பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை கடத்திய பலூச் தீவிரவாதிகளுடனான மோதலில், பாதுகாப்பு படைகள் 27 பேரை கொன்று, 155 பயணிகளை மீட்டுள்ளன. கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த கொடூர ரயில் கடத்தல் சம்பவத்தில் போலீசுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே சண்டை புதன்கிழமையும் நீடித்தது.

குவெட்டாவிலிருந்து பெஷாவருக்கு 500 பயணிகளுடன் சென்ற ரயில், போலான் பகுதியின் குடலார் மற்றும் பிரு குன்ரி அருகே சுரங்கப்பாதையில் பலூசிஸ்தான் விடுதலை இராணுவம் (BLA) தாக்கியது. தீவிரவாதிகளின் தாக்குதலில் ரயில் தடம்புரண்டு பயணிகள் அலறியதால் குழப்பம் நிலவியது.
இதையும் படிங்க: 400 பேருடன் ரயில் கடத்தல்: பாகிஸ்தானுக்கு இந்த விஷயத்திலும் இந்தியாதான் ஹெட் மாஸ்டரு..!
மலைப்பகுதியில் உள்ள 17 சுரங்கங்கள் மற்றும் கடினமான நிலப்பரப்பு என்பதால் ரயில்கள் மெதுவாகவே செல்லும் இதை சாதகமாக பயன்படுத்தி இந்த இடத்தில் ரயில் கடத்தல் நிகழ்ந்தது. மீட்பு நடவடிக்கையில் 37 பயணிகள் காயமடைந்து, சிகிச்சைக்கு அனுப்பப்பட்டனர். தற்கொலை படையினரை பயன்படுத்தி, பெண்கள் மற்றும் குழந்தைகளை மூன்று இடங்களில் பிணைக் கைதிகளாக வைத்திருப்பதால், மீட்பு பணி சவாலாக உள்ளது.

“தீவிரவாதிகள் இருட்டில் சிறு குழுக்களாக தப்ப முயன்றுள்ளனர். ஆனால் கடுமையாக போராடி சுரங்கத்தை சுற்றிவளைத்துள்ளோம்,” என்று பாதுகாப்பு தரப்பு தகவல்கள் தெரிவித்ததுள்ளது.மீதமுள்ள பிணைக் கைதிகள் விரைவில் மீட்கப்படுவர் என்றும் பாதுகாப்பு படை தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
தீவிரவாத அமைப்பாளர் BLA பொறுப்பை ஏற்று, ஆறு பாதுகாப்பு பணியாளர்களை கொன்றதாகவும், பெண்கள் மற்றும் குழந்தைகளை விடுவித்ததாகவும் கூறியது. ஆனால், பாகிஸ்தான் உள்துறை இணை அமைச்சர் தலால் சவுத்ரி, பாதுகாப்பு படைகளே மீட்புப் பணிகளை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான், மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட இக்குழு, இராணுவம் தலையிட்டால் பிணைக் கைதிகளை கொல்வோம் என எச்சரித்திருந்தது. பலூசிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளன என்பதை இது காட்டுவதாகவே அமைந்துள்ளது.
கடந்த நவம்பரில், குவெட்டா ரயில் நிலையத்தில் நடந்த தற்கொலை தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். $60 பில்லியன் மதிப்புள்ள சீனா-பாகிஸ்தான் பொருளாதார திட்டங்களையும் இந்த தீவிரவாத குழுக்கள் குறிவைக்கின்றன.

பெஷாவர் மற்றும் குவெட்டாவில் ரயில்வே அவசர மையங்கள் அமைக்கப்பட்டு, ரயிலில் பயணம் செய்த உறவினர்கள் குறித்த தகவல்களை தேடி வருகின்றனர். சமூக ஊடக வதந்திகளை நம்ப வேண்டாம் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பிணைக் கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பாகிஸ்தான் பாதுகாப்பு படைகள் தெரிவித்துள்ளன.
இதையும் படிங்க: பாகிஸ்தானில் 500 பயணிகளுடன் ரயில் ஹைஜாக்... அதிரவைத்த பலூச் கிளர்ச்சிப் படை...!