×
 

இன்று முதல் அறிமுகமாகிறது சிங்கார சென்னை ஸ்மார்ட் கார்டு...

ஒரேசமயத்தில் மெட்ரோ, பேருந்து, புறநகர் ரயிலில் பயணிக்கலாம்...

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை மாநகரில் 67 லட்சம் பேர் வசிப்பதாகவும், புறநகர் உள்ளிட்ட விரிவுபடுத்தப்பட்ட சென்னை மாநகர எல்லைகளை சேர்த்துக் கொண்டால் ஒன்றேகால் கோடி பேர் வசிக்கும் மாபெரும் நகராக திகழ்கிறது சென்னை. 

இவர்களில் பெரும்பாலானோர் தங்கள் போக்குவரத்துக்கு நம்பி இருப்பது மாநகர அரசு பேருந்துகளையும், புறநகர் ரயில் சேவையையும் தான். அந்த வரிசையில் கடைசியாக இணைந்துள்ள மெட்ரோ ரயிலையும் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் இந்த மூன்றிலும் பயணிக்க இதுவரை தனித்தனியே டிக்கெட்டுகள் பெறவேண்டிய சூழல் இருந்தது.  

முதியோர் மற்றும் போதிய கல்வியறிவு இல்லாதோர் மெட்ரோ ரயில் போன்றவற்றில் டிக்கெட் எடுப்பதில் தடுமாறுவதை பார்க்க முடிகிறது. இந்த சிக்கலுக்கு தீர்வு காணும் விதமாக மாநகர பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் மூன்றிலும் ஒரே டிக்கெட்டில் பயணிக்கும் முறையை தமிழ்நாடு அரசு இன்று அறிமுகப்படுத்துகிறது.

இதையும் படிங்க: காலிஃபிளவரில் கஞ்சா கடத்தி வந்த பெண் யார்? சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை..!

தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் இதற்கான சிங்கார சென்னை ஸ்மார்டு கார்டு திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளார். முதல்கட்டமாக 50 ஆயிரம் ஸ்மார்ட் கார்டுகள் வெளியிடப்பட உள்ளனவாம். இதற்காக எஸ்பிஐ வங்கியுடன் இணைந்து தமிழக அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. நமக்கு தேவையான பணத்தை செலுத்தி இந்த கார்டினை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். எனவே பேருந்துகளில் சரியான சில்லரை கொடுத்து டிக்கெட் எடுக்கவும் என்ற பாரம்பரிய பல்லவிக்கு விடைகொடுக்க முடியும். கூடவே புறநகர் ரயிலோ, மெட்ரோ ரயிலோ டிக்கெட் எடுக்க வரிசையில் நிற்காமல் நேரவிரயம் செய்யாமல் நினைத்த நேரத்திற்கு நினைத்த இடத்திற்கு பயணிக்க முடியும். 

சென்னை மாநகர போக்குவரத்துத் துறையின் கீழ் 3,400 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவுக்குள் இவை சென்று வருகின்றன. நாளொன்றுக்கு 3 லட்சம் பேர் அரசு பேருந்துகளில் பயணிக்கின்றனர். மகளிருக்காக இலவச பேருந்துகள் முதல் ஏசி பஸ்கள் வரை இயக்கப்படுகின்றன. 32 பணிமனைகள் உள்ளன.  இதேபோன்று 235 கிலோ மீட்டர் சுற்றளவை கொண்டு இயங்குகிறது புறநகர் ரயில்சேவை. அதிகாலை 4 மணிக்கு தொடங்கி நள்ளிரவு வரை நாளொன்றுக்கு ஆயிரம் முறை இந்த ரயில் இயக்கப்படுகிறது. சென்னை கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு, அரக்கோணம், கும்மிடிப்பூண்டி என நான்கு திசைகளிலும் ரத்தநாளங்களாக ஓடி சென்னையை இணைக்கிறது. சென்னை விமானநிலையத்தில் இருந்து இரண்டு வழித்தடங்களில் விம்கோ நகர் வரையிலும், சென்னை சென்ட்ரலை இணைத்து மெட்ரோ ரயில் 54 கிலோ மீட்டர் தொலைவுக்கு சேவை வழங்கி வருகிறது.

இனி ஒரேயொரு ஸ்மார்ட் கார்டு மூலம் இந்த மூன்றிலும் பயணிக்கலாம்..

இதையும் படிங்க: தூத்துக்குடி மக்களின் உயிர் துடிப்பு .. முத்துநகர் அதிவேக விரைவு ரயிலுக்கு வயசு இப்போ 145 ..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share