: சபாநாயகரை தனியே சந்தித்த செங்கோட்டையன்... இபிஎஸ்க்கு எதிராக காய் நகர்த்தலா?
அத்திக்கடவு -அவிநாசி திட்ட பாராட்டு விழாவில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரது புகைப்படங்கள் இடம் பெறவில்லை எனக் கூறிவிட்டு செங்கோட்டையன் கண்டனம் தெரிவித்தார். அதற்கு பிறகு செய்தியாளர்களை சந்திக்கும் போதெல்லாம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பெயரை குறிப்பிடாமல் அவர் பேசி வந்தார். புகைப்பட சர்ச்சைக்கு பிறகு நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் எடப்பாடி பழனிச்சாமிக்கு நிகராக செங்கோட்டையன் புகைப்படமும் இடம்பெற்றது. இரு தரப்பினரும் தங்களுக்குள்ளே முரண்பாடு இல்லை என தம்பட்டம் அடித்துக் கொண்டாலும் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்கும் நிகழ்ச்சிகளை செங்கோட்டையன் புறக்கணித்து கொண்டே இருந்தார்.
அண்மையில் நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் கூட்டத்திற்குக்கூட விருப்பமில்லாமல்தான் செங்கோட்டையன் சென்றதாக கூறப்படுகிறது. இதனிடையே அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி இல்ல திருமண விழாவில் முன்னாள் அமைச்சர் அனைவரும் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடன் சென்று மணமக்களை வாழ்த்திய நிலையில் செங்கோட்டையன் மட்டும் தனியாக சென்று வாழ்த்துக்களை தெரிவித்து விட்டு எடப்பாடி பழனிசாமி வருகைக்கு முன்பே வெளியேறி விட்டார். தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்க வந்த செங்கோட்டையன், எடப்பாடி பழனிச்சாமியை எப்படி எதிர் கொள்வார் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் வழக்கமான பாதையைத் தவிர்த்த செங்கோட்டையன் தனக்கென தனி ரூட் எடுத்து பேரவைக்கு சென்றதாக சொல்லப்படுகிறது.
சட்டசபையில்கூட எடப்பாடி பழனிச்சாமியை பார்த்ததும் பலரும் வணக்கம் வைக்க, செங்கோட்டையன் மட்டும் கண்டும் காணாததை போல இருந்து விட்டார். இதிலிருந்து எடப்பாடி பழனிச்சாமியின் தலைமை மீது அதிருப்தி கொண்டிருப்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. அத்தோடு கூட்டத்திற்கு பிறகு நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்திலும் செங்கோட்டையன் பங்கேற்காதது அதிமுகவினர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து தலைமைக்கு எதிரான போக்கை கடைபிடித்து வரும் செங்கோட்டையன் ஓபிஎஸ் போல தர்மயுத்தம் தொடங்கி கலகக் குரல் எழுப்புவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே சசிகலா, தினகரன், ஓபிஎஸ் என மூன்று அணிகளாக அதிமுக உதிர்ந்து கிடக்கும் நிலையில் செங்கோட்டையனின் கலகத்தை எண்ணி எடப்பாடி பழனிச்சாமி கலக்கத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அதிரும் அதிமுக... அடுத்தடுத்து நடந்த சண்டையால் இபிஎஸ் அப்செட்!!