98வது அகில இந்திய மராத்தி சாகித்ய சம்மேளனத்தின் தொடக்க விழா இன்று டெல்லியில் நடைபெற்றது. இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தேசியவாத காங்கிரஸ் (சமாஜ்வாடி) தலைவர் சரத் பவார், மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர். அப்போது, மேடைக்கு வந்த சரத் பவாருக்கு உதவ பிரதமர் மோடி தனது கையை நீட்டினார். அவரை ஒரு நாற்காலியில் அமர வைத்து உதவினார். ஒரு பாட்டிலில் இருந்து அவருக்கு ஒரு கிளாஸ் தண்ணீரை நிரப்பிக் கொடுத்தார். இதைப் பார்த்து அரங்கம் முழுவதும் கரவொலி எழுப்பியது.
மேடையில் பிரதமர் மோடி- சரத் பவாரின் நாற்காலிகள் அருகருகே வைக்கப்பட்டிருந்தன. அதே நேரத்தில், நிகழ்ச்சியின் தொடக்கத்தில் விளக்கு ஏற்றப்படும் போதும், பிரதமர் மோடி, சரத் பவாரை முன்னுக்கு அழைத்து, அவருடன் சேர்ந்து விளக்கை ஏற்றினார். இந்த நேரத்திலும் அங்கிருந்தவர்கள் நிறைய கைதட்டினர்.

பிரதமர் மோடி தனது தொடக்க உரையில் மராத்தி இலக்கியத்தைப் பாராட்டிய அதே வேளையில், சரத் பவாரும் பிரதமர் மோடியைப் பாராட்டி, டெல்லியில் மராத்தி சாகித்ய சம்மேளனத்தை ஏற்பாடு செய்ததற்காக அவருக்கு நன்றி தெரிவித்தார்.
இதையும் படிங்க: அரசியல் எதிரி சரத் பவாருக்கு சேரை பிடித்து அமர வைத்த மோடி..! பாட்டிலில் இருந்து தண்ணீரையும் ஊற்றிக் கொடுத்தார்..!
சரத் பவார் பேசும்போது, ''மராத்தி இலக்கியம் சுதந்திரக் கொடியை உயர்த்தியுள்ளது. நாட்டின் தலைநகரில் மராத்தி மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இங்கு வந்திருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மராத்தியை செம்மொழியாக மாற்றியதில் மோடியின் பங்கு முக்கியமானது. மராத்தி சாகித்ய சம்மேளனத்தை பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு தொடங்கி வைத்தார். 70 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மாநாடு டெல்லியில் நடைபெறுகிறது.
அழைப்பைப் பெற்றவுடன், நரேந்திர மோடி உடனடியாக அதை ஏற்றுக்கொண்டார். என்னுடைய குரு யஷ்வந்த் ராவ் சவான் ஒரு சிறந்த எழுத்தாளர். பல மாநாடுகள் நடத்தப்பட்டன. ஆனால் நான்கு பெண்கள் மட்டுமே மாநாட்டுத் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த மாநாட்டின் தலைவராக தாரா பவால்கர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம். டெல்லியும் மகாராஷ்டிராவும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. மகாராஷ்டிராவிற்கும், டெல்லிக்கும் இடையே அரசியல் மற்றும் கலாச்சார உறவுகள் இருக்கிறது.

அப்போது, பல சகோதரிகள் இலக்கியத் துறையில் பங்களித்துள்ளனர்.எந்தவொரு இலக்கிய மாநாட்டைப் பற்றியும் நாம் பேசும்போது, அரசியல்வாதிகளுக்கும் அதற்கும் என்ன சம்பந்தம் என்ற விவாதம் தொடங்குகிறது? அரசியலுக்கும், இலக்கியத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. தற்போது தகவல் தொடர்பு ஒரு கடினமான, நுட்பமான சூழ்நிலையைக் கடந்து செல்கிறது. எனவே இப்போது எழுத்தாளர்களின் பொறுப்பு அதிகரித்துள்ளது. இந்த நிகழ்வில், பிரதமர் நரேந்திர மோடி கூட்டத்தில் கலந்து கொண்டதற்காக அவருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று சரத் பவார் கூறினார்.
இதையும் படிங்க: டெல்லி முதல்வரானார் ரேகா குப்தா..! 6 கேபினட் அமைச்சர்களும் பதவியேற்பு..!