தமிழகத்திற்கு உரித்தான நிதியை ஒதுக்க வேண்டுமென்றால் மும்மொழி கொள்கையை கட்டாயம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற மத்திய அரசு கூறிவிட்டது. இரு மொழிக் கொள்கைதான் தமிழகத்தில் பின்பற்றப்படும் என்று திமுகவும் முட்டுக்கொடுத்து போராடி வருகிறது.
ஒரு பக்கம் தேசிய கல்விக் கொள்கை மூலம் ஹிந்தியை மத்திய அரசு திணிப்பதாக தி.மு.க., குற்றம் சாட்டி வருகிறது. மறுபக்கம் மூன்றாவது மொழியாக விரும்பும் மொழியை தேர்வு செய்யலாம் என்று மத்திய அரசு விளக்கமளித்து வருகிறது. இந்த விவகாரம் மத்திய மாநில அரசுக்கு இடையே மோதல் போக்கை ஏற்படுத்தி வருகிறது. ஹிந்தி திணிப்பு கூடாதென திமுகவினரும், இது ஹிந்தி திணிப்பே அல்ல என பாஜகவினரும் மாறி மாறி பேசி வருகின்றனர்.

இந்த நிலையில் ஜனசேனா கட்சியின் 12ம் ஆண்டு துவக்க விழாவில் பேசிய ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக சில கருத்துக்களை கூறினார். அதில் லாப நோக்கத்திற்காக தமிழ் படங்களை ஹிந்தியில் டப்பிங் செய்ய ஏற்றுக்கொள்கிறார்கள்., ஆனால் ஹிந்தி மொழி கூடாதென சொல்கிறார்கள் இது என்ன தர்க்கம் என கேள்வி எழுப்பி இருந்தார்.
இதையும் படிங்க: ஹிந்தியை ஏற்க மறுப்பது என்ன லாஜிக்? கிழித்தெடுத்த பவன் கல்யாண்!
நம் நாட்டுக்கு இருமொழிகள் போதாது, பல மொழிகள் அவசியம் என்றும் அது நம் நாட்டின் ஒருமைப்பாட்டை பேணுவதற்கு மட்டுமல்லாமல், அன்பையும் ஒற்றுமையையும் வளர்க்கும் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ஆந்திரா துணை முதலமைச்சர் பவன் கல்யாண் பேச்சுக்கு திமுக எம்பி கனிமொழி, டி கே எஸ் இளங்கோவன் ஆகியோர் பதிலடி கொடுத்துள்ளனர்.
தி.மு.க., எம்.பி., கனிமொழி தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பா.ஜ.,வுக்கு முன், பா.ஜ.,வுக்கு பின் என்று வெவ்வேறு காலகட்டங்களில் ஹிந்திக்கு எதிர்ப்பாகவும், ஆதரவாகவும் பவன் கல்யாண் வெளியிட்ட பதிவுகளை கனிமொழி பகிர்ந்துள்ளார்.

மேலும், பவன் கல்யாணின் பேச்சு தொடர்பாக தி.மு.க., செய்தித்தொடர்பாளர் டி.கே.எஸ்., இளங்கோவன் கூறுகையில், 1938ம் ஆண்டு முதல் ஹிந்தியை எதிர்த்து வருகிறோம் என்றும் இரு மொழிக் கொள்கையை தான் பின்பற்றுவோம் என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம் எனவும் இதற்கு கல்வியில் சிறந்து விளங்கும் நிபுணர்களின் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளே காரணம் எனவும் தெரிவித்தார்.

1968களில் இதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்ட போது, பவன் கல்யாண் பிறந்திருக்கவே மாட்டார் என விமர்சித்த அவர், தமிழக அரசியலைப் பற்றி அவருக்கு தெரியாது என்றும் ஹிந்தியை நாங்கள் எதிர்ப்பது இது முதல் முறை அல்ல. தாய்மொழியில் கல்வி அளிப்பதே சிறந்தது என கருதுவதால், நாங்கள் ஹிந்தியை எதிர்க்கிறோம், பா.ஜ.,விற்கு ஏதாவது ஒரு வகையில் ஆதரவு அளித்தால், அதன் மூலம் பா.ஜ.க, அரசிடம் இருந்து ஏதாவது பலன் கிடைக்கும் என அவர் நினைக்கிறார் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: எனக்காக இதை செய்யுங்க விஜய்! மரணப்படுக்கையில் கோரிக்கை வைத்த ஷிகான் ஹூசைனி!