தமிழ்நாட்டில் ஆளுநர் கேஷுவல் லேபர் மட்டுமே..திமுக ஆர்.எஸ்.பாரதி கடும் தாக்கு!
தமிழ்நாட்டில் ஆர்.என்.ரவி தற்போது ஆளுநர் கிடையாது, கேஷுவல் லேபர் மட்டுமே என ஆர்.எஸ்.பாரதி விமர்ச்சித்துள்ளார்.
2025 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியதுமே சர்ச்சையும் தொடங்கிவிட்டது . சட்டசபைக்குள் முதல் நிகழ்வாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதையடுத்து, கவர்னர் தேசிய கீதம் பாட வேண்டும் என்று அறிவுறுத்தியதாக தெரிகிறது. அதை ஏற்க மறுத்ததால் கவர்னர் தமது உரையை வாசிக்காமல் அவையை விட்டு வெளியேறினார் .தமிழ்நாட்டையும் தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக அறிவித்திருந்தது. அந்த வகையில் திமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசி அவரிடம் ஆளுநர் விவகாரம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, பதவிக்காலம் முடிவடைந்த ஆளுநர் ஆர் என் ரவி தமிழ்நாட்டில் தற்போது கேஷுவல் லேபர் மட்டுமே, நிரந்தர ஆளுநர் கிடையாது என்றார். நிரந்தர ஆளுநராக இல்லாதபோது நாம் ஏன் ஆளுநர் உரையை வாசிக்க வேண்டும் என மனம் ஏற்க மறுத்து அவரே வெளிநடப்பு செய்து விட்டார் என தெரிவித்தார்.
பெரியாரை விடவா மற்றவர்கள் தமிழ்த்தாயை அவமதித்துவிட்டார்கள் என அர்ஜுன் சம்பத் கூறியது பற்றிய கேள்விக்கு, அர்த்தமுள்ளவர்கள் பேசினால் பதில் கூறலாம் தான்தோன்றித்தனமாக பேசுபவர்களுக்கு எல்லாம் பதில் அளிக்க முடியாது எனவும், பெரியாரைப் பழித்தவன் இந்த நாட்டில் இருக்க முடியாது என்றும், பெரியாரைப் பழித்தவனை மனிதனாக ஏற்க முடியாது என தெரிவித்தார். பல்கலைக்கழக மானியக் குழு சட்ட திருத்தம் தொடர்பான கேள்விக்கு, துணைவேந்தரை நியமிக்காததால் தான் அண்ணா பல்கலைக்கழகத்தில் குழப்பங்கள் ஏற்பட்டன எனவும், இவற்றுக்கெல்லாம் காரணம் ஆளுநர் தான் என இப்போது ஒப்புக் கொள்கிறீர்களா என ஆர் எஸ் பாரதி கேள்வி எழுப்பினார்.
தற்போது ஸ்டாலின் வலியுறுத்துவதைப் போல, ஜெயலலிதாவும் துணைவேந்தர்களை மாநில அரசுகளே நியமனம் செய்ய வேண்டும் என கூறியிருந்தார் என்றும், இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் பலர் பேசுவதாக ஆர்.எஸ்.பாரதி சாடினார்.
இதையும் படிங்க: திமுகவை பழித்து பேசாதீர்கள்..அப்புறம் குடும்பத்தில் கலவரம் வரும்..ராமதாஸை கலாய்த்த ஆர்.எஸ்.பாரதி
இதையும் படிங்க: கருப்புச்சட்டையில் சட்டப்பேரவைக்கு வந்த அதிமுக எம்எல்ஏக்கள்...