மூதாட்டியிடம் செயின் பறிப்பு.. விபத்தில் சிக்கிய திருடர்கள்.. மாவுக்கட்டு போட்ட போலீஸ்..!
சூலூரில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடன் செயின் பறிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகள் 2 பேருக்கு விபத்தில் சிக்கியதில் காலில் முறிவு ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
கோவை மாவட்டம் சூலூர் அருகே காமாட்சி தேவர் லேஅவுட் பகுதியில் வசித்து வருபவர் தேவிகா (வயது 67). கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக தனது பேத்தியுடன் காய்கறி வாங்க கடைக்கு சென்று உள்ளார். காய்கறி வாங்கி விட்டு வீடு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது அவ் வழியே இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் தேவிகாவின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றனர்.
அதிர்ச்சி அடைந்த தேவிகா, தனது தங்கச் சங்கிலியை கெட்டியாக பிடித்துக் கொண்டார். இதனால் தங்கச் சங்கிலியின் ஒரு சிறு பகுதி மட்டும் செயின் பறிப்பு நபர்களிடம் சிக்கியது. இதில் தேவிகா கீழே விழுந்து காயமடைந்தார். முதலுதவி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சை முடிந்த பின்னர் சூலூர் காவல் நிலையம் சென்ற தேவிகா, இது பற்றி புகார் அளித்தார். உடனே சூலூர் போலீசார் சூலூர் ஆய்வாளர் லெனின் அப்பாதுரை தலைமையில் உதவி ஆய்வாளர்கள் ராஜேந்திர பிரசாத் மற்றும் முருகநாதன் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைத்து செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர்களை அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் உதவியுடன் தேடி வந்தனர்.
இந்நிலையில் வியாழக்கிழமை சூலூர் போலீசாருக்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் இரண்டு நபர்கள் விபத்தில் சிக்கி சிகிச்சைக்காக வந்திருப்பதாக சூலூர் அரசு மருத்துவமனையில் இருந்து தகவல் கிடைத்தது.
இதையும் படிங்க: இதை சாப்பிட்டா என்ன ஆகுறது..? புழுக்களுடன் பிரியாணி பொட்டலங்கள்.. வாடிக்கையாளர் அதிர்ச்சி..!
அங்கு சென்று பார்த்தபோது ஒரு நபர் கால் உடைந்த நிலையிலும் மற்றொருவர் கை உடைந்த நிலையிலும் சிகிச்சை பெற்று வந்தனர். விசாரணையில் அவர்கள் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர்கள் என தெரியவந்தது. கோயம்புத்தூர் சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்த அப்துல் மஜீத் மகன் முபாரக் அலி (வயது 33), கோவை புலியகுளம் பாலசுப்பிரமணிய நகரை சேர்ந்த மாரிமுத்து மகன் பிரதீப் குமார் (வயது 23) என தெரிய வந்தது. இவர்கள் செயின் பறிப்பில் ஈடுபட்டு பின்னர் அவினாசி சாலை வழியாக மகாராஜா தீம் பார்க் அருகே சென்ற போது வாகன விபத்தில் சிக்கி காயம் அடைந்ததும் தெரியவந்தது.
முபாரக் அலிக்கு செயின் பறிப்பு மற்றும் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய 7 வழக்குகள் சூலூர் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது. இதில் முபாரக் அலிக்கு காலில் எலும்பு முறிவும் பிரதீப் குமாருக்கு கையில் எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளது. சூலூர் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து சூலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
சூலூர் அருகே வயதான மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்கள் வாகன விபத்தில் சிக்கி, மாவுக்கட்டு போட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: மருதமலையில் நாளை கும்பாபிஷேகம்.. இன்று வேல் மாயம்.. பக்தர் வேடத்தில் வந்த திருடன்..!