சிம்லாவுக்கு அடுத்தபடியாக மலைப் பிரதேசத்தில் கட்டப்பட்டுள்ள இரண்டாவது மருத்துவக் கல்லூரி மருத்துவமனை என்ற பெருமையை நீலகிரி மருத்துவக் கல்லூரி பெற்றுள்ளது உதகை மருத்துவமனை. நாட்டிலேயே பழங்குடியினருக்கு என 50 படுக்கைகளுடன் தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது என்பது இந்த அரசு மருத்துவமனையின் சிறப்பாக பார்க்கப்படுகிறது.

இம்மருத்துவமனையின் திறப்பு அப்பகுதி மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை நீலகிரி மக்கள் உயர் சிகிச்சைக்காகக் கோவை அல்லது மைசூர் போன்ற தொலைதூர நகரங்களுக்குச் செல்ல வேண்டியிருந்த நிலை மாறி, இனி ஊட்டியில் உலகத்தரம் வாய்ந்த மருத்துவ சேவைகளைப் பெற முடியும். கடந்த 3 ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித்துறையினரும் இணைந்து பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையே மருத்துவமனை பணிகளை முடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை நோக்கி பயணம்..! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..!

இந்த நிலையில், உதகை பிங்கர் போஸ்ட் பகுதியில் ரூபாய் 499 கோடி மதிப்பீட்டில் 45 ஏக்கர் பரப்பளவில் புதிதாக கட்டப்பட்டுள்ள 700 படுக்கை வசதிகள் கொண்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதலமைச்சர் ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டிற்கு இன்று திறந்து வைத்தார். பின்னர் மருத்துவமனையை முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டார்.

உதகை அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்ளும் முதலமைச்சர், 494.51 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற 1700 திட்டப் பணிகளை துவக்கி வைப்பதுடன், 130 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 56 புதிய வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். தொடர்ந்து 102.17 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 15,634 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.

இதனை தொடர்ந்து இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் கொங்குநாடு கலைக்குழு சார்பில் நடைபெறும் வள்ளி கும்மியாட்ட நிகழ்ச்சியை பார்வையிடுகிறார். தொடர்ந்து சாதனைப்படைத்த பெண்களை கவுரவிக்க உள்ளார்.
இதையும் படிங்க: ஆ.ராசாவின் சர்ச்சை பேச்சு..! எங்க தலைவர் அத சொல்லல.. மறுக்கும் சேகர்பாபு..!