தவெக பொதுக்குழுவில் பேசிய அக்கட்சித் தலைவர் விஜய் பேசியதுதான் தமிழக அரசியலில் ஹாட் டாபிக். 31 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்ட அதிமுகவை பொருட்டாக விஜய் கருதாத நிலையில், ஏற்கனவே அதிமுகவில் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், விஜய்யின் இந்தப் பேச்சை திமுகவில் எப்படிப் பார்க்கிறார்கள்?

வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், "யார் யாருக்கு போட்டி என்பது குறித்து நாங்கள் (திமுக) கவலைப்படவில்லை. நாங்கள் உழைக்கிறோம். அதனால், நாங்கள் வெற்றி பெறுவோம். வேறு யாரும் எங்கு சேர்ந்தாலும் எங்களுக்குக் கவலை இல்லை" என்று தெரிவித்தார்.
தூத்துக்குடியில் பேசிய திமுக எம்.பி. கனிமொழி, "எல்லோரும் திமுகவைத்தான் போட்டியாக நினைக்கிறார்கள். ஆனால், நிச்சயமாக திமுகவுக்குப் போட்டியாக யாரும் இல்லை. முதல்வருக்குப் போட்டியாக எந்தத் தலைவரும் களத்தில் இல்லை. இது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: திமுக - தவெக இடையில தான் போட்டியே... விஜய் அதிமுகவை சீண்டாதது ஏன்..? ரகசியம் உடைத்த கே.பி.முனுசாமி..!
சென்னையில் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, "திமு கழகம் என்பது 75 ஆண்டுகளாக இருக்கக்கூடிய ஒரு பெரிய ஆலமரம். யார் அரசியலுக்கு வந்தாலும் இந்தக் கட்சியைத் தொட்டுவிட்டுதான் செல்ல வேண்டும். பலரும் கட்சியைத் தொடங்கினார்கள். இறுதியில் அவர்கள் திமுகவோடுதான் வந்து ஐக்கியமானார்கள். எனவே, யார் என்ன சொன்னாலும் அதைப் பற்றியெல்லாம் கவலை இல்லை.. இதுவெல்லாம் வெறும் நகரும் மேகங்கள்(பாஸிங் கிளவுட்ஸ்). இப்படிக் கடந்த 75 ஆண்டு காலத்தில் நிறைய பார்த்துவிட்டோம்." என்று தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, "திமுகவிற்கு எந்தக் கட்சியும் போட்டியில் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதில் எப்போதும் முதல் நபர் மு.க.ஸ்டாலின்தான். இது மன்னராட்சி இல்லை, மக்களாட்சி. தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி." என்று தெரிவித்தார்.

சென்னையில் திமுக அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், "அவர்கள் (தவெக) தவளுகின்ற குழந்தைகள். நாங்கள் பி.டி.உஷா போல் பல்வேறு ஓட்டப்பந்தயங்களைக் கண்டு வெற்றி பெற்றவர்கள். கரடு முரடான பாதைகளைக் கடந்து வந்தவர்கள். அவர்கள் சிறை என்றால் என்னவென்றே தெரியாதவர்கள்; போராட்டக் களத்தை அறியாதவர்கள். மக்கள் பணி என்றால் என்னவென்று தெரியாதவர்கள். புயல், மழை, வெள்ளம் போன்றவற்றைக்கூட தன்னுடைய இருப்பிடத்துக்கு அழைத்து 10 பேருக்கு நலத்திட்ட உதவிகளை கொடுத்து, அதை போட்டோ எடுத்து போட்டுக் கொண்டு அதையும் பிரசுரிப்பதற்கு ஊடகங்கள் தயாராக இருப்பதுதான் தமிழகத்தின் நிலை. அதனால்தான் அவர்கள் (விஜய்) இப்படி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
இதையும் படிங்க: தமிழக மக்களை துன்புறுத்துவது நிதியை நிறுத்தி பாஜகவா..? டாஸ்மாக் மூலம் திமுகவா..? சமூக ஆர்வலர்கள் ஆவேசம்..!